சாதி ஒழிப்பு
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தென்மொழி வெளியீட்டகம்
நூற்பெயர் | சாதி ஒழிப்பு |
பொருள் | குமுகாயம் |
வடிவம் | கட்டுரை, பாடல் - தொகுப்பு |
ஆசிரியர் | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
உரிமை | திரு.தாமரை பெருஞ்சித்திரனார் |
பதிப்பு | முதல் பதிப்பு தி.பி.2036 ஆடவை சூன் - 2005 |
நூல் அளவு | மடி (தெம்மி) 18 |
பக்கம் | 72 |
தாள் | படத்தாள் |
படிகள் | 1200 |
கணினி எழுத்தாக்கம் | தமிழ்நிலம் |
வெளியீடு | தென்மொழி பதிப்பகம் |
விலை | உரு.30.00 |
4 |
6 |
7 |
எண் | ||
பதிப்புரை | 4 | |
1 | நாம் தமிழரல்லர் (பாடல்) | 6 |
2 | சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும் | 7 |
3 | இழிதொழில்கள் | 21 |
4 | சாதி சமயங்கள் | 24 |
5 | இந்தியப் பல்தமிழ்க் கழகம் அழைப்பிதழில் சாதி ஐயாவின் விளக்க விடை மடல் | 29 |
6 | சாதிக் கிறுக்கர்கள் | 31 |
7 | விடுதலையில் சாதி | 38 |
8 | என்னென்று சொல்வோம்! பாடல்) | 40 |
9 | குல சமயங்கள் | 41 |
10 | சாதிப் புழுக்கள் நெளிந்திடும் சாணித் திரளைகள் நாம்! | 44 |
11 | அயலகத் தமிழரின் பொருட்டு ஒர் அழுகை | 46 |
12 | தினமணிக் கதிரின் சாதி வெறித் தூண்டுதலை முதலமைச்சர் உடனே தடுத்து நிறுத்துதல் வேண்டும் | 51 |
13 | தினமணிக் கதிரின் திமிரானப் போக்கு | 53 |
14 | சாதி அணிகளில் திருக்குறள் அறிஞர்கள்! | 57 |
15 | நான் என்ன சாதி? | 68 |
16 | சாதி மதக் கட்டுகளை உடைத்தெறியுங்கள் | 60 |
17 | மண்டல் முழு அறிக்கை செயற்படுத்தம் - ஒரு பொது மதிப்பீடு | 63 |
18 | ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை | 68 |
தமிழ்க்குமுகாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களிடையே ஒற்றுமையின்மை பெரிய தடையாயுள்ளது. ஒற்றுமையின்மைக்குக் கரணியங்களாக அவர்களிடையே உள்ள சாதிப் பிரிவினைகளும் அப்பிரிவுகளிலே அவர்களுக்கு இருக்கும் விடாப்பிடியான பற்றுமே விளங்குகின்றன.
குமுகாய முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோர், இதுகுறித்து மக்களிடையே பலவாறாக கருத்துரை பரப்பி ஒரளவு செயலிலும் ஈடுபட்டு உழைத்து வந்துள்ளனர்; வருகின்றனர்.
"எப்படியேனும்இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்-என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!”
என்று தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தமிழகத்திற்காகவும் நாற்பான் ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டவர் நம் பாவலரேறு ஐயா அவர்கள். தமிழ் மக்களில் பலரும்,
“சாதிப்புழுக்கள் நெளிந்திடும் ஓர்மொத்தைச்
சாணித் திரளையாய்”
ஆகவே சாதிஒழிப்பைத் தன் முகாமையான பணிகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டு மேடைகளிலும் இதழ்களில் பாடல்களிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் தமிழ்மக்களுக்கு சாதி ஒழிப்பின் தேவையை தம் வாணாள் முழுமையும் வலியுறுத்தி வந்தார். தம் சொந்த வாழ்க்கையிலும் இக்கொள்கையை மாறாமல் கடைப்பிடித்தார். சாதி ஒழிப்பில் ஈடுபட்ட இயக்கங்களுடன் ஒத்துழைத்தார். சாதிகள் தோன்ற கரணியமான வர்ணப் பிரிவினை கூறிய மனுநூல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை புகுந்தார்.
ஒடுக்கப்படும் பிரிவினர்க்குரிய இட ஒதுக்கீட்டுடன் கூடிய சாதி ஒழிப்புக்கு நல்ல ஒரு மாற்றுத் திட்டம் தீட்டி வெளியிட்டார். மக்களும் அரசும் விரும்பினால் இத்திட்டத்திற்கு விளக்கமான நடைமுறை வடிவம் தருவதாகவும் அறிவித்திருந்தார். இத்திட்டம் சிறு நூலாக அவ்வப்போது வெளியிடப்பெற்று வந்துள்ளது. இதனால் மக்களிடையே ஐயா அவர்களின் திட்டத்திற்கு வரவேற்பு இருந்ததை அறியலாம்.
சாதி ஒழிப்புத் தொடர்பாக ஐயா அவர்கள் தாம் நடத்திய 'தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ் நிலம்' ஆகிய இதழ்களில் படைத்து வெளியிட்ட கட்டுரைகளும் பாடல்களும் தொகுக்கப்பெற்று இந்நூல் வெளிவருகிறது.
இந்நூலினுள், சாதியின் தோற்றம் சாதித் தீமைகள் பற்றிய விளக்கங்கள், சாதியத்தில் சமயத்தின் பங்கு சாதிக்கிறுக்கர்களின் நிலை, ஆளுவோர் நிலை, பார்ப்பனர் நிலை, பழந்தமிழர்ப் பெயர் நிலை, வாழ்நிலை, இதழ்களின் போக்கு, அறிஞர்கள் நிலை என்பனவற்றையெல்லாம் முறைப்பட விளக்கிச் செல்லும் பாவலரேறு, பொருளியலில் முன்னேறினால் சாதி ஒழியுமா என்பன போன்ற கூற்றுகளுக்கு விடை காண்கிறார். மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்தம் குறித்தும் ஐயா அவர்கள் விரிவாக விளக்கியுள்ள கட்டுரையும் இந்நூலினுள் இடம் பெற்றுள்ளது.
இந்நூல், சாதிகள் ஒழிந்து தமிழினம் ஓர்மையுற்று தலை நிமிர்ந்து முன்னேறி வாழ வேண்டும் என்று விரும்புவோர் படிக்க வேண்டிய - பரப்ப வேண்டிய நூலாக விளங்குகிறது.
