உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

41

உணர்ந்தாக வேண்டும் அந்த உண்மைகள் என்பவை எவை? உரிமைகள் என்பவற்றிற்கு என்ன விளைவு? விடுதலைக் கனியின் சுவை என்ன? அதன் பரிமாணப் பொருள் எது ? தமிழனுக்கும் அது தேவைதானா? இவற்றை முதலில் விளங்கிக்கொள்வோம்.

மக்களினத்தைப் பொறுத்தவரையில் ஒருண்மையை முதன் முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த மக்களினம் என்றைக்கும் பழக்க வழக்கத்திற்கு அடிமையுற்ற இனமே! இந்தப் பழக்க வழக்கந்தான் நமக்கு அறியாமையாகவும் இருப்பது; அறிவாகவும் இருப்பது. நாம் அறியாத ஒன்றைத் தவறாகவும் அறிந்த ஒன்றைச் சரியாகவும் கருதிவிடுகின்றோம். எடுத்துக்காட்டாக, நாம் கண்டு அறிந்த சிவவடிவம், மால்வடிவம் முதலிய வடிவங்களையே இறைவன் உருவங்கள் என்று நம்புகின்றோம். ஏசுநாதரையும், புத்தரையும் மக்களில் உயர்ந்தவர்கள் என்றே நினைக்கின்றோம். இனி, ஏசுநாதரையும், புத்தரையும் வழிபடுபவர்கள் நாம் வணங்கும் வடிவங்களை இறைவனுடையன என்று ஏற்பதில்லை. இவ்வாறு பழக்க வழக்கமே நமக்கு அறிவாகிறது. நமக்குப்பழக்கமும் வழக்கமும் அல்லாதது அறிவில்லாததாகி விடுகின்றது. இந்த உண்மை நம் எல்லா வகையான இயக்கங்களிலும் ஊடுருவி நிற்கின்றது. இந்த உண்மையின் அடிப்படை நம்மை எங்குக் கொண்டுபோய் விட்டுவிடுகின்றது தெரியுமா? நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ளும் ஓர் அறியாமைப் படுகுழியிலே கொண்டுபோய்த் தள்ளிவிடுகின்றது. எனவே நாம் எதைப் படித்தாலும், எதை எண்ணினாலும் நம் பழக்க அடிமைத்தனத்தினின்று விடுபடவே மறுத்து விடுகின்றோம். இந்த அமைப்பின் புறச் செய்கையாகத்தான் நாம் அரசியல் அமைப்பிலிருந்தும் குமுகாய அமைப்பிலிருந்தும் நம்மை முன்னோக்கிக்கொண்டு செலுத்த முடியாமல் அழுந்திப்போய் விடுகின்றோம். இதனாலேயே விடுதலையுணர்வு என்று நாம் கேள்விப்பட்டவுடன் நாம் உழைக்காமல் உண்டுவிட முடியுமா? பாய் போடாமல் படுத்துக்கொள்ளமுடியுமா? என்றெல்லாம் கற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றோம். அரசியல் தலைவர்களும் நம் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலையுணர்வையும், உரிமை எய்துவதையும் நம் கண்பார்வைக்கும் காதுப்பறைக்கும் தக்க படியான கோணங்களில் - பரிமாணங்களில் உருவாக்கிக் காட்டுகின்றனர். ஆனால் விடுதலை என்பது என்ன?

அதுதான் ஒவ்வொரு மாந்தனின் உயிர்ப்பயன்; ஒவ்வோரினத்தின் இயக்க முடிவு. ஒவ்வொரு நாட்டின் இறுதி அரசியல், மொத்தத்தில் உலகின் இறுதிக்கொள்கை, அங்கு நாம் உழைக்கலாம்; உண்ணலாம்!