புதுமைப்பித்தன் கதைகள், முழுவதும்/கொன்ற சிரிப்பு
கொன்ற சிரிப்பு
சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி உயிர்ப்பு. அந்தகன் என்ற சோழன் பழைய வீர வம்சத்தின் கனவுகளையெல்லாம் பாழாக்கி - படாடோ பத்திற்கும் வீண் மிடுக்கிற்கும் மட்டும் குறைவில்லை - பொம்மையரசனாக அந்த வீரர்களின் சிங்காதனத்தை அபசாரம் செய்து கொண்டிருக்கிறான். தெற்கே பாண்டியர்கள் இவன் நாடுகளைக் கபளீகரித்து விட்டனர். மேற்கே சேரர்கள்... அவர்கள் எந்த நிமிஷத்தில் இவன் சிங்காதனத்தையே காலி செய்துவிடுவார்களோ! வடக்கே, அம்மம்ம! எத்தனையோ பெயர் தெரியாத அரசர்கள்! அவர்களில் புதிதாக என்னமோ மிலேச்சராம், துருக்கராம், இன்னும் எத்தனையோ பேர்! அந்தகன், மனிதன் தனக்கு நித்திய வாழ்வு என்று மனப்பால் குடிப்பதுபோல், கவலையின்றி அரசாண்டுகொண்டிருக்கிறான். அதுவும், சம்பிரதாயமாக அவன் ஆட்சி செய்துகொண்டிருப்பதாகப் பாவனைதான்...
மருதனூர் என்பது ஒரு சிறு கிராமம். இயற்கையின் எழில் கொழிக்கும் ஒரு தனி... என்ன சொல்வது? வனப்பை வருணிக்க அந்தக் கிராமத்தின் தவப்புதல்வன், அந்த இயற்கை யன்னையின் தாய்ப்பால் பருகிய கானப்பிரியன் தான் பாடவேண்டும். என்னால் கூற முடியுமா? அவன் அங்கு யாருக்குப் பிறந்தான் என்று ஊராருக்குத் தெரியாது.
ஒரு நாள் இரவு குழந்தையொன்று காளிதேவியின் கோயில் வாசலில் தாயை நோக்கியழுதது. எந்தத் தாயை நோக்கியோ, அந்தத் தேவிதான் அருளினாளோ என்னவோ! அதிலிருந்து காளி கோயில் பூசாரி எடுத்து வளர்த்தான். காளியின் புத்திரன், பூசாரியின் வளர்ப்புப் பிள்ளை... இதுதான் கானப்பிரியனின் இளமைச் சரிதம்.
அந்த மோகனமான பொழுதிலே இயற்கைத் தாயின், காளியின் கோர ஸ்வரூபத்திலே, குதூகலித்துக் குரலெழுப்பும் பறவைகளிடத்திலே அவன் கல்வி கற்றான். அது கானமாகக் கவிதையாக எழுந்தது. எல்லோரும் கானப்பிரியன் என்றார்கள். அவனும் கானப்பிரியன் என்று தன்னை யழைத்துக்கொண்டான்.எப்பொழுதும் அந்தத் தடாகத் துறையிலே என்ன அதிசயமோ! கானப்பிரியனை அங்கு காணாமல் இருக்க முடியாது. இல்லாவிட்டால் குரலெழுப்பும் குயில் கிளைகளின் அடியில் அவன் நின்று கவனித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்பொழுது அவன் கண்கள் - அவை என்ன தெய்வ தரிசனத்தைக் கண்டனவோ? அவற்றில் என்ன கனவு, எவ்வளவு உற்சாகம்! என்ன என்ன என்று என்னால் சொல்ல முடியுமா? கவிஞனைக் கேட்டுப் பார்க்கவும்.
கானப்பிரியன் சங்கோசப் பிராணி. மனிதர்கள் என்றால் அவன் உற்சாகம் எல்லாம் எங்கோ பதுங்கி ஒடுங்கிவிடும். அதிலும் பெண்கள்... கேட்கவே வேண்டாம். அவனிடம் பேசுவது என்றால் எல்லாருக்கும் ஆசை; அவனுக்கு மட்டும் கூச்சம். அவனைப் பார்ப்பதிலே ஒரு தனிப் பெருமை.
ஊர் அம்பலக்காரரின் மகள் பெண்களின் இலட்சியமாயும் ஆண்களின் கனவாயும் இருந்தாள். அவள் தான் அவனை எப்படியோ பேசவைத்துவிட்டாள். அவன் உள்ளத்தையறிந்தவள் அவள் ஒருத்திதான். அவன் கவிதையின் கனிவைக் கண்டவள் அவளே.
