பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க “துலுக்காணியம்” என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் கோநகராகக் கொண்டு ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை “துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.[1] காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை “துலுக்க அவாணம்” “துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது.[2] இன்னும், “துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[3] துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன. இன்னும் “துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு” என்ற சொல் கூட கையாளப்பட்டுள்ளது. திருவீழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டூழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.

“ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல
வீழித்துலுக்கு வந்துற்றதே ... ... ...”[4]

என்பது அந்தக் கவியின் பகுதியாகும்.

இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு” என்று மருவி பிற்காலத்தில் “மலுக்கு” என்று கூட பிரயோகம் பெறிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இன்னும், இந்த “துருக்கர்”, “துலுக்கர்” என்ற சொற்களை வேராகப் பெற்று பல புதிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளன

அவை யாவன :


  1. மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு)
  2. A. R. 587 / 1902
  3. தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி I.L.R. 52, திருவொற்றியல்.
  4. பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638