உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9

வந்தான். அவன் அரசிலே ‘இம்’ என்றால் சிறைவாசம், ஏனென்றால் தலைகளது நாசம் என்று நாளுக்கு நாள் காட்டாற்று வெள்ளம் போலக் காட்சி தந்தன.

பேய் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று பாரதி பாடியதற்கு ஏற்றவாறு; ஜார் என்ற கொடுங்கோலன் பேயாவான்! சாத்திரங்கள் என்ற அதிகார வர்க்கங்கள் மக்களைப் பிணமாகத் தின்னும்!

உழுகிறவர்கள் உணவுக்காக ஊர் ஊராய் அலைந்தார்கள்; தவித்தார்கள்; தொழிலாளர் பெருமக்கள் விலங்குகளை விடக் கேவலமாகக், கண்டதை தின்று பசியோ பசி என்று பராரியாய் வாழ்ந்தார்கள்.

ஏழை, நடுத்தர மக்களின் இந்த இழிவு நிலைக்கு இரங்கி, மனித நேயத்தோடு ‘உணவு கொடு வேலை கொடு, வசிக்க வீடுகொடு’ என்று மக்கள் போராட ஆரம்பித்தால், அவர்கள் ‘கில்லெட்டின்’ என்ற கோரக் கொலைக் கருவிக்குத் தங்களது தலைகளைப் பலிகொடுக்கும் நிலை; அல்லது தூக்கிலே தொங்கித் துடி துடித்துச் சாகும் நிலை அல்லது சோவியத் மண்ணை விட்டே நாடு கடத்தப்பட்டும், துரத்தப்பட்டும் ஓடுவார்கள்! அவ்வளவு அராஜகத்தோடு அந்த ஆட்சி நடைபெற்று வந்தது.

இவை போன்ற கோர வாழ்க்கைக்கு இடையே, ருஷிய மக்கள் பஞ்சத்திலும் நோய்களிலும் சிக்கிப் பல தவித்தார்கள். ஆனால், அரண்மனை எடுபிடிகளிலே இருந்து அரசு அதிகாரிகள் வரை, ஆஷாடபூதி ரஸ்புடீனிலே இருந்து அரசனுக்குக் குற்றேவல் புரிபவர்கள் வரை ஏகபோகமாக எக்காளமாக, சுகபோகிகளாக வாழ்ந்து வந்தார்கள். இந்தச் சூழ்நிலை நீடித்துக் கொண்டிருந்த நேரத்திலேதான் மனிதாபிமானியான டால்ஸ்டாய் ருஷ்யாவிலே பிறந்தார்.