Siva Temple Architecture etc./திராவிட சிவாலயப் பிரிவுகள்

விக்கிமூலம் இலிருந்து

திராவிட சிவாலயப் பிரிவுகள்

திராவிட சில்ப கோயில்களை அடியிற்கண்ட முக்கிய பிரிவுகளாகக் கருதலாம். (1) பல்லவ ஆலயங்கள் (2) பூர்வீக சோழ கோயில்கள் (3) பிற்காலத்திய சோழக் கோயில்கள் (4) விஜயநகர சில்ப கோயில்கள் (5) சளுக்கிய அல்லது ஹொய்சால் சில்பக் கோயில்கள்.

(1) முதலாவது பல்லவ கோயில்களை எடுத்துக்கொள்வோம். இவைகளை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம் ; குகைக் கோயில்கள், பெரிய கற்பாறைகளில் வெட்டப்பட்ட கோயில்கள், துண்டிக்கப்பட்ட கருங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட ஆலயங்கள்.

குகைக்கோயில்கள் : - பல்லவ குகைக் கோயில்களுக்கு உதாரணமாக, மாபலிபுரத்திலுள்ள மஹிஷாசுர மர்த்தினி மண்டபத்தின் பக்கத்திலுள்ள சிவாலயத்தையும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலிலிருந்து இறங்கிவரும்போது மலைப்பாறையில் வெட்டப்பட்ட சிவாலயத்தையும், திருச்சிராப்பள்ளி குகைக் கோயில்களையும் கூறலாம். இவைகளுக்கெல்லாம் குடவரைக் கோயில்கள் என்று பெயர் ; கற்பாறைகளில் குடைந்து எடுக்கப்பட்ட கோயில்கள் என்று பொருள்படும்.

வெட்டப்பட்ட கோயில்கள்: - பெரிய கற்பாறைகளைச் செதுக்கி கோயில்களாக சமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு உதாரணமாக, மஹாபலிபுரத்திலுள்ள ரதக் கோயில்களையும், எல்லோராவிலுள்ள கைலாசக் கோயிலையும் கூறலாம். இவைகள் ஒரே கற்பாறையிலிருந்தோ, குன்றிலிருந்தோ, மேலே இருந்து செதுக்கிக் கொண்டுவந்து, நிர்மாணிக்கப் பட்ட கோயில்களாம்.

கட்டப்பட்ட கோயில்கள் :-துண்டுகளாக வெட்டப்பட்ட கருங்கற்களை அடுக்கிக் கட்டிய பல்லவ ஆலயங்களுக்கு உதாரணமாக, காஞ்சீபுரம் கைலாச நாதர் கோயில், மஹாபலிபுரம் கடற்கரைக் கோயில் முதலியவற்றைக் கூறலாம். பூர்வ காலத்தில் கட்டப்ப்ட்ட சிவாலயங்கள் இப்படிப்பட்டவைகளே.