இந்நூலுக்கு கணினி எழுத்தாக்கம் செய்த திரு.இராமதாசு, குட்டி என்கிற இளமுருகன், மெய்ப்பு திருத்திய தென்மொழி குழந்தை ஈகவரசன் ஆகியோர்க்குப் பதிப்பக சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
ரென்போம்!
பிள்ளையென்போம்; முதலியென்போம்;
நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! -
எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது
தொலையு மட்டும்
கூசுங்கள்; நாணுங்கள்;
தமிழ்நாட் டாரே!
தென்மொழி, இயல்-1, இசை-13 (1960)
அதை ஒழிக்கும் திட்டமும்!
சாதி யொழித்திடல் ஒன்று-நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று!
பாதியை நாடு மறந்தால்-மற்ற
பாதி துலங்குவ தில்லை!
பாவேந்தர்
சாதிநிலை வேரறுத்துச் சமயநிலை சீர்திருத்திச்
சமவுடைமைப் பொதுவுணர்வுக் கொள்கை செய்து,
பாதியிலே மொழியிழந்து, படிப்படியாய்த் தாழ்வுற்றுப்
பார்ப்பனீயக் கோட்பாட்டுக் கடிமை யுற்றுப்
பூழ்தியிலே நெளிபுழுவாய்ப் புன்மைநிலைத் தேரையதாய்ப்
புலங்கிடக்கும் தமிழனிடைப் புழங்கக் கூறி,
“வாழ்தியடா தமிழா, நீ,எனவாழ்த்துப் பாடுகின்ற
நாளொன்றை வரவழைப்போம்; வருவீர் மக்காள்!”
- பாவலரேறு
இந்தியா வேறுபாடுகள் மிகுந்துள்ள ஒரு நாடு!
இந்தியா பல இன மக்கள் வாழ்கின்ற, பல மொழிகள் பேசப்பெறுகின்ற ஒரு பெரிய நாடு. பலவகையான வேறுபாடுகள், சாதிகள், குலங்கள், கோத்திரங்கள், கிளைப் பிரிவுகள் முதலியன, குப்பைத் தொட்டியில் ஈக்கள் மொய்ப்பன போல் உள்ள பெரிய ஒரு நிலப்பரப்பு இது. இவற்றின் தீ நாற்றத்தையெல்லாம் அடியோடு மூடி மறைத்துவிட்டு, அரசியல் ஊதியத்துக்காக - பொருள் நாட்டத்திற்காகத் தேசியமும் ஒருமைப்பாடு பேசுகின்ற மூடிமறைப்பான்களைப் பற்றியும், அரசியல் திருடர்களைப் பற்றியும், ஏழைகளை உறிஞ்சிச் சாப்பிடுகிற எத்தர்களைப் பற்றியும், இங்கே நாம் பேச முன்வரவில்லை. இங்கே இனமுறையில், குமுகாய வகையில், இத்தனை வேறுபாடுகளையும் அப்படியே வைத்துக் கொண்டு, வளரவிட்டுக் கொண்டு, ஆண்டுக்கு ஆண்டு, 'குடியரசு நாள்', 'விடுதலை நாள்' கொண்டாடுகின்ற கொள்ளைக்காரர்கள், ஏமாற்றுக்காரர்களைப் பற்றித்தான், நாம் இங்கே சில செய்திகளை மனம் விட்டுப் பேசியாகல் வேண்டும்.
தன்னுரிமை பெற்றும் இன இழிவு நீங்கவில்லை!
இந்தியா தன்னுரிமை (சுதந்திரம்) பெற்று முப்பத்து ஏழு ஆண்டுகள் ஆகியும், நமக்குள் இருக்கின்ற வேறுபாடுகளும் மாறுபாடுகளும், சாதியிழிவுகளும், ஏழைத் தொழிலாளர்களை உறிஞ்சிக் கொழுக்கும் உன்மத்தங்களும் சிறு அளவிலேனும், ஒரு கடுகு அளவிலேனும், குறையும்படி, நாம் ஏதாவது செய்துள்ளோமா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாளுக்கு நாள் அரசியல் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் திருவிழாக்கள், புரையோடும் பொழுதுபோக்குகின்ற கலைநிகழ்ச்சிகள் என்று இவைதாமே அதிகமாகிக் கொண்டுவருகின்றன. அரசியல் சார்பான, அதிகாரத் தொடர்பான சட்ட திட்டங்கள் தாமே திருத்தப்பெற்றும், புதியனவாக அமைக்கப்பெற்றும் வருகின்றன.அதிகாரப் பகிர்வுகளுக்கும், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பச்சைப் பிடுங்கல்களுக்குந்தாமே நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தன்மான அடிப்படையில், குமுகாய முறைகளில் ஓர் ஒழுங்கையும், ஏற்றத்தாழ்வின்மையையும் மிகப் பலருக்குள்ள இழிவு நீக்க முறைகளையும் நோக்கி, நாம் சிறு அளவிலேனும் முன்னேறியிருக்கின்றோமா? இல்லையே! பின், எப்படி இத்தகைய போராட்டங்களையெல்லாம் நாம் தவிர்த்துவிட முடியும்? நிலைமை அப்படியே இருக்குமானால், நம்மிடம் கொலை, குத்துக்கள், வெட்டுகள் தாமே மிகுதியாகும்.
போராட்டம் தேவை!
ஓரினத்தவர், அதுவும் மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்றே பேருள்ள, மிக மிகச் சிறிய அளவினரான, பார்ப்பனர், தம்மை மேலான சாதியாக, பிராமணராகக் கூறிக் கொண்டு, பிற மக்களைத் தாழ்ந்த இழிந்த சாதியராகக் கூறிப் பெருமை பேசுவதும், அதற்கான உடல் அடையாளங்களை இட்டுக்கொள்வதும், எல்லாப் பொது மக்களும் சரிசம உணர்வுடன் புழங்க வேண்டிய இடங்களில் தாங்களே போய் அடைத்துக் கொண்டு, சண்டிமாடுகள் போல் பிறர்க்கு வழி விடாமல் தடுப்பதும் நம் கண்ணெதிராகத் தாமே நடந்து கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றி நம் அமைச்சர்கள், தலைவர்கள் எனப் பெறுவோர் எவரேனும் கவலைப்பட்டதுண்டா? பேசுவது உண்டா? இவற்றை மாற்றுவதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்து, அல்லது கொண்டுவர முயற்சி செய்ததாவது உண்டா? ஓரினத்தார் மட்டும் தெய்வத்திற்கொப்பாகத் தங்களை உயர்த்திக்கொள்வதும் பிற அனைவரையும் உழைக்கின்ற பிற இனத்தவர்களையும், தங்களுக்கென்றே உழைக்கும்படியாக ஆண்டவன் படைத்தான் என்பதும் என்ன அறநெறி? என்ன சட்டம்? இஃதெப்படிக் குடியரசு நாட்டுக்குப் பொருந்தும் சமநிலை உணர்வாகும்? இந்த ஏற்றத் தாழ்வு நிலைகள் இருக்கும்வரை இவ்வகையான போராட்டங்களும் இருந்தே தீரும். எதிர்காலத்தில் இன்னும் வலுப்பெற்று நடக்கும்.
