வல்லிக்கண்ணன்
மணிக்கொடி எழுத்தாளர்களில் ந. பிச்சமூர்த்தி. கு.ப. ராஜ கோபாலன், பெ.கோ. சுந்தரராஜன் (சிட்டி ஆகியோரின் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்குக் கிட்டியிருந்தன. மணிக்கொடி யினாலும் மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகளாலும் எழுத்து,ஊக்கம், பெற்றிருந்த, லட்சியக் கனவுகள் கண்ட இளைய தமிழர்கள் பலரது உற்சாகமான ஒத்துழைப்பும் கலாமோகினிக்கு என்றும் கிடைத்துக் கொண்டிருந்தது.
முதல் இதழிலிருந்து கடைசியாக வெளியான இதழ் முடிய, எழுத்தாளர் படத்தையே அட்டைச் சித்திரமாக வெளியிட்டு, அவர்களைப் பற்றி இவர் நம் அதிதி என்று உள்ளே அறிமுகம் செய்து, தனியானதொரு இலக்கியப் பத்திரிகை எனப் பெருமை பெற்றது கலாமோகினி.
க.நா. சுப்ரமண்யம், எம்.வி.வெங்கட்ராம் ஆகிய மணிக்கொடி எழுத்தாளர்கள் கலாமோகினிக்கு நிறையவே எழுதி உதவினார்கள். கரிச்சான்குஞ்சு ராதாராயணஸ்வாமி, ஸ்வாமிநாத ஆத்ரேயன், வல்லிக்கண்ணன் போன்ற அக்காலத்திய இளைய எழுத்தாளர் களின் படைப்புகள் கலாமோகினி மூலம் ரசிகர்களை அடைந்தன. கலைவாணன் க.அப்புலிங்கம்), சாலிவாஹனன் கவிதை களும், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் வசனகவிதைகளும் பத்திரிகைக்கு வளம் சேர்த்தன. வசனகவிதை பற்றிய விளக்கக் கட்டுரைகள் பிரசுரமாயின.
வி.ரா.ராஜகோபாலன் நல்ல கவிஞர். கதைகளும் நாடகமும் எழுதும் ஆற்றல் உடையவர். பழந்தமிழ் இலக்கிய ஞானம் பெற்றவர். அவரது இச்சிறப்புகள் பத்திரிகைக்கு உயிர்ப்பு ஊட்டி வந்தன. -
லட்சியத் துடிப்பு கொண்டிருந்த வி.ரா.ரா. தனக்குக் குற்றம் எனத் தோன்றியதை - அது எவர் செய்ததாக இருந்தாலும்அஞ்சாது கண்டிக்கும் துணிவு பெற்றிருந்தார். அவருடைய இந்தப் பண்பு கலாமோகினிக்குத் தனிவேகம் சேர்த்துக்கொண்டிருந்தது. அவர் எழுத்துக்களில் உண்மையின் வேகத்தோடு, குத்துகிற பரிகாசமும் நளினமான நகைச்சுவையும் கலந்து மிளிரும்.
கலாமோகினி தீவிரமான இலக்கியப்பணிபுரியும் கடமையை மேற்கொண்டிருந்தது. அதனால் மறுமலர்ச்சி இலக்கிய முன்னணி என்று பெருமையோடு தன்னைக் குறிப்பிட்டு வந்தது. எனினும், பல சோதனைகளையே அது அனுபவித்துச் சிரமப்பட்டது. 1946 மத்தியில் கலாமோகினியின் இலக்கியப்பணி ஓய்ந்தது.
மணிக்கொடிக்குப் பிறகு மறுமலர்ச்சி இலக்கியப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மற்றொரு பத்திரிகை கிராம ஊழியன்’ என்ற பத்திரிகை (மாதம் இருமுறை) ஆகும்.