Siva Temple Architecture etc./மாற்றப்பட்ட சிவாலயங்கள்
மாற்றப்பட்ட சிவாலயங்கள்
இவைகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் (1) பூர்வீக சிவாலயங்கள் வேறு மதக் கட்டிடங்களாக மாற்றப்பட்டவை. (2) வேறு மதக் கட்டிடங்கள் சிவாலயங்களாக மாற்றப் பட்டவை. இவ்வாறு இவைகள் மாற்றப்பட்ட போது இவைகளிலுள்ள சில சில்பங்களும் மாற்றப்பட்டன வென்பதற்குச் சந்தேகமில்லை.
முதற் பிரிவிலடங்கிய, வேறு மத ஆலயங்களாக மாற்றப்பட்ட சிவாலயங்களை முதலில் கருதுவோம். வட இந்தியாவில் மகம்மதியர்கள் வந்தபிறகு பல சிவாலயங்கள் இடிக்கப்பட்டு, மசூதிகளாய் மாற்றப்பட்டன வென்பதற்கு சரித்திர அத்தாட்சியே உளது. இதற்கு முக்கிய உதாரணமாக காசி க்ஷேத்திரத்திலிருந்த பூர்வீக விஸ்வநாதர் ஆலயம் இடிக்கப்பட்டு ஔரங்கசீப்பினால் மசூதியாகக் கட்டப்பட்டதைக் கூறலாம். அம்மசூதியில் தற்காலமும் சிவாலய சிற்பங்கள் சில இருக்கின்றன.
தென் இந்தியாவில் பதினான்காம் நூற்றாண்டில் மகம்மதியர்கள் நுழைந்த பிறகு, சில சிவாலயங்கள் மாற்றப்பட்டன என்பது நிச்சயம். பெரியகாஞ்சி புரத்தில் இரண்டொரு சிவாலய மண்டபங்கள் மசூதிகளாக மாற்றப்பட்டிருபபதைத் தற்காலமும காணலாம்.
அன்றியும் பல பூர்வீக சிவாலயங்கள், வைஷ்ணவ ஆயயங்களாக மாற்றப் பட்டிருக்கின்றன; இவைகளில் சிலவற்றைக் கருதுவோம்.
(1) சின்ன காஞ்சிபுரத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் ஆதியில் சிவாலயமாயிருந்த தென்பதற்கு பல.அத்தாட்சிகள் உண்டு ; அவைகளில் சிலவற்றை சுருக்கமாக எழுதுகிறேன். இந்த ஊர் ஆதியில் அத்தியூர் என்கிற பெயரையே உடைத்தா யிருந்தது; பழய ஆலயம் கிழக்குநோக்கி யிருந்தது; பெரிய கோபுரம், சைவ ஆகமப்படி கிழக்கில்தானிருக்கிறது, தென்கிழக்கு மூலையில்தான் மடப்பள்ளி யிருக்கிறது ; தற்கால ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உற்சவங்களெல்லாம் மேற்கிலிருக்கும் சிறிய கோபுர வழியாகத்தான் நடந்தேறி வருகிறது. சிவாகமப்படி கோயில்களில் ஸ்வாமியின் கர்ப்பக்கிரகம் முதலிலும், அம்மன் கர்ப்பக்கிரகம் பிறகும் இருப்பது வழக்கம், தற்காலம் மேற்கு கோபுரவாயிலாக் நுழைந்தால் அம்மன் கர்ப்பக்கிரகம் முந்தி யிருக்கிறது; ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மலைமீதிருப்பதாக ஐதிகம், இங்கு மலையே கிடையாது; பூர்வீக சிவாலயம் நான்குபுறமும் மூடப்பட்டு அதன் பேரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளை எழுந்தருளப் பண்ணி யிருக்கிறார்கள் என்பது நிச்சயம்; ஸ்ரீ வரதராஜர் சந்நிதிக்குப் போவதென்றால், மேற்குபக்கம் நுழைந்து போய், கிழக்கி லிருக்கும் படிகளின் மீதேறி மறுபடியும் திரும்பிப் போகவேண்டும்; இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் அத்தியூர் என்றே இருக்கிறது : அத்தியூரிலிருந்த சிவாலயத்திற்கு புண்யகோடீஸ்வார் கோயில் என்று பெயர் இருந்ததாக அறிகிறோம்; தற்காலம் ஸ்ரீ வரதருடைய விமானத்திற்கு புண்யகோடி விமானம் என்று பெயர் வழங்கப்படுகிறது. கடைசியாக பழய வைஷ்ணவ ஆழ்வார்கள் ஸ்ரீ வரதராஜரைப்பற்றி பதிகங்கள் பாடினதாக இல்லை; காஞ்சிபுரத்திலுள்ள பல திருப்பதிகளுக்கு பாசுரங்கள் இருக்கின்றன (இன்னும் பல ஆதாரங்கள் உண்டு அவைகளை யெல்லாம் இங்கு எடுத்து எழுதுவதற்கு இடமில்லை). சென்னை ராஜதானி ஜில்லா டைரெக்டரி (District Gazetteer) எனும் புஸ்தகத்தில் நிஷ்பட்சபாதமாக இதைக் கருதவல்ல ஒரு ஆங்கிலேயர், இது ஆதியில் சிவாலயமாயிருந்து பிறகே வைஷ்ணவ: ஆலயமா மாற்றப்பட்டதெனக் கூறியுளார் ; காலஞ் சென்ற பண்டித நடேச சாஸ்திரிகளும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். விஜயநகரத்தரசர்கள் காலத்தில், ஒரு தளகர்த்தர், கிலமாக விருந்த சிவாலயத்தை, வைஷ்ணவ ஆலயமாக மாற்றினாரென்று நம்புவதற்கு அத்தாட்சிகள் உண்டு. இவ்விஷயம், மத அபிமானத்தை ஒரு புறம் ஒதுக்கி, கேவலம் விஞ்ஞான ஆராய்ச்சி முறையில் பார்ப்பவர்களுக்கு ஸ்பஷ்டமாய் விளங்கும்.
(2) திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மலைக் கோயில் ஆதியில் சைவாலயமா யிருந்ததென்பத்ற்குச் சந்தேகமில்லை; இதை பிற்காலத்தில் ஸ்ரீ ராமாநுஜாசாரியார் வைஷ்ணவ ஆலயமாக மாற்றியதாக வைஷ்ணவ கிரந்தங்களே கூறுகின்றன. தற்காலமும் மூல விக்கரத்திற்கு மூன்றாவது கண்ணும், தாழ்சடையு மிருப்பதைக் காணலாம்; கைகளில் மஹா விஷ்ணுவுக்கு இருக்க வேண்டிய சங்கு சக்கரங்கள் சிலையில் கிடையாது, மேலே தொடுப்புகள்தான் போட்டிருக்கிறார்கள்.
(3) செங்கல்பட்டு ஜில்லாவில் வண்டலூர் எனும் சிறு கிராமத்தில் இருக்கும் தற்கால வைஷ்ணவ. ஆலயம், முன்பு சிவாலயமாயிருந்ததே. இங்கு பழய சிவாலயம் கிலமாய்ப் போக, மலையாக மாற்றப்பட்டு, அதன் மீது மஹாவிஷ்ணுவை ஆரொகணம் பண்ணி யிருக்கிருர்கள்; பழய சில்பங்களும் மாற்றப் பட்டிருக்கின்றன்.
(4) மதுரைக் கருகாமையிலுள்ள அழகர் கோயிலும் ஆதியில் சிவாலயமாக இருந்தது. இதன் பழய பெயர் பழமுதிர்சோலை யென்பதாம். இப்பழ முதிர் சோலை ஸ்வாமிக்குப் பல திருப்புகழ் பாட்டுகள் பாடப் பட்டிருக்கின்றன , நற்கீரர்பாடிய திருமுருகாற்றுப் படையில் இதை சிவஸ்தலமாகவே பாடியிருக்கிறார், கல்வெட்டுகளில் ஸ்வாமியின் பெயர் பரமஸ்வாமின் என்றிருக்கிறது. மலையிலுள்ள பொய்கைக்கு புண்ய சரவண மென்றே பெயர்; இங்கு தற்காலமும் வினாயகர் விக்கரமும் பைரவருடைய விக்கரமும் இருக்கிறது; இச்சந்நிதிகளில் கொடுக்கப்படும் பிரசாதம் விபூதியே. இக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் சிவாலயங்களிலிருக்க வேண்டிய சில பரிவார தேவதைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன; கருப்பண்ணன் கோயில் இவைகளில் ஒன்றாம், சப்த மாத்ருக்கள் ஆலயம் மற்றொன்றாம். இங்கு பூர்வம் சுப்பிரமணியர் ஆலயம் இருந்த இடம் தற்காலமும் காட்டப் படுகிறது. இக்கோயிலிலுள்ள வைஷ்ணவ சில்பங்களெல்லாம் புதியவை, விஜயநகரத் தரசர்கள் காலத்திற்குப் பிறகு வெட்டப்பட்டனவாம்.(இன்னும் இப்படி மாற்றப்பட்ட சில ஸ்தலங்களைப் பற்றி அறிய விரும்புவோர், எனதுமேற் குறித்த "சிவ ஆலயங்கள் - இந்தியாவிலும் அப்பாலும்" எனும் புஸ்தகத்தில் பார்த்துக் கொள்ளவும்.)