இங்குள்ள மத ஆளுமையே அடிப்படை!
மத அடிப்படையில், ஒர் இனத்தவர் மேலாளுமையே செயல்படுமாறு நம் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுத்துக் கொண்டு எல்லாருக்கும் உரிமை, எல்லாருக்கும் சமநிலை என்று காட்டுக் கூச்சலாய்க் கத்துவதால், அடக்கி ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களுக்கு உரிமை வந்துவிடப் போவதில்லை. இந்த நாட்டை அரசியல் வல்லுநர்கள் ஆள்கிறார்கள் என்று சொல்வதைவிட மதத் தலைவர்கள் தாம் வழிநடத்துகின்றனர் என்று சொல்லப் பெறுவதே மிகப்பொருத்தமானதும், சரியானதுமாகும். இந்நாட்டின் தலைமையதிகாரவிடத்தில் இருந்து கொண்டிருக்கும் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி முதல், இங்குள்ள ஓர் அடிமை அமைச்சர்வரை, எல்லாரும் மதத்தலைவர்க்கு ஆட்பட்டுத்தானே செயல்களைச் செய்துவருகின்றனர். இஃதெப்படி ஒரு தன்னுரிமை நாடாக இருக்க முடியும்?
மதமே வேறுபாடுகளை வளர்க்கிறது;
ஆட்சியாளர்களோ அதற்கு அடிமை!
மதத்தலைவராக வீற்றிருக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதியின் பிறந்தநாள் விழா ஒன்று (1980 இல்) தில்லியில் கொண்டாடப்பெற்றது. அவ்விழாவில், இந்நாட்டின் அறுபது கோடி மக்களின் தலைவர் ஆகிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி கலந்துகொண்டு, அவர் தொடர்பான நூலொன்றை வெளியிட்டுப் பேசிய பேச்சுகள் எவ்வளவு அடிமைத்தனமானவை; அருவருப்பானவை; அப்பேச்சில் சில பொதுவான மதக் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார், இந்திராகாந்தி! அதில் 'குறுகிய மனப்பான்மைகளிலிருந்து விடுபடுவதே மதம்' என்ற பொன்மொழி ஒன்றையும் வாயவிழ்த்திருக்கின்றார் அவர். இந்தப் பொன்மொழிக்கும் அந்தக் காஞ்சி ஆச்சாரியாருக்கும் ஏதாவது ஒரு வகையிலேனும் தொடர்பிருக்கின்றது என்பதை இந்திரகாந்தியால் எடுத்துக்காட்ட முடியுமா? குறுகிய மனப்பான்மையே உருக்கொண்ட ஒருவரின் பிறந்தநாள் விழாவில் இந்நாட்டின் தலைமையமைச்சர் எப்படிக் கலந்து கொள்ளலாம்? தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் மட்டும் ஓர் உயர்ந்த பிறப்பினராகக் கருதுபவர், சாதிகள் இறைவனால் வகுக்கப்பெற்றன; அவை வேதங்களில் கூறப் பெற்றுள்ளன; எனவே அவை இருக்க வேண்டும்; அவற்றின்படிதான், அவரவர் சாதிக்கென்று வகுக்கப்பெற்றுள்ள முறைகளைத்தாம் எல்லாரும், பின்பற்றுதல்வேண்டும்; வாழ்க்கை நடத்துதல்வேண்டும் என்று கூறுபவர் எப்படிக் குறுகிய மனப்பான்மை இல்லாதவராவார்? அறிவியல் முன்னேறி வரும் இவ்விருபதாம் நூற்றாண்டுக் காலத்திலும், சாதிப்போராட்டங்கள், வகுப்புப் போராட்டங்கள் மிகுந்து வருகின்றனவே என்று நீலிக் கண்ணிர்வடிக்கும் தலைமையமைச்சர், இப்படிப்பட்ட கருத்துடையவர் ஒருவரின் விழாவில் எப்படிக் கலந்து கொள்ளலாம்? இந்திரா, காஞ்சி காமகோடியார் மக்களுக்கு வழிகாட்டி' என்கிறார். ஆனால், காஞ்சி காமகோடியாரோ, 'சாதிகள் இறைவனின் படைப்பு; அவற்றின் படிதான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்' என்கிறாரே! எனவே, இந்திரா தலைமையமைச்சராக இருந்து, எல்லாப் பிரிவினர்க்கும் சமநிலை உணர்வுடன் பாடாற்றுவார் என்பதை எப்படி நம்புவது? இதிலிருந்தெல்லாம் நமக்கு என்ன தெரிகிறது என்றால், 'பார்ப்பனீயம் என்றைக்கும் தம் நச்சுத் தன்மையை நீக்கிக் கொள்ளாது' என்பதுதான். பேசுவது ஒன்று, நடப்பது ஒன்று. நாடும் அரசியலும் இப்படி இரட்டைத்தனமான போக்கில், எதிரெதிரான திசையில் போய்க்கொண்டிருந்தால், இழிவுபடுத்தப்படுகின்ற பெரும்பான்மையான மக்கள் கிளர்ந்தெழாமல் என்ன செய்வார்கள்? அவர்கள் தங்களுக்குள் தாங்களே ஒரு முடிவை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே, இந்திரா போன்றவர்களின் போக்குகளால் ஏற்படுகின்ற முடிவு.
போராடுவது எப்படி ?
இனி, இத்தகைய சாதியொழிப்புப் போராட்டங்களை நாம் தொடங்குவதற்குமுன் ஒன்றை நன்றாக எண்ணிப்பார்த்துக் கொள்ளல் வேண்டும். முதலில் இப் போராட்டத்திற்கு முன் நம்மவர்கள் அஃதாவது சாதிகளால் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களை நன்றாக விழித்துணரச் செய்வதும், ஒற்றுமைப்படுத்த வேண்டுவதும் தலையாய கடமைகள்.
முதலில் சாதியுணர்வு போக வேண்டாமா?
பொருளியல் முன்னேற்றத்திற்காகத்தான்
நாம் ஏன் அதைப் பாராட்டவேண்டும்?
