பக்கம்:வைணமும் தமிழும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

3


பெறும் தெய்வம் திருமாலின் பூர்ண அவதாரமான கண்ணனே என்பது பெறப்படுகின்றது. இவ்வுரிமைத் தலைமை அப் பெருமானுக்கு அமைந்ததற்கு அவனது இறைமைப் பண்புகளே காரணமாகும் என்று கருதலாம்.

மாயோன் மேய மன்பெறுஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ் பூவை நிலையும்

[1]

என்ற நூற்பா 'பூவை நிலை' என்ற புறத்திணையினை விளக்குவது. இதனை மாயோனுடைய காத்தற் புகழை மன்னர்க்கு உவமையாகக் கூறும் ‘பூவை நிலை’ என்று விளக்குவர் நச்சினார்க்கினியர். மேலும் அவர்,

கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்

[2]

என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டுவர். இப் பாடலில் பலதேவனும் திருமணி (திருமறு-ஶ்ரீவத்சம்) யையுடைய திருமாலும் வருதலைக் காணலாம். பலதேவனைத் தமிழ்நூல்கள் நம்பிமூத்தபிரான் என்று குறிப்பிடும்.

தொல்காப்பியத்தில் இன்னொரு குறிப்பும் உண்டு. அந்நூல் எழுவதற்கு முன்பே கண்ணபிரானைப் பரதெய்வமாகக் கொண்டு அப்பிரானது குழவிச்செயல்களில் தமிழ் மக்கள் ஈடுபட்டு வந்தனர் என்பதே அக்குறிப்பு. மானிடனாகிய பெண்மக்கள் அவ்வினத்து ஆண்மக்களிடமும்


  1. புறத்திணை-5. (இளம்) 53
  2. புறம்-56