இவைகளின் சிற்பங்களைப்பற்றி சிறிது ஆராய்வோம். குகைக் கோயில்களில் விமானங்கள் கிடையா; வெட்டப் பட்ட கோயில்களிலும் கட்டப்பட்ட கோயில்களிலும் விமானங்கள் உண்டு. இந்த விமானங்கள் பௌத்த மதத்தைக் சார்ந்த விஹாரங்களைப் போன்றவை என்று சிற்ப சாஸ்திரிகள் கூறுகின்றனர். இந்த "விஹாரங்கள்" ஒன்றின் மேல் ஒன்றாய் ஆதியில் மரத்தில் கட்டப்பட்ட மாடங்கள் உடையவைகளா யிருந்தன. இதைப்போலவே கருங்கற்களில் முதலில் சிவாலயங்கள் வெட்டப்பட்டன; பிறகு கட்டப்பட்டன. வெட்டப்பட்ட கோயில்களில் பெரும்பாலும் பிராகாரங்கள் கிடையா; கட்டப்பட்ட கோயில்களில் முதலில் கர்ப்பக்கிரஹமும் அதைச் சுற்றி ஒரு பிராகாரமும் தானிருந்தது. பிராகாரத்தின் உட்புறத்து சுவரில் சிறு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன ; இதற்கு உதாரணமாக ஸ்ரீ காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் பிராகாரத்தி லிருக்கிற சிறு அறைகளைக் கூறலாம் ; இவ்வறைகளில் பரமசிவம் பார்வதியின் பல கோலங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பல்லவ கோயில்களுக்கு கோபுரங்கள் கிடையா என்றே கூறலாம். விமானங்களில் சாதாரணமாக வெளியில் சிலையுருவங்கள் கிடையா "கோஷ்டங்களும்" மகா தோரணங்களும் உண்டு. 'கூடு'களின் மத்தியில், மண் வெட்டிபோன்ற உருவங்கள் இருக்கின்றன. இவைகள் எதைக் குறிக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. பல்லவ சில்பத்தூண்களை சாதாரணமாகக் கண்டுபிடித்துவிடலாம் ; மிகவும் புராதனமான தூண்கள் சிங்கங்களின்மீது வைக்கப்பட்டனபோலிருக்கும். பிற்காலத்திய தூண்களில் இந்த சிங்கங்கள் விடப்பட்டன. பல்லவ தூண்களின் "போதிகைகள்" வளர்ந்திருக்கும்; மிகவும் சாதாரணமானவை; ஆதிகாலத்துப் பல்லவ தூண்கள் இரண்டு பிரிவினை உடையவை, பிற்காலத்துத் தூண்கள் மூன்று பிரிவினை உடையவை; பல்லவ தூண்களில் " நாகபந்தம்" கிடையாது. பல்லவ கோயில்களில், துவார பாலகர்கள் உருவங்களுக்கு ஆதியில் இரண்டு கைகள்தானிருந்தன. இந்த துவாரபாலகர்களுக்கும் மற்ற மனிதர்களுடைய உருவங்களுக்கும் நீண்ட துளைக்கப்பட்ட காதுகள் உண்டு ; அவைகளில் பெரிய குண்டலங்களும் உண்டு ; தலையில் கேசம் நிகளமா யிருக்கும், தலையணிகள் உயர்ந்திருக்கும்.

மேற்குறித்த பல்லவ சிவாலயங்களின் காலம் சுமார் கி. பி. 600 முதல் கி. பி. 900 வரையிலாம். இவைகளில் :-

கி.பி. 600 முதல் 640 வரை ஆண்ட மஹேந்திரவர்மன் காலத்தியவை, முக்கியமாகக் குகைக் கோயில்களேயாம். இவைகளில் திரண்ட வடிவுடைய லிங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன ; துவாரபாலகர்களுக்கு இரண்டே கைகள்; இவர்கள் நேர்முகமான பார்வை உடையவர்கள். 'திருவாட்சி' அல்லது 'தோரணங்கள்' இரட்டைச் சுருள் உடையவை, தூண்கள் சதுர வடிவமான நானகு பக்கங்கள் உடையவைகளா யிருக்கும். குகைக் கோயில்களில் முதலில் சோமாஸ்கந்த முகூர்த்தம் நிர்மாணிக்கப்பட்டது; பிறகுதான் லிங்கங்கள் நடுவில் வைக்க பட்டன. (இது என் அபிப்பிராயம், இவ்விஷயம் இன்னும் ஆராயத் தக்கது) இதற்கு உதாரணமாக மஹாபலி புரத்திலிருக்கும் சில குகைக் கோயில்களைக் கூறலாம்.

கி. பி. 640 முதல் 674 வரையில் ஆண்ட மஹாமல்லன் காலத்தியவை;- கர்ப்பக்கிரஹத்தின், உட்புறச் சுவரில் சோமாஸ்கந்தர்; துவாரபாலகர்களுக்கு இரண்டே கைகள், துவாரபாலகர்கள் நேர்முகமானவர்கள் ; உட்கார்ந்த சிங்கங்களின்மீது தூண்கள் ; குகைக் கோயில்களும், ஒரே கல்லில் வெட்டப்பட்ட கோயில்களும் :- உதாரணமாக மஹாபலிபுரத்து ரதக் கோயில்களைக் கூறலாம்.