சாதிகளுக்கு அடிப்படையாக உள்ள மத ஆளுமையே பார்ப்பனீயமாக இங்கு மலர்ந்துள்ளது. எனவே, பார்ப்பனீயத்தை (பார்ப்பனர்களை யன்று) நாம் தகர்க்க விரும்பினால், அதற்கான முயற்சிகளை நாம் பார்ப்பனர்களிடம் செய்யக் கூடாது; செய்து பயனில்லை. நம்மவர்களிடந்தாம் அத்தகைய முயற்சிகள் செய்யப்படவேண்டும். பார்ப்பனீயத்தை நாம் தவிர்க்க விரும்புகிறோம் என்றால், அதன் மேலாளுமையை நீக்கப் பாடுபடுகின்றோம் என்றால், அந்தப் பார்ப்பனர்களால் உருவாக்கப் பெற்ற சாதிகள் நமக்கு எதற்கு? அந்த உணர்வை நாம் விலக்க வேண்டாமா? அதை நாம் எப்படி நீக்குவது? அது மிகவும் தீங்கான ஒன்று, நம்மை மேலும் மேலும் வேறுபடுத்திக் கொண்டு, ஒற்றுமையடைய விடாமல் தடுக்கின்ற ஒன்று, நம் முன்னேற்றத்திற்குத் தடையான ஒன்று என்று தெரிந்திருந்தும், அதைப் பொருளியல் முன்னேற்றத்தின் பொருட்டாகத்தான், நாம் ஏன் அழிக்காமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?
முதலில் நாம் அறிவின் மேலும் உழைப்பின் மேலும்
நம்பிக்கை வைக்க வேண்டும் !
நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பார்ப்பனர்கள் தங்களின் இன ஒற்றுமையினாலும், அறிவின் மேல்வைத்த நம்பிக்கையினாலும், கூட்டுணர்வினாலும் கடந்த ஈராயிரமாண்டுகளாக இந்நாட்டில் தொடர்ந்த ஒரு பிழைப்பை-வாழ்க்கையை நடத்தி வருகிறார்களென்றால், நூற்றுக்குத் தொண்ணுற்றேழு பேராக உள்ள நாம் ஏன் நம் அறிவின் மேல் அவநம்பிக்கையும், உழைப்பின்மேல் நம்பிக்கையின்மையும், ஒற்றுமையின் மேல் ஐயமும் கொள்ளுதல் வேண்டும்? உண்மையிலேயே பார்ப்பான் நம்மை அடிமைப்படுத்தவில்லை; பார்ப்பனீயந்தான் நம்மை அடிமைப் படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாமே நம்மைத் தாழ்த்திக் கொள்ளலாமா?.
அவன் சாதிப் பெருமைக்காகத்தான் தன்னைப் 'பிராமணன்' என்று சொல்கின்றான் என்றால், நாமும் ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏன் நம்மைப் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்றெல்லாம் கூறிக்கொண்டு, அவன் நம்மைச் 'சூத்திரன்' என்று சொல்லாமற் சொல்வதற்குப் பொருளேற்படுத்திக் கொடுக்க வேண்டும்? அவன் தன்னைப் பிராமணன் என்று சொல்வதால், நம்மைச் 'சூத்திரன்' என்று நாம் ஒப்புக் கொண்டதால், அவனை நாம் 'பிராமணன்' என்ற நிலைக்கு உயர்த்தி விட்டோம் அல்லது அவன் தன்னைப் 'பிராமணன்' என்று கூறிக் கொள்வதை நாமும் ஏற்றுக் கொண்டோம் என்பதாகாதா? 'சூத்திரன்’ என்றால் என்ன? 'பிற்படுத்தப்பட்டவன்' அல்லது "தாழ்த்தப்பட்டவன் என்றால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? 'குப்பை' என்றால் என்ன? அல்லது 'தள்ளப்பட்டது' 'ஒதுக்கப்பட்டது' என்றால் என்ன? எல்லாம் தன்மையில் அல்லது பொருளில் ஒன்று தானே! சொல்லில் தானே மாறுபாடு இதை நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். நமக்குள் ஏன் ஒற்றுமையில்லை ?
மேலும் பார்ப்பான் என்று அவனை நாம் சொல்கிறோம். அவன் இனத்துக்குள் 'சாதிச் சண்டைகள், குலச்சண்டைகள், கோத்திரச்' சண்டைகள் தோன்றுவது உண்டா? ஒர் அய்யரும் அய்யங்காரும், அல்லது ஒரு கோத்திரமும் இன்னொரு கோத்திரமும் முட்டிக்கொண்டன என்று நாம் கண்டிருக்கிறோமா? நூற்றுக்கு மூன்று பேராக உள்ள அவர்கள் அப்படியிருந்தால், நூற்றுக்குத் தொண்ணுற்றேழு பேராக உள்ள நாம் ஏன் ஓர் அறுபது விழுக்காடேனும் அவர்களைப் போல் ஒற்றுமையாயில்லை?
நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டு,
பழிகளை அவன்மேல் போடுகின்றோம்!
நமக்குச் செருக்கு அதிகம்; திமிர் அதிகம்; ‘சாதி வெறி மிகுதி!நமக்குள்ளேயே நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்தப் பார்க்கின்றோம்; கெடுக்கப் பார்க்கின்றோம்; ஒருவர் முதுகில் ஒருவர் குத்தப் பார்க்கின்றோம்; அடித்துக் கொள்கின்றோம். பார்ப்பான் ஏற்படுத்திக் கொடுத்த சாதியை விடாமல் நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே, நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ளப் பார்க்கின்றோம். அவன் நம்மை அழைத்த இழிவுப் பெயராலேயே நாம் சலுகைகளையும், பொருள் நலன்களையும் துய்க்கப் பார்க்கின்றோம். அப்படித் துய்த்துக் கொண்டே நாம் நம்மை முன்னேற்றிக் கொள்ள விரும்புகின்றோம். அதற்குப் பல நொண்டிச் சாக்குகளையும், நொள்ளைக் காரணங்களையும் கூறி, வெட்கமில்லாமல், குமுகாயத்தின் அடிப்படிகளில் நின்று கொண்டு, மடி விரித்துக் கேட்கின்றோம். நாம் இவற்றாலெல்லாம் எப்படி முன்னேறிவிட முடியும்? இழிவுகளைப் போக்கிக் கொள்ள இயலும்? நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டு, பழிகளை அவன் மேல் போடுகின்றோம்; அவன்தான் நாம் செய்து கொள்ளும் இழிவுகளுக்குக் காரணம் என்று கூக்குரலிடுகின்றோம்.
