உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

குறை கண்டு கோளாறை நீக்கத் துணை புரியும் நிபுணர்கள் அதிகம் தேவை நாட்டுக்கு நல்லது செய்ய. துறை தோறும் தேவையான திருத்தம் வகுத்து, வழி காட்டுவதற்குத் தகுந்த உளப் பரிசோதனைச் சிந்தனையாளர்கள் எங்கும் வேண்டும்’ எனும் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஏன்? விவாகரத்துக்களைப் போற்றி வளர்க்கிற அமெரிக்காவில் கூட, விவாகரத்தைக் கண்டித்துக் கதைகள், கட்டுரைகள் எழுதுவது அதிகரிக்கக் காரணம் என்ன?

நாகரிகத் தீவிரம், பெண்ணுரிமை மோகம் முதலியவற்றின் பெயரால் வளர்ந்து வரும் விவாகரத்து, உண்மையில் கௌரவமான விபசாரம் எனும் நிலைமையை எட்டி விட்டது அங்கே.

இன்றைக்குக் கல்யாணம்… நாளைக்கு விவாகரத்து… நாளை மறுநாள் வேறொரு கல்யாணம்… அடுத்த நாள் ரத்து… உடனேயே விவாகம் என்ற தலை போகிற வேகத்திலே, விவாகத்தையும், ரத்தையும் நடத்தித் தீர்ப்பது அமெரிக்கத்தனம்!

புருஷன் தூங்கும் போது, அதிகமாகக் குறட்டை விடுகிறான்—அதனால் வேண்டும் விவாகரத்து. அவன் அதிகம் சினிமாப் பார்க்கிறான்… இல்லை, ஊர் சுத்துகிறானா? சரி, பண்ணு விவாகரத்து!… அவன் நல்ல டிரஸ் செய்யவில்லையா?… போ, விவாகரத்து! தான் கேட்டதை வாங்கித் தரவில்லை. ஆகவே, ரத்து!

இப்படித் தும்மினாலும், தூங்கினாலும், குறட்டை விட்டாலும், கோளாறு சொன்னாலும், கோபமாகப் பேசினாலும், பேசா விட்டாலும்— எதற்கெடுத்தாலும் விவாகரத்துதான். இது அமெரிக்கத்தனத்தில் அதிதீவிரமான ஹாலிவுட் மோஸ்தர்.