கி. பி. 674 முதல் 800 வரை- ராஜசிம்மன் முதலியவர்கள் காலத்தியவை:-கைகளைத் தூக்கி, பின்னங்கால்களால் நிற்கும் சிங்கங்கள் ; சோமாஸ்கந்தரின் முன்பாக பலபட்டைகள் தீர்த்தலிங்க மூர்த்திகள் ; ஒரே வளைவினையுடைய திருவாட்சி ; வெட்டப்பட்ட கற்பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள் :- உதாரணமாக ஸ்ரீ காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் மஹாபலிபுரம் கடற்கரைக்கோயில்களைக் கூறலாம்.

கி.பி. 800 முதல் 900 வரை அபராஜிதன் முதலிய அரசர்கள் காலத்தியவை:- திரண்ட வடிவுள்ள (Cylindrical) லிங்கமூர்த்திகள் ; பின்பக்கம் சோமாஸ்கந்தர் கிடையாது ; துவாரபாலகர்களுக்கு நான்கு கைகள்; இவர்கள் பக்கப் பார்வை யுடையவர்கள்; சிங்கமுகங்களையுடைய 'கூடு'கள் ; தூண்களின் கீழ்ப்பக்கம் சிங்கங்கள் கிடையா.

பல்லவ ஆலயங்களில் ரிஷபங்களை வைக்கும் வழக்கம் இரண்டாவது நரசிம்மவர்மன் காலத்தில்தான் உண்டானது என்று எண்ணப்படுகிறது.

அன்றியும் பல்லவ ஆலயங்களில் பெரும்பாலும் 'உப பீடமே' கிடையாது ; தூண்களில் 'நாகபந்தம்' கிடையாது ; தலைப்புகளில் 'இதழ்' கிடையாது ; தூண்களில் பலகை (Abaces) கிடையாது; போதிகைகள் வளைவு உடையன; போதிகைகளில் 'நாணுதலும்' பூமுனையும் கிடையாது.

பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு, மலைகளில் கோயில்கள் வெட்டுவது நின்றுவிட்டது.

சோழ சிவாலயங்கள்

இவைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் (1) பழய சோழக் கோயில்கள் (2) பிற்காலத்திய சோழக்கோயில்கள்.

சோழர் காலத்து சிவாலயங்களின் முற்பகுதி சுமார் கி. பி. 650 முதல் 1100 வரை என்று கூறலாம். இக்காலத்து சிவாலயங்கள் பெரிய விமானங்கள் உடையவைகளாயிருந்தன; கோபுரங்கள் மிகவும் சிறியவைகளாயிருந்தன; இவைகளைப் பெரிய வாசற்படிகள் என்றே கூறலாம் ; விமானங்கள் உயரத்தில் அதிகரித்துக்கொண்டே போயின, விமானங்களில் சித்திரிக்கப்பட்ட 'கூடுகளின்', நடுவில் மண்வெட்டி (Shovel) யைப்போன்ற சில்பமானது சிங்க முகங்களாக மாற்றப்பட்டன. கோஷ்டங்களும் மகா தோரணங்களும் கூட்டின் ரூபத்தை யடைந்தன. கோயில்களில் உப பீடங்கள் உண்டாயின; வளைந்த பொதிகைகள் மாறி, நேர் கோடுகள் உடையவைகளாயின. இக்காலத்து கோயில்களுக்கு உதாரணமாக, தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலையும், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலையும் கூறலாம்.

பிற்காலத்திய சோழக் கோயில்கள்

இக்காலத்திய கோயில்களை அறியும் அடையாளங்கள் :- விமானங்கள் குறுகிக்கொண்டே போயின; கோபுரங்கள் உயர ஆரம்பித்தன; தூண்களின் போதிகைகள் மணி கட்டித் தொங்குவதுபோல செதுக்கப்ப்ட்டன, போதிகைகளுக்கு 'தரங்கு' போதிகைகள் என்றுபெயர், கோஷ்டத்தின் மேல்பாகம் மண்டபத்தைப்போல ஆகிறது. இக் காலத்தில் கும்ப பஞ்சரங்கள் சில்பிக்கப்பட்டன. 12-ஆம் நூற்றாண்டுமுதல் நாகபந்தம் செதுக்கப்பட்டது; அன்றியும், போதிகைகளில் 'இதழ்க'ள் செதுக்கப்பட்டன. கோயில்களில் பெரிய குளங்களும் அவைகளைச் சுற்றி தூண்கள் நிறைந்த மண்டபங்களும் கட்டப்பட்டன. இவைகளுக்கு உதாரணமாக, சிதம்பரம், திருவண்ணாமலை, ஜம்புகேஸ்வரம் கோயில்களின் சிற்பங்களைக் கூறலாம்.

