உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியக் கவிஞர் வாலியின் 'அந்த நாள் ஞாபகம்’

பாராட்டுரை

'மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். - இந்த தலைப்பே எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. தலைப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் இருப்பிடம், மெய்யாலுமே மக்கள் நெஞ்சம் தான்் என்பதற்காக.

நூலாசிரியர் புலவர் திரு. என். வி. கலைமணி, எழுத்துத் துறையில் பன்னெடுங்காலம் அனல் பறக்க எழுதியவர். தமிழ் சுடும் என்பதை, வரிக்கு வரி அவர் ஏற்றிய வெப்பத்தால் வியர்த்துப் போன பல உள்ளங்கள் அறிய காரணமாயிருந்தவர்.

இந்த நூலைப் படித்த பிறகுதான்் திரு. கலைமணி, எழுத்தில் அனலாகவும், இதயத்தில் புனலாகவும் இருப்பதை நான் அறியலானேன்.

இந்த நூலுக்கு என் மதிப்புரையை பெற, அவர்

விரும்பியதன் நோக்கம் - ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள்

திரு. எம்.ஜி.ஆரோடு நான் தொழில் ரீதியாக நிரம்ப சம்பந்தப் பட்டிருந்தேன், என்பதாக இருக்கலாம்; அது உண்மையும் கூட.

ஆயினும், நான் பழகிப் பார்த்த அளவில், என் வணக்கத்திற்குரிய பொன்மனச் செம்மல், அரிதாரத்திற்கு அப்பாற்பட்ட அவதாரமாகவே காட்சியளித்தார். அவர் கை 'உடுக்கை இழந்தவன் கை' என்பதை, நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் உடனிருந்து பார்த்தவன்.

இந்த நூலில், எனதருமை அண்ணன் திரு. எம்.ஜி.ஆர். அவர்களது அனைத்து சிறப்புகளும், அழகு தமிழில், உவமானம் - உவமேயங்களோடு, பக்கத்திற்கு பக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.