அவளைச் சாயங்காலம் சந்தித்தால் கானப்பிரியனுக்குப் புதிய பாட்டுக்கள் தேவி அருள் புரிவாள். நாவில் ஸரஸ்வதி நர்த்தனம் செய்வாள். இவர்கள் கூட்டுக் களியிலே, தனிப்பட்ட கனவிலே, தேவியின் பாதுகாப்பிலே உலகத்தின் இலட்சியம் மறைந்து வாழும்.
அவள் பெயர் காவேரி. அன்று காவேரியின் கன்னி எழில் கம்பனை வளர்த்தது. அது பழைய கதை. இப்பொழுது காவேரி, இந்தக் காவேரி...
அன்று காவேரி ஜலம் எடுத்துவரச் சற்றுத் தாமதம். கானப்பிரியனுக்குக் குயில் சொன்ன கதையையும், மலர் பாடிய பாட்டையும் அவளுக்குச் சொல்ல ஆவல். அந்தச் சூரியாஸ்தமனத்தை அவளிடம் காண்பிக்க...
அதோ அவள் வருகிறாள். ஆசைக் காவேரி!
"கானனா? வா, வா!" என்று குடத்தை ஜலத்தில் நழுவவிட்டு அவன் மீது சாய்கிறாள்.
"இன்று ஏன் இவ்வளவு நேரம், போ! அந்தக் குயில்..."
"கானா, இன்று உனக்கு ஒரு சமாசாரம், நீ ஏன் உன் கவியைக் கொண்டு மன்னனிடம் பரிசு பெறக் கூடாது? இன்று யாரோ ஒரு கவியாம், போகிறானாம். அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பாடுவதில் நூற்றில் ஒன்று கூட இல்லை. வெறும் வார்த்தைக் குப்பை. நீயேன்..."
"நானா! அரசனிடமா? நானா!"
"ஏன், கானா? நாம் இருவரும்..." என்று தழுவிக் குழைந்து அவன் கண்களில் உற்று நோக்கினாள். இருவரும் ஐக்கியப்பட்ட வாழ்க்கையின் கனவு அவள் கண்களில் தவழ்ந்தது."காவேரி! உனக்காக நான் போகிறேன்...!"
"என்ன, கானா, எனக்காகவா?"
"இல்லை கண்ணே, நமக்காக" ... சற்று மௌனம்.
இருவரும் தழுவி நிற்கின்றனர்.
அந்த மௌனத்தில் அவர்கள் அறிந்தது எவ்வளவோ.
2
சோழ சமஸ்தானம்.
அந்தகன் கொலுவில் உல்லாசமாக இருக்கிறான். பக்கத்தில் அவனது பிரியை - அதாவது, மரியாதையாக வைப்பு - வாஸந்திகை என்ற ஆந்திரப் பெண். மற்றப் பக்கத்தில் அடைப்பைத் தொழில் புரியும் பணிப்பெண்கள். இடையில் மெல்லிய கலிங்கம். மேலே முத்துவடக் கச்சு.
சற்றுக் கீழே இவனுக்கு ஏற்ற மந்திரி பிரதானிகள். அவன் நாட்டிலே மாதம் மூன்று மழை பெய்து வருகிறதா, திருடர்கள் கொஞ்சமாகக் கொள்ளையடிக்கிறார்களா, அந்நியர் வசமாகமல் இன்னும் எத்தனை பிரதேசங்கள் வரி வசூலிக்க இருக்கின்றன என்பதைப் படாடோ பத்துடனும் கூழைக் கும்பிடுடனும் சமூகத்தில் தெரிவித்துக்கொள்ளும் மந்திரிகள்!
சேவகன் ஒருவன் ஓர் ஓலையைக் கொண்டுவந்து அடிபணிந்து நிற்கிறான். அரசன் அதைத் தொட்டுக் கொடுக்க, கற்றுச் சொல்லி பிரித்து, "ராஜாதி ராஜ ராஜ கம்பீர அந்தகச் சோழ மண்டலாதிபதி சமஸ்தானத்திற்குக் கானப்பிரியன் எழுதிக்கொண்டது; எனது கவியைச் சமுகத்தில் அரங்கேற்ற ஆசை - கானப்பிரியன்" என்று படித்தான்.
"என்ன வாஸந்திகா?"
"வரட்டுமே!"
"இந்த நடிகைகள் கொஞ்சம் நன்றாகப் பாடி ஆடுகிறார்களே!"
"அவன் தான் வரட்டுமே!"
"சரி, சேவகா, வரச்சொல்!"
கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களில் ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கையின் திறன், பெருமிதம், இறுமாப்பு - எல்லாம் சற்று மலைப்பை உண்டுபண்ணுகின்றன.
கவிஞன் அரசனைப் பார்க்கிறான். அந்தகன் கானப்பிரியனைப் பார்க்கிறான். வாஸந்திகை இருவரையும் நோக்குகிறாள். இருவரையும் வெல்ல ஒரு வலை வீச்சு. உலகத்தின் சக்தி அவள் காலின் கீழ். ஏன் உலகத்தின் இலட்சியம் அத்துடன் இருக்கக்கூடாது?
கானப்பிரியன் அவளைக் கவனிக்கவில்லை.அரசனை நோக்கிப் பாடுகிறான்.
ஒரு காதற் பாட்டு.
அந்தக் காலத்திலே பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடுக்க வேண்டிய அரசனாக இருக்க வேண்டியது மரபு.
அதெல்லாம் நினைக்கவில்லை. ஏன்? தெரியாது.
அவனது காவேரியின் காதல், அவள் கன்னி எழில், வாழ்க்கைக் கனவு எல்லாம் கவிதையாக வடிவெடுத்துப் பொங்குகிறது. கம்பீரமான, மோகனமான குரலிலே பாடுகிறான்.
அங்கிருக்கும் சிங்காதனம் கூட உருகிச் சிரக்கம்பம் செய்யும் போலிருக்கிறது. ஏன்? கம்பன் குரலைக் கேட்டதுதானே!
அங்கு இரண்டு உள்ளங்களை அது தொடவில்லை. ஒன்று வெற்றியை நினைத்து வலை வீசிய கண்களையுடையது. இன்னொன்று, அவளைக் குறித்துப் பாடுவதாக, அவள் மீது அநாவசியமாகக் காதல் கொண்டுவிட்டதாக நினைத்த நெஞ்சம்.
பாட்டு முடிந்தது!
எங்கும் நிசப்தம்.
திடீரென்று, ஆஸ்தான மண்டபமே எதிரொலிக்கும்படி எக்காளச் சிரிப்பு!
ஏளனத்திலே, பொருளற்ற கேலிக்கூத்திலே, கீழ்த்தரக் காமச் சுவையிலே தோன்றி அலைமேல் அலையாயெழுந்த அந்தகனின் எக்காளச் சிரிப்பு!
"சபாஷ், வென்றுவிட்டாயடி வாஸந்திகா!" என்று அவளுக்குக் கீச்சங் காட்டிக்கொண்டு, அவசரத்தில் எச்சிலை ஸ்படிகத்திற்குப் பதில் யார் முகத்திலோ உமிழ்ந்துவிட்டான். இருந்தாலும் உற்சாகம் ஓயக் காணோம். "என்ன, இருந்தால் உன் அழகு இப்படியல்லவா சபையில் இருக்க வேண்டும்! நூற்றில் ஒரு பெண்! நீதான் என் அரசி!" என்று இன்னும் இடியிடி என்ற ஒரு சிரிப்பு!
இது ஓயுமுன் கானப்பிரியன் அங்கு இல்லை.
3
கானப்பிரியனுக்கு உடலெல்லாம் குன்றி உயிர், உற்சாகம், கவிதை, யாவும் குவிந்தன.
நெஞ்சில் இந்திர தனுசால் அடிபட்ட மாதிரி!
பொருளற்ற, அர்த்தமற்ற மிடுக்கு, படாடோ பம்! அரசியலாம், பரிசிலாம்...சீச்சி...
அன்று இருட்டியபின்...
காளி கோயிலின் முன் கானப்பிரியன் தலைவிரி கோலமாகக் கிடக்கிறான். வெளியே இருந்த இருள் அவன் உள்ளத்தைக் கவ்வியது.
இருளில் ஓர் உருவம்.
"காவேரி!"
"கானப்பிரியா?"
பதில் இல்லை.
ஓடிவந்து தரை மீது கிடந்த தனது... எடுத்து மடிமீது கிடத்துகிறாள், மார்புடன் அணைக்கிறாள்.
"கானா! பிரியா!"
"உன் அன்பிலே, தேவி அருளிலே..." அவ்வளவுதான். கானப்பிரியனின் உயிர் தேவியின் திருவருளை நாடிச் சென்றுவிட்டது.
"அடி காவேரி! உனக்கு வேண்டும். கம்பனையே பாடுபடுத்திய சோழ பரம்பரையல்லவா! உனக்கு வேணும்! ஏன் உன் பிரியனையனுப்பினாய்?"
"அடி காவேரி...!"
1940க்கு முன்பு