உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இந்தப் போக்கினால், ஆணுக்கு அதிகச் செலவு, மண முறிவு, பெண்ணுக்குப் புதிய தொல்லைகள், பொறுப்பற்ற தனத்தினால் விளையும் தீங்குகள், குழந்தைகளின் வளர்ப்பில் மோசமான நிலைமை, குழந்தை மனப் பண்பு பாதகமடைதல் முதலிய எவ்வளவோ கஷ்ட,நஷ்டங்கள் உண்டாகின்றன. இவற்றை நாகரிக சமுதாயம் உணர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் அதிகமாக விவாக ரத்துகள் நடப்பதற்குக் காரணம், அவர்களது பொறுப்பற்ற தனமும், புதுமை மோகமும் மாத்திரம் அல்ல. சட்டமும் துணை புரிகிறது என்றே சொல்ல வேண்டும்.

அங்கு, விவாக ரத்து கோருவோர், கணவனாக இருந்தால், மனைவி தனக்குத் துரோகம் செய்து விட்டாள் என்று சாட்சியத்துடன் மனுச் செய்து கொண்டால் போதும். அத்துடன், அவளுக்கு ஒரு தொகையைக் கொடுத்து விடவும் தயாராக இருக்க வேண்டும். மனைவி விவாக ரத்து வேண்டினால், அவளும் அவ்விதமே செய்ய வேண்டும்.

விவாக ரத்து பெற விரும்புகிறவர்களுக்கு, உதவி புரிவதற்காகவே கூலிக்கு காதல் நடிப்பு நடிக்கக் காத்திருக்கும் ஆண், பெண்கள் அதிகப் பேர் இருக்கிறார்களாம் அமெரிக்காவிலே. முன் ஏற்பாட்டின் படி, புரபஷனல் காதலி, கணவனோடு அவனது படுக்கையறையில் காணப்படுவாள். அவ்விருவரும் அங்கிருப்பதை நண்பனோடு, அல்லது சினேகிதியோடு, வரும் மனைவி பார்த்து விடுவாள். உடனே விவாக ரத்து மனுச் செய்தல்தான். மனைவி புரபஷனல் காதலனோடு, படுக்கையறையில் இருப்பதைக் காண்கிற கணவன் விவாக ரத்து கோரிப் போக வேண்டியதுதானே! இந்த ரீதியில் நாடகமாகி விட்டது. விவாக ரத்து விவகாரங்கள்.