பக்கம்:புது டயரி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

புது டயர்


“வேண்டாம், வேண்டாம். அந்த இரண்டு குடையை ரிப்பேர் பண்ணு. நாளைக்கு வந்து மற்றவற்றைப் பார்க்கலாம்” என்று சற்றுக் கடுமையான தொனியோடு சொன்னேன்.

அவன் பேசாமல் ஒரு குடையை எடுத்துப் பிரித்தான். “இங்க பாருங்க, இதிலே ரெண்டு கம்பி ஒடைஞ்சிருக்குங்க. ஒடைஞ்ச கம்பி குத்தித் துணி கிளிஞ்சிருக்குங்க, மத்தக் கம்பிக எப்படியோ?” என்று சொல்லி ஒரு கம்பியை இழுத்தான் அது படக்கென்று உடைந்துவிட்டது.

“என்னப்பா இது இன்னொரு கம்பியையும் உடைத்து விட்டாயே! உன்னை ரிப்பேர் பண்ணச் சொன்னேனா? ஒடிக்கச் சொன்னேனா?” என்று கத்தினேன். என் குரலைக் கேட்டுவிட்டு உள்ளிருந்து என் மனைவி வந்து விட்டாள். “என்ன என்ன?”என்று கேட்டாள்.

“இங்க பாருங்கம்மா. அடாஸ் கொடை இது. ஒரு கம்பியைத் தொடறபோதே ஒடிஞ்சு போச்சு. ஏற்கனவே ஒடிஞ்ச கம்பி ரெண்டு. அதை ரிப்பேர் பண்ணிக் குடுத்த பெறகு எசமான் எடுத்துப் பிரிச்சா இந்தக் கம்பி ஒடைஞ்சுடும். அப்ப என்ன சொல்வாரு இந்தப் பாவிப் பய நம்ம ஏமாத்திட்டாம்பாரு. நல்ல வேளை! நான் தொட்டேன். ஒடிஞ்சுட்டுது. இப்ப மூணு கம்பியையும் போட்டுத் துணியைத் தைக்கணும்.”

என்னிடமிருந்து பொறுமை ஓடிவிட்டது. “ஏ கிழவா நீ ரிப்பேர் பண்ணினது போதும். எல்லாவற்றையும் வைத்துவிட்டுப் போ” என்று இரைந்தேன்.

“ஐயாவுக்குக் கோபம் ரொம்ப வருது. சரி, இந்தக் கொடையை ரிப்பேர் பண்ணித் தர்ரேன். துணி தைக்கனும் கம்பி வெலை ஏறிப் போச்சு, இரும்பு ஜாமானெல்லாம் ஆகாசமட்டும் வெலை ஏறிடுத்துங்க.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/25&oldid=1149417" இலிருந்து மீள்விக்கப்பட்டது