உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தெய்வீகக் கவிஞர் பெருமான் திருத்தகு சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் என்றாலே உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பொங்கி எழும். வெண் சொல்லும், நுண்பொருளும் அமைந்து கற்போர் கேட்போர் அனைவரையும் ஒருங்கே பிணிக்கும் மாண்பு மிக்கது; கற்றோர்க்கும், கல்லாதார்க்கும் ஒரு புத்தமுதாய் ஒன்பான் சுவையும் ஊறிப் பெருகுவதாய் அமைந்துளது. தொட்டனைத் தூறும் மணற்கேணி போலக் கற்குந் தொறும் புதிய புதிய கருத்துக்களைத் தோற்றுவித்து அறிவை வளர்க்கும் இயல்பு வாய்ந்தது. அழிவின்றி உலகில் நிலைத்து நிற்கும் பெருமை மிக்கது.

தெய்வீகத் தன்மை வாய்ந்த இயற்கைக் கவிஞர் பெருமானாகிய பாரதியார் பாடியருளிய பாடல்களுள் குயிற் பாட்டும் ஒன்று. அது கற்பனைக் கவியாகவே இருப்பினும், உண்மையாகவே நிகழ்ந்த கதைபோன்று காட்சியளிக்கின்றது. அகப்பொருட்டுறைகளும், புறப்பொருட்டுறைகளும் விரவி வரப் பாடியிருப்பது வியந்து பாராட்டுதற்குரியது. வேதாந்தம் பொருளையே காதற் களஞ்சியமாக அமைத்துப் பாடியுள்ளது கவிஞர் பெருமானுக்கு வேதாந்த நூல்களிலும் மிக்க பயிற்சி உண்டு என்பதைக்