மாடக்கோயில்கள் - இக்காலத்தில் மாடக்கோயில்கள் என்று சொல்லப்பட்ட சில சிவாலயங்கள் கட்டப்பட்டன; அவைகளை முதன்முதல் கட்டியவன் கோச்செங்கணான் எனும் சோழ அரசன், அவன் தன்காலத்தில் 64 மாடக் கோயில்கள் கட்டியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் சோழ சில்ப மமைந்தவைகளே. இவைகள் மாடங்களையுடைய கோயில்களாம்; ஆயினும் குறுகிய வாசற்படிகளை உடையவை; யானை நுழையக்கூடாத கட்டிடங்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் அகராதியில் மாடக்கோயில் எனும் பதத்திற்கு "மேட்டிடங்களில் குறுகிய வழியுள்ளதாக, கோச்செங்கண்ணனால் கட்டப்பட்டவைகள்” என்று அர்த்தம் கூறப்பட்டிருக்கிறது.

விஜய நகரச் சில்ப சிவாலயங்கள்

இவைகளின் காலம் சுமார் 1350 முதல் 1600 வரையில் எனக் கூறலாம். இக்காலத்திய சிவாலயங்கள் பெரும்பாலும், மிகவும் உன்னதமான கோபுரங்களை உடையவை; மிகவும் பெரிய கோபுரங்கள் 15-ஆம் ஆண்டுமுதல் 17-ஆம் ஆண்டுவரையில் கட்டப்பட்டன. இக்காலத்தில்தான் நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் கட்டப்பட்ட்ன ; இதற்கு உதாரணமாக மதுரை சிதம்பரம் திருநெல்வேலி கோயில்களைக் கூறலாம். கோபுரங்களில் (முன்பிருந்த துவாரபாலகர்களுடன்) பல உருவங்கள் சித்திரிக்கப்பட்டன. தூண்களில் தாமரைப்பூ போதிகைகள், வாழைப்பூ உள்ள போதிகைகளாக மாற்றப்பட்டன. பெரிய ஸ்தங்பங்களில் குதிரை வீரர்களுடைய உருவங்கள் வெட்டப்பட்டன, கோயில், அடிமட்டத்தில் கோலாட்டம்போடும் ஸ்திரீகளின் உருவங்கள் வெட்டப்பட்டன; இதற்கு உதாரணமாக ஹம்பியிலுள்ள விரூபாட்சர் கோயிலைக் காண்க, போதிகைகளில் மணிபோன்ற சில்பும், புஷ்பம்போல் மாறியது. அன்றியும் இக்காலத்து கோயில்களில் கல்யாண மண்டபங்கள் எனும் அழகிய மண்டபங்கள் கட்டப்பட்டன; இதற்கு உதாரணமாக, ராயவேலூர் கல்யாண மண்டபத்தைக் காண்க. தூண்கள் மூன்று பிரிவினை உடையவைகளாயின ; அம்மனுக்கு கோயில்களில் பிரத்தியேகமான சந்நிதி இக்காலத்தில்தான் உண்டானதென்று மைசூர் சர்வகலாசாலைப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணா அவர்கள் அபிப்பிராயப்படுகிறார். போதிகைகளில் 'நாணுதல்' சில்பிக்கப்பட்டது. அன்றியும் "அணிவெட்டுக்கால்;" தூண்கள் உண்டாக்கப்பட்டன. இதற்கு உதாரணமாக தாட்பத்ரி கோயிலைக் கூறலாம்.