பார்ப்பனரின் முன்னேற்றத்திற்கு அவர்களின்
இனநல முன்னேற்றக் குணங்களே காரணம்!
இனி, அறிவு முன்னேற்ற வகையில், பார்ப்பனர் தங்களுக்குள் எப்படி ஒருவர்க்கொருவர். கைகொடுத்து முன்னேற்றி விட்டுக் கொள்கின்றனர்! எப்படி ஒருவரை ஒருவர் தூக்கி விடுகின்றனர்! ஆ! ஒரு சிறு திறமை எங்கேனும் ஓர் எளிய ஏழைப் பார்ப்பானிடம் இருந்தாலும், என்னமாய் அதைப் பெரிதுபடுத்தி, விளம்பரப்படுத்தி அனைவருக்கும் தெரியச் செய்து, அவனுக்குத் துணை நின்று, அவன் அறிவு முயற்சிக்குத் தூணாக இருந்து தோள்கொடுத்து, எப்படியெல்லாம் அவனை ஆதரித்துப் போற்றுகின்றனர்! அவர்களில் எவராவது ஒருவரை ஒருவர் பின்னிழுக்கின்றனர். அல்லது கீழறுக்கின்றனர் அல்லது காட்டிக்கொடுக்கின்றனர், அல்லது பிடித்துக் கீழே அமுக்குகின்றனர், அல்லது தான்தின்னியாய்த் தான் ஒருவனே, தனக்கு எப்படியோ வாய்த்த 'அரசியல்' 'பொருளியல்' நலன்களைத் துய்க்கின்றனர் என்று சொல்ல முடியுமா? அவர்களின் வேதமதக் (இந்து மதக் கொள்கைக்கு) எவரேனும் ஒரு சிறு முயற்சி செய்கின்றார் என்றால், அவர் நம் சற்சூத்திரர்களில் ஒருவராகத்தான் இருக்கட்டுமே, அவரை என்னமாய்ப் போற்றிப் புகழ்ந்து புரந்து காக்கின்றனர் என்பது தெரியாத ஒன்றா? அதனால்தானே வீடணன் காலத்திலிருந்து, பிரகலாதன் காலத்திலிருந்து. வையாபுரிகளும் மீனாட்சிகளும், மகாலிங்கங்களும், முத்தையாக்களும், சிவஞானங்களும், பக்தவத்சலங்களும், சுப்பிரமணியன்களும், கண்ணதாசன்களும், அடியார்களுமாக எத்தனைப்பேர் அவர்களுக்காகப் பரிந்துபேசி, செய்து உயிர் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள்!
அறிவைப் பாராட்டுகிற செய்தி நம்மிடம் உண்டா ?
இப்படி அறிவைப் பாராட்டுகிற செய்தி, ஒரு தாராள மனப்பாங்கு, பொதுநோக்கு, நடுநிலைமை நம்மிடம், திருவள்ளுவர் காலத்திலிருந்து என்றேனும் இருந்ததுண்டா? இன்றேனும் இருக்கிறதா? ஒருவன் நம் கொள்கைக்கு என்று வந்து கொடி தூக்கவில்லையானால், நமக்காகத் கத்தவில்லையானால், அவன் எவ்வளவு பெரிய அறிஞனாக, திறமையுள்ளவனாக, பொதுத்தொண்டனாக இருந்தாலும், நாம் அவனைத் திரும்பிப் பார்க்கிறோமா? அவன் அறிவைப் பாராட்டுகிறோமா? எத்தனைத் தன்னலம்! கஞ்சத்தனம்! பொறாமை! புகழ்க்காய்ச்சல்! அப்பப்பா! கொஞ்சமா நஞ்சமா? இப்படியிருந்தால் நாம் பார்ப்பன இனத்தைப்போல் எப்படி அறிவில் முன்னேற முடியும்? எப்படி நம் பெருமையை நம் உலகமெல்லாம் மதிக்கும்படி செய்துகொள்ள முடியும்? பார்ப்பனர் செய்கின்ற அறிவு முயற்சிகளில், அறிவை மதித்துச் செயல்படுகின்ற தன்மைகளில் நூற்றுக்கு ஒரு விழுக்காடேனும் நாம் செய்கின்றோமா?
இவற்றுக்கெல்லாம் நம் சாதி வெறியே காரணம்!
இவ்வாறெல்லாம் நாம் இழிவான நிலைகளில் செயல்படுகிறதற்கு நம்மிடம் உள்ள சாதிகளே, சாதியுணர்ச்சிகளே அடிப்படைக் காரணங்களாக உள்ளன என்னும் உண்மையை நாம் ஆழமாக எண்ணி விளங்கிக்கொள்ள வேண்டும். இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கினால் விளங்கும் என்று தோன்றுவதால், அதையும் சிறிது விரிவாக எழுதிக்காட்ட வேண்டியுள்ளது.
முதலில் ஒருவன், நம்முள் சிறந்த தலைவனாகவோ, அறிவாளியாகவோ இருப்பானேயானால், அவன் என்ன சாதியைச் சேர்ந்தவன் என்று முதலில் நாம் ஆராய முற்படுகிறோம்! அவன் நம்முடைய சாதியானாக இருக்கக் கூடாதா என்று ஆசையேக்கம் கொள்கின்றோம். அவன் நம் சாதியானாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம் அவ்வாறு இல்லாதவிடத்து அவனை வெறுக்கிறோம்; பொறாமைப்படுகிறோம்; குறைத்து மதிப்பிடுகிறோம். இன்னும் அவனிடத்தில் உண்மையிலேயே ஏதாவது ஒரு குறை தென்படாதா என்று, அவன் அறிவு நிலைகளையும் நடவடிக்கைகளையும் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்க்கின்றோம். ஒன்றாவது தென்படவேண்டுமே என்று அவன் குணநலன்களைத் தெள்ளி, அலசிப் பார்க்கின்றோம், அவ்வாறு ஏதாவது ஒரு குறையோ நெகிழ்ச்சியோ தென்படுமாயின் அதனையே பெரிதுபடுத்தி, அதனுடன் நம் கற்பனையையும் எரிச்சலையும் கலந்து ஏதோ ஒரு கதையை உருவாக்கிக் கொண்டு, அதையே அனைவர்க்கும் தெரியச் செய்து, பழி தூற்றுகிறோம், அவனை இழிவுபடுத்துகிறோம். இத்தனை நிலைகளும் சாதியினால் வருகின்ற மனவுணர்வுகள் என்பதைப் பிறர் கண்டுகொள்ளதபடி நாம் எச்சரிக்கையாகவே இருந்து செயலாற்றுகிறோம்.
