மூக்கபிள்ளை வீட்டு விருந்து 23
மூக்கபிள்ளை வீட்டில் விசேஷம் என்று எதுவும் வந்ததில்லை. இனிமேல் செய்வதற்கு வாய்ப்பும் இல்லை.
'நம்ம வீட்டில் கல்யாணம் கார்த்திகை ஆண்டு நிறைவு சடங்கு என்று எதுவும் நடக்கப்போவதில்லை. பெண்டாட்டிக்காரி இருந்தா, போன வருசம் நமக்கு அறுபது வயசு நிறைஞ்சதுக்கு சட்டிப்பரிதி (சஷ்டியப்தபூர்த்தி) கொண்டாடியிருக்கலாம். அதையே ஒரு கல்யாணம் மாதிரி நடத்தி ஜாம் ஜாம்னு ஊரை அழைச்சுச் சாப்பாடு போட்டிருக்கலாம்.
காலையிலே இட்லி பலகாரம் மத்தியானம் பாயசம், வடையோடு சாப்பாடுன்னு தடபுடல் பண்ணியிருக்கலாம். அதுக்குத்தான் கொடுத்து வைக்கலியே! இப்படி இருக்கையிலே ஊர் வழக்கத்தை மட்டும் வாங்கிக்கிட்டேயிருந்தால் என்ன அர்த்தம்? ஊருக்கு நாமளும் செய்யிறதா இருந்தால், சரீன்னு சொல்லலாம். அதுதான் இல்லைன்னு ஆயிட்டுதே! அப்புறம்? என்று அவர் 'நெஞ்சோடு கிளத்தல்' பண்ணினார்.
உறுத்திக் கொண்டே இருந்த மூக்கபிள்ளையின் மனசாட்சி, பரிகாரமாக ஒன்று செய்யவேண்டும், ஊருக்கு நாமும் சிறிது பணம் செலவு பண்ணிக் கடனை தீர்க்கணும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
- என்ன செய்யலாம்.
- மிட்டாய் கடையிலே ஸ்வீட், காரம் வாங்கி வந்து, பங்கு போட்டு 'ஊர்வழக்கம்' மாதிரி எல்லா வீடுகளுக்கும் சப்ளை பண்ணி விடலாமே! - .
'செய்யலாம்தான். ஆனா என்ன காரணத்தை சொல்லி வழங்குவது? நம்ம விவகாரமெல்லாம் தான் எல்லாருக்குமே தெரியுமே சும்மானாச்சியும் அர்த்தம் இல்லாமல் இப்படிச் செய்தால் யார் வாங்கிக் கொள்ளுவாங்க? நூறுகேள்வி கேட்டு இல்லாத நொள்ளாப்பு பேசி திருப்பி அனுப்பிவிடுவாங்களே. சிவபுரம் ஆசாமிகள், லேசுப்பட்டவர்களா? என்றும் அவர் எண்ணினார்?
- அப்படியானால்?
அவருக்கு 'திடீர்னு ஒரு ஐடியா' உதயமாயிற்று. ஊரை அழைத்து ஒரு விருந்து கொடுக்கலாம். சித்திரா பெளர்ணமிச் சிறப்பு விருந்து என்று காரணம் கூறலாம். சித்திரா பெளர்ணமி எல்லோருக்கும் முக்கியமான நாள். அன்று நயினார் (சித்திரபுத்திர நயினார்) நோன்பும் கூட. பெளர்ணமியின் போது உல்லாச விருந்து உண்பது மக்களுக்கு பிடித்தமான விஷயம்.