பிறமத ஆலயங்களாயிருந்து சிவாலயங்களாக
மாற்றப் பட்டவை
இனி மேற்கூறிய இரண்டாம் பிரிவாகிய, பொளத்த, ஜைன, வைஷ்ணவ ஆலயங்களா யிருந்தவை சிவாலயங்களாக மாற்றப் பட்டவைகளைப்பற்றி சிறிது கருதுவோம்.
(1) சென்னை ராஜதானியில் கிருஷ்ணா ஜில்லாவில், அநந்தபூர் தாலூகாவிலுள்ள "செஜர்லா" என்னும் ஊரிலுள்ள தற்கால சிவாலயம், ஆதியில் பௌத்த சைத்யமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதாம்.
(2) கோதாவரி ஜில்லாவில், குண்டுபல்லெ எனும் இடத்திலுள்ள வட்டவடிவமான குகைக் கோயில் ஆதியில் புத்த ஆலயமாயிருந்தது, பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டது. புத்த தாதுகர்ப்பம் (தாகோபா) சிவலிங்கமாக மாற்றப்பட்ட தென்று டாக்டர் கசின்ஸ் கூறுகிறார்.
(3) மைசூர் ராஜ்யத்தில் பலஹொன்னூர் தாலுகாவில் 'களாசா' என்னும் இடத்தில் இருக்கும் சிவாலயம் ஆதியில் ஜைன கோயிலாயிருந்ததாம்.
(4) சென்னை ராஜதானி அநந்தபூர் ஜில்லாவிலுள்ள கம்படூரெனும் இடத்திலுள்ள சிவாலயமும், பூர்வம் ஜைன ஆலயமா யிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டது.
(5) மைசூர் ராஜ்யத்தில் நந்தி துர்க்கம் என்னும் இடத்திலுள்ள சிவாலயம், சிலகாலம் ஜைன. ஆலயமாயிருந்ததென என்ணுவதற்கிட முண்டு அச்சமயம் இதற்கு நந்தகிரி என்று பெயர் இருந்ததாம்.
பூர்வம் விஷ்ணு ஆலயமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதற்கு இரண்டொரு உதாரணங்களைக் கருதுவோம்.
(1) சென்னை ராஜாதானியில், திருநெல்வேலி ஜில்லாவில் குற்றாலத்திலிருக்கும். தற்கால சிவாலயம் ஆதியில் விஷ்ணு ஆலயமாயிருந்ததை அகஸ்திய முனிவர் விஷ்ணுவின் விக்ரஹத்தை சிவலிங்கமாக மாற்றி, சிவாலயமாக மாற்றியது புராணக்கதையாம். தற்காலமும் சிவ லிங்கத்தின் பின்பாக மஹா விஷ்ணு இருப்பதாகக் சொல்லப்படுகிறது. சிவலிங்கத்திற்குக் தற்காலமும் துளசி பூஜை செய்யப்படுகிறது. கோயிலில் தற்காலமும் சில பழய வைஷ்ணவ சின்னங்களிருக்கின்றன. ஸ்காந்த புராணம் இம்மாறுதலை ஒப்புக் கொள்கிறது.
(2) சென்னை ராஜதானி, தார்வார் பிரிவிலுள்ள, கண்டுகோல் எனும் கிராமத்தில் இருக்கும் சிவாலயம், வைஷ்ணவ ஆலயமாயிருந்து பிறகு சிவாலயமாக மாற்றப்பட்டதாக டாக்டர் கசின்ஸ் கூறுகிறார்.