இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
வரையிலுள்ள ஒரு இடத்தில் எங்கேனும் வைத்து தனி அடி எடுக்கின்ற வாய்ப்பைப் பெறுவர்.
இவ்வாறு தனி அடியாக ‘முனை அடி’ அடிக்கும் வாய்ப்பை எதிராளிகள் பெற்று ஆடுகின்ற பொழுது எல்லோரும் எங்கெங்கு நிற்க வேண்டும் என்பது விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. அதனை நன்றாக உணர்ந்தால்தான் நேரிடவிருக்கும் தவறிலிருந்து தப்பிக்க முடியும்.
முனை அடியை எதிராளி ஒருவர் அடிக்கும்பொழுது தடுக்கும் குழுவைச் சேர்ந்த 6 ஆட்டக்காரர்கள் தங்கள் கால்களும் கோல்களும் கடைகோட்டிற்குப் பின்னால் இருக்குமாறு முதலில் நிற்க வேண்டும்.
மீதியுள்ள 5 தடுக்கும் குழு ஆட்டக்காரர்கள் அனைவரும், நடுக்கோட்டிற்கு (Centre-line) அப்பால் நிற்க வேண்டும்.
அதுபோலவே, தாக்கும் குழு ஆட்டக்காரர்கள் முனை அடியை எடுப்பவரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் அடிக்கும் வட்டத்திற்கு வெளியே இரண்டு கால்களும் கோல்களும் இருக்குமாறு தயாராக நின்று கொண்டிருக்கவேண்டும்.
முனை அடிக்கு முன், ஆட்டக்காரர்கள் நிற்கும் நிலையை உணர்ந்து கொண்டதுபோலவே, முனை அடிக்க எடுக்கும் பொழுது, எவ்வாறு எல்லோரும் தவறின், விளையாட வேண்டும், தவறிழைத்தால் தண்டனை என்ன என்பதையும் ஐயமற அறிந்து கொள்வது அவசியமாகும்.