கடம்ப சில்பக் கோயில்கள்

இவைகள் திராவிட சில்பக் கோயில்களின் ஓர் பகுதியாம். இக் கோயில்கள் சதுர வடிவமான சிகரங்களையுடையவை. சாதாரணமாக திராவிட சில்ப சிகரங்கள் 8 பக்கங்களுடையவைகளா யிருக்கும்

ஹேமாத்பன்ட் கட்டிடங்கள்

இந்த சிவாலயங்களும் திராவிட சில்பமமைந்த கட்டிடங்களே ; ஆயினும் இவைகள், பெரிய கருங்கற்பாறைகளைத் துண்டுகளாக வெட்டி அல்லது செதுக்கி, ஒன்றின் பேரில் ஒன்றாய் அடுக்கிக் கட்டப்பட்ட கோயில்கள்; கற்களுக் கிடையில், சுதையோ அல்லது சிமென்ட்போன்ற வஸ்துவோ கிடையாது. இப்படிப்பட்ட கோயில்கள் ஒரு ராஷ்டிர கூடத்து அரசனது மந்திரியாகிய "ஹேமாத்பன்ட் என்பவரால் முதலில் கட்டப்பட்டபடியால் ஹேமாத்பன்ட் கட்டிடங்கள் எனும் பெயர்பெற்றன. இவரது காலம் 14 - ஆம் நூற்றாண்டிற்கு முன் பகுதியாம்.

கேரள சில்பக் கோயில்கள்

இவைகள் ஒருவிதத்தில் பர்மா சீனா, முதலிய இடங்களிலுள்ள கோயில்களைப்போன்ற சில்பமுடையவை. பெரும்பாலும் அஸ்திவாரம் கருங்கல்லாலாயதா யிருந்த போதிலும், மேல் கட்டிடமெல்லாம் மரத்தாலானவை. கோயில்கள் கூரைகளை உடையன. இவற்றிற்கு இரண்டு அல்லது மூன்று கூரைகளும் உண்டு. உள் பிராகாரங்களெல்லாம் பெரும்பாலும் மரத்தினாலானவை. சுண்ணாம்பு சுவர்க்ளுக்கு பதிலாக மரத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

சாளுக்கிய சில்பக் கோயில்கள்

(கி.பி. 500 முதல் 1300 வரை)

ஆதியில் சாளுக்கியர் குகைக் கோயில்களை வெட்டினர். இதற்கு உதாரணமாக வாதாபி (பாதாமி) குகைக் கோயில்களைக் கூறலாம். இவர்களிடமிருந்துதான் தென்னிந்தியர் குகைக் கோயில்களை வெட்டும் முறையைக் கற்றனர் என்று எண்ணப்படுகிறது.

சளுக்கிய சில்பத்தை இரண்டு பிரிவாகப் பிரித்திருக்கின்றனர். (1) நாகரம்:-இதில் விமானங்கள் கடைசிவரை நான்கு மூலைகளை யுடையவை. (2) வேசரம்:-இவைகளின் விமானங்கள் இந்து ஆரிய (Indo-Aryan) விமானங்களைப் போன்றவை.

ஹொய்சல் சில்பம் -சிலர் சளுக்கிய சில்பத்தின் பிரிவு என்று எண்ணுகின்றனர். மைசூர் ராஜ்யத்தில் பல கோயில்களை ஆராய்ச்சிசெய்த காலஞ்சென்ற ராவ்பகதூர் நரசிம்மாசாரியார் அவர்கள் இதைப் பிரத்தியேகமாக மதிக்கின்றார் இந்த சில்பக் கோயில்களெல்லாம் 3 அடி முதல் 5 அடிவரை உயரமுள்ள அடிப்பீடத்தின்மேல் கட்டப்பட்டவை. பீடமானது பல கோணங்களையுடைய நட்சத்திரங்களைப் போன்றவை. விமானங்கள் படிப்படியா யிருக்கும். இச்சில்பக் கோயில்கள், சாதாரணமாக அடிப்பீட்த்தின் பேரில், மூன்று கர்ப்பக்கிரஹங்களை யுடையனவா யிருக்கும். பெரும்பாலும் மத்தியிலுள்ள கர்ப்பக்கிரஹம் கிழக்கு நோக்கியிருக்கும், இதற்கு சிறிது முன்பாக, வடக்கு பார்த்த கர்ப்பக்கிரஹமொன்று, தெற்குபார்த்த கர்ப்பக் கிரஹமொன்று உன்டயது; இவைகளின் இடையில் இருக்கும் மண்டபத்திற்கு நவரங்கம் என்று பெயர் ஆதியில் இம்மூன்று கோயில்கள், மும்மூர்த்திகளாகிய பிரம்மா, சிவம், விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்டனவென்று டாக்டர் கஸின்ஸ், கோபிநாத் ராயர் முதலியவர்கள் அபிப்பிராயப் படுகின்றனர்; ஆதிகாலத்தில் மும்மூர்த்திகளும் வணங்கப் பட்டனவென்றும், பிறகு பிரம்மாவுக்கு கோயில்கள் அற்றுப்போய், சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும், மிகுதியாயின என்று எண்ண இடமுண்டு.

