பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 வல்லிக்கண்ணன் கதைகள்

'இதென்ன புது வழக்கம்? எப்பவும் போலே வாங்கி வையுங்க. பலகாரமெல்லாம் தினுசு தினுசாயிருக்கு சும்மா சாப்பிடுங்க. நான் வேணும்னா காப்பி போட்டுத் தரட்டுமா? என்றாள் அதைக் கொண்டு வந்தவள். அவள் கொஞ்சம் வாயாடி.

அங்கே அப்படி, இங்கே இப்படி என்று வாயடி அடித்து, கொண்டு வந்ததை அவருக்கே விட்டு விட்டு போனாள்.

அதுமுதல் அவர் மனம் அரித்து கொண்டேயிருந்தது.

- இதெல்லாம் 'வட்டி இல்லாக் கடன்' என்பாக. இப்ப ஒருத்தர் செய்தா, மற்றவர் பிறகு எப்பவாவது திரும்பச் செய்யனும். அவர் இல்லாவிட்டாலும், அவர் பேரை சொல்லி அவருடைய மகனோ மகளோ பேரப்பிள்ளைகளோ செய்வாங்க. எதுவுமே செய்யாத என் போன்றவர்கள் - நானாக எதுவும் ஊருக்குச் செய்யப் போவதில்லை எனக்குப் பிறகு என் பேராலே செய்றதுக்கும் யாருமில்லை. அப்படி இருக்கையிலே ஊர் வழக்கங்களை வாங்கி அனுபவிப்பது எப்படி நியாயம் ஆகும்?...

- ஒருத்தர் இல்லாவிட்டால் இன்னொருவர் எப்பவாவது பழிச்சொல் உதிர்ப்பாங்க. பொம்பிளைகள் சில சமயம் வசையாப் பேசுறதும் வழக்கமாகத்தானே இருக்கு நாங்க அதைச் செய்தோம், இதைசெய்தோம் ஊர்க்காரங்க வயணமா வாங்கிச் சாப்பிட்டாங்க. இந்த ஊரு எங்களுக்கு என்ன செஞ்சுதுயின்னு நீட்டி முழக்குவாங்க...

- சிலபேரைப் பற்றி சில சமயங்களில் அநேகர் பேசுவது உண்டே! ஊர் சாப்பாடுன்னு சொன்னா பந்திக்கு முந்தி வந்திருவான் வாய்க்கு ருசியா வழிச்சு வழிச்சுத் தின்பான். ஒரு கல்யாண வீடு கருமாதி வீடு எதையும் விட்டுவிடமாட்டான். அவன் வீட்டிலே இதுவரைக்கும் எந்த விசேஷமும் செய்ததில்லை. யாருக்கும் சாப்பாடு போட்டதில்லே. என்னத்தை செய்யப்போறான்? அப்படியே செய்தாலும், ரொம்பச் சுருக்கமாச் செய்து ஊர்ச்சாப்பாடு போடாம ஒப்பேத் திடுவான்.

இப்படி நினைக்க நினைக்க மூக்கபிள்ளையின் மனம் சங்கடப்படலாயிற்று.

‘என்னைப் பத்தியும் நாலு பேரு நாலைச் சொல்லத்தானே செய்வான்? இப்பவே யார் யாரு என்னென்ன பேசுறாங்களோ?’ என்று முணுமுணுத்தார் அவர்.