Siva Temple Architecture etc./திராவிட சில்பம்

விக்கிமூலம் இலிருந்து

திராவிட சில்பம்

இனி திராவிட சில்பத்தைப்பற்றி ஆராய்வோம். திராவிட சில்பமென்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் ஜாதியார்களாகிய திராவிடர்களுடைய சில்பமாகும். இந்த சில்பமானது ஏறக்குறைய தென் இந்தியாவில் - அதாவது விந்திய பர்வதத்திற்கு தெற்கிலுள்ள பிரதேசத்தில்-வழங்கப்பட்டதாகும். திராவிட சில்பம் தென் இந்தியாவில் சுயமாய் ஏற்பட்டது என்று சிலர் எண்ணுகிறார்கள். கருங்கல்லாலாகிய திராவிட சில்பம் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து கற்றது என்று சிலர் கூறுகின்றனர்; இதற்கு அத்தாட்சியாக எகிப்தில் தீப்ஸ் நகரத்தில் ஆமான் (Aman) கோயிலுக்கும், இந்தியாவில் பம்பாய்க்கடுத்த கோயில்களில் பல தூண்கள் அமைந்த மண்டபங்களுக்கும், திராவிட கோயில்களிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கும், ஒற்றுமை யிருப்பதைக் காட்டுகின்றனர். அன்றியும் எகிப்தில் பைலே (Philae) என்னும் நகரத்திலுள்ள கோயிலிலுள்ள தூண்கள் இந்தியாவில் பம்பாய்க் டுத்த யானைக்குகைக் கோயிலிலும், எல்லோரா கோயில்களிலுமுள்ள தூண்களைப்போலவே இருப்பது எடுத்து காட்டப்படுகிறது. எகிப்து தேசத்திலுள்ள ஆபிலிஸ்க் (Obelisk) லிங்க்வடிவாயிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. மாமல்லபுரத்து கடற்கரைக் கோவிலிலுள்ள சிகரத்தைப்போல், எகிப்து தேசத்தில் சில இருப்பதும் ஆராயத்தக்கது. இந்த ஆராய்ச்சியில், கிப்பன் (Gibbon) எனும் உலக பிரசித்திபெற்ற சரித்திரக்காரர், எகிப்து தேசத்திற்கும் தென் இந்தியா மலையாள தேசத்திற்கும், இலங்கைத் தீவிற்கும், ஆதிகாலத்தில் போக்குவரத்து இருந்ததாகக் கூறியது கவனிக்கத்தக்கது

இராமாயண இதிகாச காலத்தில் தென்னிந்தியாவைச் சார்ந்த விடங்களில் கோயில்களும், கோபுரங்களும் இருந்தனவென்று நாம் கூறலாம். கோபிநாதராயர் அவர்களும் இப்படியே எண்ணுகிறார். அவைகளெல்லாம் மரத்தாலானவை என்றும் ஊகிக்கலாம் (ஆகவே ஹநுமான் ஒரு  நாளில் லங்கையைக் கொளுத்தினர் என்று கூறியிருப்பது ஆசாத்தியமான காரியமல்ல!)

பௌத்த ஜைன ஆலயங்கள் சென்னை ராஜதானியில் ஆதிகாலத்தில் இருந்தன என்பதற்குச் சந்தேகமில்லை; மணிமேகலை முதலிய பூர்வீக தமிழ் நூல்களினின்றும் அக்காலத்தில் சைவ வைஷ்ணவ ஆலயங்கள் இங்கிருந்தன என்று நாம் ஸ்திரமாய்க் கூறலாம். அவைகளுக்குப் பெரும்பாலும் கோட்டங்கள் என்று பெயராம். (தற்காலமும் காஞ்சீபுரத்தில் குமரகோட்டம் எனும் சுப்பிரமணியர் கோயிலிருப்பதை நோக்குக). திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசுகள், முதலிய சைவ சமயாசாரிகள் காலத்திலும் வைஷ்ணவ ஆழ்வார்கள் காலத்திலும், ஹிந்து கோயில்கள் பல இருந்தன் என்பதற்குச் சந்தேகமில்லை. பல நூற்றுக்கணக்கான இக்கோயில்களெல்லாம் பெரும்பாலும், மரத்தாலும், சுண்ணாம்பினாலும், கட்டப்பட்டவை என்று நாம் அறிகிறோம் ; இவைகளெல்லாம் மரத்தாலாகிய திராவிட சில்பப் பகுதியைச் சார்ந்தவை. இவைகளெல்லாம், வெயில், மழை, தீ, முதலியவைகளால் அழிந்துபோக, எஞ்சியவை சுமார் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் பெரும்பாலும் புதுப்பிக்கப்பட்டதற்கு சான்றாக, நமக்கு ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சென்னை ராஜதானியில், செங்கல்பட்டு ஜில்லாவில் இருக்கும், மண்டகப்பட்டி எனும் கிராமத்தில், ஓர் குகைக்கோயிலில் உள்ள கல்வெட்டில், இவ்வாறு கூறப்பட்டுளது- "விசித்திர சித்தனான் நான், பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு என்ற மூன்று மூர்த்திகளுக்கும் கோயில், செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு, இல்லாமலே செய்வித்தேன்" என்று பொருள்படும் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது. விசித்திரசித்தன் என்பது பல்லவ அரசனான் மஹேந்திரவர்மனுடைய மற்றொரு பெயராகும்; இவனது காலம் ஏழாம் நூற்றாண்டு.