சாதியே நம்மை முன்னேறவிடாமல் தடுக்கிறது!
எனவே, சாதிநிலை நம்மை ஒருவர்க்கொருவர் முன்னேற விடாமல் செய்யும் அடிப்படையான தாழ்வுணர்வாக-வீழ்வுணர்வாக இருக்கின்றது. இந்த இழிவானநிலையினின்று - நம்மை மீண்டும் மீண்டும் குழிக்குளேயே, சேற்றுக்குள்ளேயே புதைத்துக் கொள்கின்ற மனநிலையினின்று நாம் எவ்வாறு விடுபடுவது? நம்மையே நாம் உணர்ந்து கொண்டாலன்றோ, விடுவித்துக் கொண்டாலன்றோ, சாதியுணர்வும் நம்மிடமிருந்து கழலும். சாதியிலிருந்து நாமே விலகாத வரையில், சாதி நம்மைவிட்டு விலகாது. சாதி வேறெங்கும் வெளியில் இல்லை. அது நம் உள்ளத்துக்குள்ளேதான், அறிவுக்குள்ளேதான் உணர்ச்சிக்குள்ளேதான் இருக்கிறது. அங்குதான் அஃது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே, நாமே அதை வெளியேற்றாத வரையில், அதுவாகவே நம்மை விட்டுப் போய்விடாது உண்மையாகச் சொல்வதானால், நாம்தாம் அதை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கின்றோம்; நாம்தாம் அதற்கு நீரூற்றுகிறோம்; எருப்போடுகிறோம்; காவல் செய்கின்றோம். அது மடிந்து போவதில் நமக்கு விருப்பமில்லை. அஃது இல்லாமற்போனால் நமக்குப் பெருமையில்லை, வாழ்வில்லை என்று கருதிக்கொண்டு, அதை நாம் காப்பாற்றி, மாய்ந்துவிடாமல் வாழ்வித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அது எப்படி இல்லாமல் போய்விடும்?
உண்மையிலேயேசாதிநம்மைப்பிடித்துக்கொண்டிருக்கவில்லை;
நாம்தான் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையாகச் சொல்வதானால் சாதி நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; அதைத்தான் நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம். அஃது இல்லையானால் நமக்கு வாழ்வில்லை என்று கருதி, அதைத் தலைமுறைச் சொத்தாக வைத்துப் பேணிப் பெருமை பேசி வருகிறோம். அதில் ஒருவகைக் கவர்ச்சி தெரிகிறது; ஒரு போலிப் பெருமை தென்படுகிறது. அதன் விளைவுகள் நம் வாழ்க்கைக்குப் படிக்கட்டுகளாக அமைகின்றன என்று தவறாகக் கருதுகின்றோம். எந்த வகைப் பெருமையோ சிறப்போ இல்லா நமக்கு அஃது ஒருபோலிப் பெருமை எண்ணத்தையும் சிறப்புச் செருக்கையும் உருவாக்கிக் கொடுக்கிறது. மெய்யாகவே சாதி ஒழிய வேண்டும் என்று நம்மில் எவருமே உண்மையாக விரும்பவில்லை. நாம் அனைவருமே பொய்யாகவே அதை ஒழிக்க முயல்கிறோம். அதை வெறுக்காமல் வெறுத்ததுபோல் பேசுகிறோம்; எழுதுகிறோம்; செயல்படுகிறோம். உண்மையாக இந்த வகையில் நாம் நன்றாகத் திறம்பட நடித்துக் கொண்டிருக்கின்றோம்.
சாதியை நாம் நினைத்தால் ஒழிக்க முடியாதா? முடியும் !
சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் உண்மையிலேயே நமக்கிருக்குமானால், அது ஒழியாதா என்ன? அதை அழியச் செய்ய முடியாதா? என்ன? அஃதென்ன பூதமா? அல்லது மெய்ப்பொருளா? அல்லது என்றுமே அழியாத இயற்கை அமைப்பா? ஒழிக்க முடியவில்லை என்பதற்கு! உண்மையாகவே இந்த வகையில் இன்னும் நமக்குத் தெளிவான அறிவு வரவில்லை; உணர்வு தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்!
ஆனால், சாதி ஒழிய விரும்பாதவர்கள்
இன்றும் உள்ளனரே!
சிலர், சுற்றி வளைத்து, அஃது ஒழிய, அல்லது ஒழிக்க விரும்பாத மனத்தினராகவும், சிலர், அதனால் இக்கால் கிடைத்துவரும் சலுகைகளைத் துறக்க விரும்பாத நிலையினர் அல்லது உளத்தினராகவும் இன்னும் சிலர், அதை ஒழிப்பதில் உள்ள இடர்ப்பாடுகளையும் இயலாமைகளையும் கூறி, அதன் முயற்சி வெறுமையைச் சுட்டினராகவும், பலவாறும் பற்பல வகையான கருத்துகளை நம்மிடையே எடுத்துக் கூறுகின்றனர். ஆனால், ஒட்டு மொத்தத்தில், இப்பொழுதுள்ள நிலையில், சாதி ஒழிய வேண்டாம் என்று கருத்து கொள்ளும் வஞ்ச நெஞ்சினரும், காரறிவாண்மையரும், கயவரும், குமுகாயக் கொடியவர்களும், இவ்விருபதாம் நூற்றாண்டு அறிவியல் காலத்திலும், ஓரளவில் இருக்கவே செய்கின்றனர் என்பது மிகவும் வருந்துவதற்கும், நாம் மேற்கொண்டு வலிந்து உடனடி முயற்சி செய்வதற்கும் உரியதாகவிருக்கின்றது.
இதுவும் ஒருவகை முதலாளியக் கோட்பாடே!
பொருளியல் முதலாளியக் குமுகாய உள்ளரிப்பு நிலைபோல், சாதியுணர்வும், நிறவெறியும் ஒருவகை முதலாளியக் கோட்பாடேயாகும் என்பதை அனைவரும் நன்கு தெளிந்து கொள்ளுதல் வேண்டும். அறியாமையைப் பின்பற்றுதலாலும், பிறரை அடக்கியாளல் வேண்டும் என்னும் அக இறுமாப்பாலும் ஆளுமைச் செருக்கினாலும், சாதிகளால் கிடைத்துவரும் சலுகைகளை விட மனமின்மையாலுமே, சாதிகள் இருப்புக்குக் கட்டியங் கூறி, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, எழுதியும் பேசியும் வருகின்றனர் சிலர். சிலரோ, மானமிழப்புக்கும் பொருளிழப்புக்கும் வேற்றுமை உணராது, பொருள் நயப்பால் சாதிச் சகதியுள்ளேயே புதையுண்டு போக விரும்புகின்றனர்.