சளுக்கிய சில்பத்தில் ஒரு முக்கியமான அம்சம் மிகவும் அழகிய தூண்கள்; எல்லாத் தூண்களும் ஒரு மாதிரியாக செதுக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஜதையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்; இவைகள் சாணையில் கடைசல் பிடிக்கப்பட்டவைபோல் மெருகு உடையவைகளா யிருக்கும்; மிகவும் அருமையான வேலைப்பாடுடையவை; பெரும்பாலும் ஓர்வித கருப்புக் கல்லால் செய்யப்பட்டவை. மைசூர் ராஜ்யத்திலுள்ள சளுக்கிய கோயில்களெல்லாம் இப்படிப்பட்ட கருப்புக் கற்களால் ஆனவை என்றே கூறலாம்.

கோயிலுக்குள்ளே காற்று புகுவதற்காக பல கண்களையுடைய பலகணிகள் அமைக்கப்பட்டிருக்கும்; இவைகள் மிகவும் அருமையான வேலைப்பாடுடையவை.

இப்பிரிவு கோயில்களின் கோஷ்டங்களில் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

கர்ப்பக் கிரஹங்களில் அதிக சித்திர வேலைப்பாடுண்டு; பல வரிசைகளாக சில்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும்; கீழே யானைகள் வரிசை, அதற்குமேல் சிம்மங்கள் அல்லது சார்தூலங்களின் வரிசை, (புலிகள் வரிசை) அதற்குமேல் கொடிவேலை வரிசை அதற்குமேல் குதிரை வீரர்கள் வரிசை, அதற்குமேல் கொடி வேலப்பாடு ; அதற்குமேல் ராமாயணம் முதலிய புராணக் கதைகளின் சில்ப வரிசை, அதன்மீது ஹம்சங்கள் முதலிய பட்சிகளுடைய வரிசை; அதற்குமேல், தேவர்கள் கந்தர்வர்கள் அப்சரசுகள் வரிசை; இவைகளில், சிவ உருவங்கள் வைணவ உருவங்கள் எனும் பேதமின்றி, எல்லாத் தேவதைகளின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன; கூத்தாடு வினாயகர், நிர்த்த சரஸ்வதி முதலிய அபூர்வ சிலைகளு மிருக்கின்றன. தற்காலத்து சில்பிகள் ஏதாவது அபூர்வவான உருவங்களை நிர்மாணிக்க வேண்டுமென்றால், இப்படிப்ப்ட்ட கோயில்களுக்குத்தான் போய்க் கற்றுக்கொள்கின்றனர். இச் சில்பத்தைப்பற்றி டாக்டர் சர் பெர்கூசன் என்பவர் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். 3 அடி சதுரத்திற்குள் இப்ப்டிப்பட்ட அருமையான வேலைப்பாடுள்ள சில்பமே உலகெங்கும் கிடையாதெனக் கூறியுளார். இந்த நுட்பமான் அழகிய வேலைப்பாட்டுக்கு ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கெடுத்து எழுதுகிறேன். மைசூரிலுள்ள ஒரு சளுக்கிய சில்பக் கோயிலில், ஒரு பெண்மணி கையில் பழம் வைத்துக்கொண் டிருப்பதுபோலும், அந்தப் பழத்தினமீது ஒரு ஈ உட்கார்ந்திருப்பதுபோலும் தத்ரூபமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஈயின் இறகுகளையும் ஸ்பஷ்டமாகக் காணலாம்! இவைகளெல்லாம் வெட்டப்பட்டபொழுது ஒரு வித நீல நிறமாயிருந்து பிறகு கருப்பாக மாறும் கற்களால் ஆனவை என்று கூறப்பட்டிருக்கிறது.

