பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

11

களையும் வழங்கி, பெண்ணை அடிமையாகவே கருதும் நிலையில், அறம் சார்ந்த நெறிகளும்கூட விதிக்கப்பட்டன.

குழந்தை மணம், சதி, கைம்பெண் கொடுமை, போன்ற கூறுகள் அந்த நெறிகளின் விளைவே.

குழந்தை மணத்தின் நோக்கங்கள் இரண்டு : ஒர் ஆடவனின் வாழ்வுக்கு இன்றியமையாத பெண்ணை முன்னதாகவே நிச்சயித்துக் கொள்ளும் வாய்ப்பு; அந்தப் பெண்ணுக்கு விவரம் தெரியாப் பருவமாக இருப்பதனால், இளமையிலேயே மனதைத் திருமணப் பந்தத்திலும், அடங்கிய நெறிகளிலும் பிணித்து விடுவது சாத்தியமாகிறது.

இதனால் ஆணுக்கு எந்தவிதமான இழப்பும் துன்பமும் இல்லை. ஏனெனில் அவன் எப்போதும் சுதந்தரமானவன்; கல்வி கேள்விகளில் தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றவன். அவன் கிராமத்திலிருந்து பொருள் தேடவோ, உயர் கல்வி கற்கவோ செல்லும்போது அங்கு தன்னிச்சையாக வாழ்வதில் தடையேதும் இல்லை. இன்பத்துக்காக வேறு மகளிரை நாடலாம்; இன்னொரு மணம் புரிந்தும் வாழ்க்கை நடத்தலாம். ஆனால் கிராமத்தில், திருமண பந்தத்தில் பிணிக்கப் பெற்று, சதி என்ற நெறிகளின் கூட்டுக்குள் உயிர் வாழும் பெண், அந்த நாயகனை நினைந்தே உருக வேண்டும். வடமாநிலங்களில் குழந்தை மணங்களும் அதன் விளைவுகளும் இன்றும் இயல்பாகவே இருக்கின்றன.

கைம்பெண் கொடுமையே, குழந்தை மணங்களின் காரணமாக, வெகு முனைப்பாகச் சமுதாயத்தில் புரையோடியிருந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறுவனான கணவன் இறந்துவிட்டால், கன்னி கழியாத சிறுமி