கோழைகளால் என்றுமே எதுவுமே செய்ய முடியாது!
ஒரு முறை நமக்கு வந்த மடல்களுள் ஒன்று, இத்தகைய கருத்தை வலியுறுத்தி, நாம் பார்ப்பனீயத்திற்காக வழக்காடுவதாகக் குறை சுட்டியிருந்தது. சாதி யொழிப்பிற்கு நாம் கூறும் மாற்றுத் திட்டம் என்னவென்றும் கேட்டிருந்தார், அம்மடலை எழுதியவர். ஆனால் அந்த மடலில் எழுதியவர் பெயரும் முகவரியும் இல்லாமலிருந்தது. அதை எழுதியவரின் கோழைமையையும், ஏழைமையையும் நமக்குப் புலப்படுத்திக் காட்டியது. இத்தகையவர்களால் என்றுமே எதையுமே செய்துவிட முடியாது என்பதை நாம் நன்கு அறிவோம்.
சாதியொழிப்பிற்கு ஒரு புதிய திட்டம் !
எனவே, இவைபற்றியெல்லாம் பேசிக்கொண்டிராது, சாதியமைப்பு, அறிவியல் சான்ற குமுகாயப் பொதுநிலை மீமிசை மாந்த முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையும் இழிவும் ஆகும் என்னும் கருத்தே மேனிலையாக்கம் கொண்ட கருத்தாதலின், அதன் ஒழிப்புநிலை பற்றி மிகச் சுருக்கமாக, இக் கட்டுரைக்கண் ஒரு திட்டம் அமைத்துத் தருவோம். அரசினர்தாம் இதனைச் செயல்படுத்துவதற்குரியவர் எனினும், பொதுமக்களும் புலமக்களும் அதற்குத் துணையாக நிற்பது மிகமிக இன்றியமையாததாகும்.
முதலில், நெடுநாளைய தீமை ஒன்றை விலக்க
நலன்கள் சிலவற்றையும் இழப்பதில் தவறில்லை!
முதற்கண், ஒரு தீமையை, அதுவும் நீண்ட நெடுங்காலமாக நம் உள்ளத்திலும், உணர்விலும், ஏன், உடலிலும்கூட, பற்றுப்படையாகவும், ஒட்டுண்ணியாகவும், படர்ந்து, நம்மை அதுவும், அதனை நாமும் விடுதலிலா விருப்பத்துடனும் விட்டு விலகா மனத்துடனும் தொடர்பு கொண்டுள்ள சாதிச் சுவையை அல்லது மயக்கத்தை, அல்லது செருக்கை ஒழிக்க வேண்டும் என்றால், சில நலன்களைக்கூட - சலுகைகளையும் சேர்த்தே குறிப்பிடலாம் - நாம் இழந்தே ஆகல் வேண்டும் அடிமைச் சுவை நலன்களைப்போல் சாதிச்சுவை நலனும் மானமிழப்பை உணரச் செய்யாமல் உள்ள-மனம் மரத்துப்போன உணர்வுடையதே! எனவே நெடுநாள் பழக்கத்தை விட்டு விலகும் மன ஆற்றாமை அதிலும் உண்டு. ஆனாலும் அறிவும் உணர்வும் வளரப்பெற்றவர்களாக, தாமே அச் சாதிப் பிடிப்பினின்று விலகும் நல்லுணர்வாளர்களைத் தவிர, மற்ற அல்லுணர்வாளர்களை, அரசு கழுத்தைப் பிடித்தேனும் நெட்டித் தள்ளிக்கொண்டு, சாதிக்கேட்டுக்கு வெளியே கொணர்ந்து நிறுத்தத்தான் வேண்டும். இஃது ஒரு பனிமலைப் பெயர்ப்பு முயற்சிதான். ஆனாலும் அணுவாற்றல் மிகுந்த இவ்வூழியுள் அதனை எவ்வாறேனும் செய்தேயாகல் வேண்டும்!
சாதியொழிப்புக்கு இதுவரை வெளிப்படுத்திய கருத்துரைகளைவிடச்
செயல் முயற்சிகள் குறைவு!
சாதியொழிப்புக்கு இதுவரை ஏற்பட்ட அறநூலாக்கங்கள், குமுகாய மேம்பாட்டு விழிப்புரைகள், வேண்டுகோள்கள், விளம்பரப் பரப்பல்கள் என்னும் பலவற்றைவிட அதற்காகச் செய்யப் பெற்ற முயற்சிகள் மிகமிகக் குறைவே. அதுவும் சாதி ஒழியாததற்கு ஒரு பெருங் காரணமாகும். சாதியுணர்வுக்கு ஆளான ஒரு கோடிப் பேர்களுள் ஒரு பத்தாயிரம் பேர்களே சாதியொழிப்புணர்வு கொண்டுள்ளனர்; அப் பத்தாயிரத்துள் ஓர் ஆயிரம் பேர்களே சாதியொழிப்பு பற்றிப் பேசுகின்றனர்; அவ்வாயிரத்துள் பத்துப்பேர்களே ஏதேனும் முயற்சி செய்கின்றனர்; அவர்களுள்ளும் ஒரிருவரே சாதியுணர்வை ஒழித்துப் புது மாந்த இனத்துள் தங்களையும் உறுப்பினர்களாக்கிக் கொள்கின்றனர்; எனவேதான் சாதியுணர்வு, நகர்த்தவியலாத சண்டிமாடு போல், நம் முன்னேற்றப் பாதையுள் ஆழக் குழிபறித்துக்கொண்டு படுத்துக் கிடக்கின்றது.
சாதியுணர்வும் பொருளியல் பின்தங்குதலும் ஒன்றையொன்று இணைத்துக் கொண்டுள்ளன!
இனி, சாதியுணர்வும், பொருளியல் பின் தங்குதலும் ஒன்றையொன்று இணைத்துப் பிணைத்துக் கைகட்டிக் கொண்டு ஒத்து நடையிடுவதால், இரண்டில் ஒன்றைப் பிரித்து, ஒன்றுக்கு விடுதலையளிப்பது, இயலாத ஒரு பெரும்பாடாக விருக்கின்றது. இந்நிலை, அவற்றுக்காகத் தனித்தனி முயற்சி செய்பவர்களிடம் ஒரு சோர்வையே உண்டாக்குகின்றது. எனவே, ஒன்றினால் மற்றொன்று தடைப்படாத ஒருவகைத் திட்டத்தையே நாம் தெரிவுசெய்து, செயல்படுத்த வேண்டி உள்ளது.