ஹொய்சல கோயில்களில் சாதாரணமாக அம்மன் சந்நிதியே கிடையாதென்று கூறலாம். இக்கோயில்களில் சாதாரணமாக ஹொய்சல அரசர்களுடைய விருது செதுக்கப்பட்டிருக்கும்; இந்தப் பிருது என்னவென்றால், ஓர் வீரன் ஓர் சார்தூலத்தைத் தனியாக எதிர்த்து தன் வாளால் கொல்வதுபோலிருக்கும். சளுக்கிய வம்சத்து ஆதி புருஷன் ஒருவன் இத்தகைய வீரச்செயல் செய்ததாக சரித்திரம்.

இச் சில்பக் கோயில்களுக்கு உதாரணமாக, மைசூர் ராஜ்யத்தில் ஹலபேட் எனும் ஊரிலுள்ள கேதாரேஸ்வரர் கோயிலையும், ஹொய்சலேஸ்வரர் கோயிலையும் கூறலாம்.

தற்காலத்திய கோயில்களின் சில்பம்-சுமார் 1600 முதல்

இவைகளில் விசாலமான மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கும்; பல பிரதட்சிண பிராகாரங்கள் அமைக்கப்பட்டவைகளா யிருக்கும். தூண்களிலுள்ள போதிகைகளின் தொங்கட்டங்கள், வாழைப்பூவைப்போல முற்றிலும் மாறிவிட்டன. கோபுரங்கள் நிரம்ப பல உருவங்கள் சுதை (சுண்ணாம்பு)யினால் நிர்மாணிக்கப்பட்டன். தூண்கள் மூன்று பிரிவினை உடையவைகளா யிருக்கும்; அன்றியும் நாணுதல் அமைக்கப்பட்டவைகளாயிருக்கும். மண்டபங்களின் மேற் கூரைகளில் சில கும்பாகிருதியாக (Dome like) அமைக்கப்பட்டன.

இதற்கு உதாரணமாக புதுப்பிக்கப்பட்ட திருப்பாதிரிப்புலியூர் சிவாலயத்தையும், ராமேஸ்வரத்து சொக்கட்டான் மண்டபத்தையும், மதுரை புது மண்டபத்தையும், கோபுரங்களையும், திருச்செந்தூரிலுள்ள ஷண்முகவிலாச மண்டபத்தையும் கூறலாம்.

இக்காலத்துக் கோபுரங்கள் பல வர்ணம் தீட்டப் பட்டவைகளாயிருக்கும்; ஆதிகாலத்து கோபுரங்களில் அப்படி கிடையாது.

ஆதிகாலத்து கோயில்களிலிருந்த சிலை உருவங்கள் இயற்கைக்கு மிகவும் ஒத்தவைகளா யிருந்தனவென்றும், தற்காலத்தில் கட்டப்படும் கோயில்களிலுள்ள உருவங்கள் அப்படி யில்லையென்றும் பெர்கூசன் முதலியோர் அபிப்பிராயப் படுகின்லனர்.

பஞ்சாயதனக் கோயில்கள்

இவைகள் புதிதாய் தற்காலத்தில் கட்டப்பட்டவை. இவைகளில் சிவலிங்கப் பெருமானுடைய முக்கிய சந்நிதியுடன், விஷ்ணுவுக்கும் (ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம்) விக்னேஸ்வரருக்கும், துர்க்கை அல்லது அம்பாளுக்கும், ஹனுமாருக்கும் பிரத்யேகமாய், ஒரே ஆலயத்தில் சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. இவைகளை பெரும்பாலும் மைசூர் ராஜ்யத்தில் காணலாம். பஞ்சாயதனம் என்றால், ஐந்து சங்கிதிகள் அல்லது கோயில்கள் அடங்கியது, என்று அர்த்தமாகும்.