மேற்குறித்த மரக் கோயில்கள், எப்படி இருந்தன என்று நாம் உறுதியாக கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், தற்காலம் மலேயாள தேசத்திலிருக்கும், சில மரக் கோயில்களைப் போல்தான் இருந்திருக்க வேண்டுமென்று ஊகிப்பதற்கு இடமுண்டு. இக் கோயில்கள் கருங்கல்லினாலும், மரத்தாலும் ஆன அஸ்திவாரத்தின்மீது, மேற்பாகமெல்லாம் மரத்தால் கட்டப் பட்டவைகளாம். இவைகள், பெரும்பாலும், ஒன்றிற்கு மேற்பட்ட, கூரைகள் உடையவை கூரைகள் வெளியே நீட்டப்பட்டவைகளாயிருக்கின்றன. சுவர்கள் மரத்தாலமைக்கப் பட்டிருக்கின்றன ; அல்லது சுவர்கள் இருக்க வேண்டிய இடங்களில், மரத்தாலாய வேலிகள் போன்ற அடைப்புகள் அமைந்திருக்கின்றன. பௌத்த ஸ்தூபங்களுக்குப் பாதுகாப்பாக, ஆதியில் மரத்தால் செய்யப்பட்டு, பிறகு கருங்கற்களால் அமைக்கப்பட்ட சான்சி (Sanchi) முதலிய இடங்களிலிருக்கும் ரெய்லிங்ஸ் (Railings) என்பவைகளைப்போல் இவைகள் இருக்கின்றன. மலையாள தேசமானது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில், மலைகளால் சூழப்பட்டிருந்தமையால், மற்ற நாடுகளுடன் அதிக போக்குவரத்தின்றி பூர்வீக நாகரிகமானது அப்படியே வளர்ந்துவர இடங்கொடுத்ததென்று கூறுவதற்கு, பல ஆதாரங்கள் உண்டு. ஆகவே அங்குள்ள சில கோயில்கள் பூர்வகாலத்தி லிருந்தபடியே, புதுப்பிக்கப்பட்டு வந்தன என்று நாம் எண்ணக் கூடும்.

ஆதியில் செங்கல் கட்டிடங்களாயிருந்த பல கோயில்கள், கருங்கற்கட்டிடங்களாக மாற்றப்பட்டன வென்பதற்கு நமக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. இதற்கு உதாரணமாக தஞ்சை ஜில்லாவிலுள்ள மேலப்பழுவூர் ஆலயத்தையும், திருக்கோடிக்காவல் ஆலயத்தையும் கூறலாம்.

கருங்கற்களால் கட்டிடங்களை நிர்மாணிப்பது, எகிப்து, கிரிஸ் (Egypt, Greece) முதலிய தேசங்களினின்றும், வட இந்தியாவிற்கு வந்து, பிறகு குப்த, (Gupta) சளுக்கிய (Chalkya) அரசர்களால், வர்தாபி (Vatapi) முதலிய இடங்களில் பரவி, அதன்பின் சென்னை ராஜதானியின் தெற்குபாகத்தில், பல்லவ அரசர்களால், விஸ்தரிக்கப்பட்ட தென்று கூறலாம். திராவிட கருங்கற் சில்பக் கோயில்கள், தமிழகத்தில் பரவியதற்கு, இதுதான் காரணம் என்று. இதை ஆராய்ந்த பல சாஸ்திரீகர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.