4
பத்மா பேசி முடிக்கவில்லை. அதற்குள் புஷ்பா கத்தினாள்: 'அது சரி பத்மு. உனக்கு ஏன் இந்தக் கோளாறான கருத்து? எல்லோரையும் போல........
'அதிலே என்ன சிறப்பு இருக்கு? ஆயிரத்தோடு ஆயிரத்தொண்ணு என்று எல்லாரும் வாழப் போய்க் தான் இந்த ஆண்கள் சூரப்புலிகள் மாதிரி ஜம்பம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். என்னை மாதிரிப் பலபேர் தேவை' என்று உறுதியாக மொழித்தாள் பத்மா.
'உன்னை மாதிரிப் பெண்களே நினைவில் நிறுத்தித் தான் நீட்ஷே சொல்லியிருப்பான் போலிருக்கு -பெண்களை அணுகும் போது கையிலே சவுக்கு, எடுத்துக்கொண்டு போ என்றானாம். பெண்களுக்கு, கசையடி தான் தேவையாம். இதைச் சொல்லி விட்டு கிண்கிணிச் சிரிப்பைக் காற்றில் கலக்க விட்டாள் புஷ்பா.
'அவன் கெட்டான் பைத்தியக்காரன். அவன் திமிரை ஒடுக்க ஒரு நீட்ஷி இல்லாமல் போனாள் போலும்!
'நீட்ஷியா ராட்க்ஷஸியாடீ?'
'கிடக்கிறது பத்மா. காதலைப் பற்றி நீ என்ன தான் நினைக்கிறாய்? காதல் என்பதிலேயே உனக்கு நம்பிக்கை கிடையாதா?’ என்று வினவினாள் தேவகி.
பத்மா கர்வமாகத் தலை நிமிர்த்தி 'காதலாவது ஹூம்ப்' என்று முகத்தைச் சுழித்தாள். காதல் கீதல் என்கிறதெல்லாம் இந்த ஆண்களின் பைத்தியக்காரத்தனம், அசட்டுத்தனம், மனக்கோளாறு, வெறித்தனங்களை மூடி மறைக்க உபயோகப்படுகிற கவித்வமான ஒரு போர்வை. அவ்வளவுதான்.