பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-10-


கச் செய்யும் இந்த மறவரலாற்றின. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய

நரம் பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின் உண்டவென்
முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவங் தனளே."

என்னும் புறநானூற்றுப் பாடல் புகழ்கிறது. மகன் எப்படியோ தப்பிப்பிழைத்துக்கொண்டானே என்று மகிழக் கூடியவர்களே பெரும்பாலராக உள்ள இவ்வுலகில், மகன் போர்முனையிலிருந்து உயிர்பிழைத்து ஓடி விட்டான் என்பதைக் கேட்ட அந்தக் கிழவியானவள், மகிழ்வதற்கு மாறாக, அவ்விழிமகனுக்குப் பாலூட்டிய என் மார்பகத்தை அறுத்தெறிவேன் என்று சினங்கொண்டாளாம். பாடலிலுள்ள 'சினைஇ' என்னும் சொல் ஈண்டு எண்ணத் தக்கது. உடனே வாள் எடுத்துக்கொண்டு. கூழ் துழவுவது போல் குருதியோடும் போர்க்களத்தையே ஒரு துழவு துழவினாளாம். ஈண்டு, 'செங்களம் துழவுவோள்' என்னும் பாடல்தொடர் நெஞ்சையள்ளுகிறது. உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த மகனைக் கண்டதும், ஒப்பாரி வைப்பதற்கு மாறாக உவகை யெய்தினாளாம். இவண் பாடலிலே 'உவந்தனள்' என்று எழுதியதோடு ஆசிரியர் நிறைவு கொள்ளவில்லை. உவகை சிறிதளவு இல்லையாம்; பெரிய அளவிலாம்; எனவே பெரிதுவந்தனள்' என்று எழுதினார். ஆசிரியர் அம்மட்டோடும் அமைய வில்லை. பெரிய உவகை என்றால் எதைவிடப் பெரிய