பக்கம்:முருகன் அந்தாதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

முருகன் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்று, குன்றுதோறாடல் என்பது. ‘குன்றுதோறாடல் மேவு முருகன்’ என்று சொல்லிப் போற்றினர் முந்தையோர். தலங்களை மட்டும் குறிக்கும்போது பல குன்றுகள் என்று சொல்வதே முறை. ஆனாலும் இப்போது குன்றுதோறாடல் என்பதே பல குன்றுகளையும் குறிக்கும் தொடராக வழங்குகிறது.

குன்றுதோறாடலென்று பாராட்டத்தகும் குன்றுகள் பலவற்றில் மருதமலை என்பதும் ஒன்று, இது கொங்கு நாட்டில் கோயம்புத்தூருக்கு வடமேற்கே ஏறத்தாழ ஏழரை மைல் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைச்சரிவில் உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் முருகன் கண்ணைக் கவரும் வடிவும் கருதுவார் வேண்டுவனவற்றை அருளும் கருணையும் உடையவன்.

இந்தத் தலத்தைப்பற்றிய பெருமைகளைக் கச்சியப்ப முனிவர் தாம் இயற்றிய பேரூர்த்தல புராணத்தில் இரண்டு படலங்களில் கூறுகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றுவகைச் சிறப்பும் ஒருங்கே பொருந்தியுள்ள இத்தலத்திற்கு அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒன்று உண்டு. இவற்றையன்றி வேறு புலவர் பெருமக்கள் இத்தல சம்பந்தமாகப் பிரபந்தங்களையும் பாடல்களையும் இயற்றியிருக்கிறார்கள்.

முருகப் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள வேல் இங்கே மருத மரமாக விளங்கியதால் இதற்கு மருத மலை என்ற திருநாமம் உண்டாயிற்று. பாம்பாட்டி சித்தர் யோக சமாதியில் இருந்த இடம் இது என்று கூறுவர். கோவைமா நகர மக்கள் இங்கே திரள் திரளாக வந்து கிருத்திகை முதலிய விசேஷ நாட்களில் வழிபட்டுத் தம் வேண்டுகோள் நிறைவேறப்பெறுகிறார்கள்.