இதுவரை செய்த முயற்சிகளும்
இறுதியான, செயலுக்குரிய ஒரு திட்டமும்!
இதுவரை சாதியொழிப்புக்குக் கலப்பு மணம், மன மாறுபாடு, கருத்துப் பரப்புதல், சட்டமிடுதல் முதலிய பல திட்டங்களையும்
அறிஞர்களும் அரசும் அறிமுகப்படுத்தியும், ஓரளவு செயற்படுத்தியும் வந்துள்ளனர். இவற்றுள் மனமாறுதல் என்பது, அறிவும் பொதுமையுணர்வும் வளர வளர உருவாவது. இதுநாள் வரையும், இனியும் இம் முயற்சிகள், தொடர்ந்து நடைபெற்று வந்ததும் வருவதும் இன்றியமையாததே! நாகரிகமும் பண்பாடும் வளர்ந்த நிலையில் இம்மனவுணர்வு சிறிது சிறிதாக நெகிழ்ச்சி கொள்வதும் உண்மை. இதுதவிர, இன்றைய நிலையில், சில அரசு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
அது தொடர்பாக இங்கே தரப்பெறுகிற, நன்கு புலனாய்ந்த ஒரு செயல்முறைத்திட்டம் உண்மையிலேயே வினையாக்கத்திற்கு வருமானால் நல்ல பயன்விளையும் என்று நாம் மனமார நம்புகின்றோம். அத் திட்டம் இது!
இச் சாதியொழிப்புத்திட்டம் ஐந்து படிநிலையாகச் செயல்படுத்தும் முறைகளைக் கொண்டது. அவற்றைப் படிப்படியாகப் பார்ப்போம்.
1. புறநிலைச் சீராக்கங்கள்: முதல்நிலை-ஐந்தாண்டு)
இத்திட்டம் செயலுக்கு வந்த நாள் முதல் ஐந்தாண்டுகள் முயற்சி பற்றியது இது:
1. சாதிப் பெயர்களைத் தம் பெயர்களுடன் இணைத்து எழுதுவதற்குத் தடையிடுவது.
2.சாதிப் பெயர்கள் இணைந்த வீட்டுப் பெயர்கள், கடைப் பெயர்கள், நிறுவனப் பெயர்கள், அறக்கட்டளைப் பெயர்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகப் பெயர்கள், தெருப்பெயர்கள், சிற்றுார்ப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் முதலியவற்றிற்குத் தடையிட்டு அவற்றை மாற்றியமைப்பது.
3. சமயத் தொடர்பான சாதி விழாக்கள், சாதித் தெய்வங்கள் இவற்றுக்குத் தடையிடுவது.
4. சாதிகள் தொடர்பான ஒட்டுமொத்த இணைப்பு முயற்சிகள், கூட்டங்கள், மாநாடுகள், சிறப்பு வெளியீடுகள் முதலியவற்றிற்குத் தடையிடுவது.
5. பள்ளி, கல்லூரிப் பதிவுகளில் சாதிப் பெயர்ப் பதிவுகளை நீக்கி, பின்வரும் திருத்த நிலைகளுக்கு ஏற்பக் குறியீடுகளை இடுவது இவற்றை முதல் ஐந்தாண்டுக்குள் செய்து முடித்துக் கொள்ளுதல் வேண்டும்.
6. சலுகை முறைக் கல்வி, தொழில் ஈடுபாடுகளை முதல் ஐந்தாண்டில், அதை விரும்பி வேண்டுவோர் கருத்துக்கிணங்க இன்றுள்ள நிலைகளை அப்படியே தொடரச் செய்யலாம்.
(இதில் ஐந்தாண்டுகள் என்பதை, அரசினர் விருப்பத்திற்கும் விரைவுக்கும் வினைக்கடுமைக்கும் ஏற்ப குறைக்கவும் செய்யலாம்)
2. அகநிலைச் சீராக்கங்கள் : இரண்டாம் நிலை - ஐந்தாண்டு)
கல்வி, தொழில் முறை ஏற்பாடுகளில், மக்களைக் கீழ்வரும் நான்கு நிலைப் பொருள், இனப் பகுப்புகளாகப் பகுத்து முன்னேறுவதற்குரிய சலுகைகளைத் தருதல்.
1. மிக முன்னேறியவர்கள் (மி.மு.ஏ): சாதியாலும் பொருளியலாலும் முன்னேறியவர்கள். இவர்களுக்கு வகைக்கு இரண்டிரண்டு கூடுதல் எண்கள் மேனி நான்கு எண்கள் (+2+2=+4) தரப்பெறுதல் வேண்டும்.
2. முன்னேறியவர்கள் (மு.ஏ.): சாதி, பொருளியல் இவற்றுள் ஏதேனும் ஒன்றில் மேம்பட்டு நிற்பவர்கள் இவர்களுக்கு இரண்டு கூடுதல் எண்கள் (+2) தரப்பெறுதல் வேண்டும்.
3. பின் தங்கியவர்கள் (பி.த); சாதி, பொருளியல் இவற்றுள் ஏதேனும் ஒன்றில் பின்தங்கி நிற்பவர்கள் இவர்களுக்கு இரண்டு குறைதல் எண்கள் (-2) தரப்பெறுதல் வேண்டும்.)
4. மிகப் பின்தங்கியவர்கள் (மி.பி.த.):
(சாதியாலும் பொருளியலாலும்) - இவர்களுக்கு இரண்டிரண்டு குறைதல் எண்கள் (-2-2=4) தரப்பெறுதல் வேண்டும்.
இந்த எண்கள் அடிப்படையில் அவர்களுக்குத் திட்டமிடப் பெற்ற சலுகைகள் தரப்பெறுதல்வேண்டும்.
இவர்களின் தரத்துக்கு அடையாளமாகக் கல்வி, தொழில் வகைச் சான்றிதழ்களில், இந்நான்கு வகையான எண் குறியீடுகளே இடப்பெறுதல் வேண்டும் மற்றும் இவர்களுக்கான சாதிக் குறியீடுகள் முதற்பதிவை மிகக் கமுக்கமாக வைத்தல் வேண்டும் (தேவையானால் குறிப்பிட்ட கால எல்லைக்குப் பின்னர் அவற்றையும் அழித்து விடலாம்)
(எ-டு)
1. நலங்கிள்ளி (+4) 3. நெடுஞ்செழியன் (-4)
2. சேரலாதன் (+2) 4. இளங்குட்டுவன் (-2)
3. அகநிலைச் சீராக்கங்கள் : (மூன்றாம் நிலை - ஐந்தாண்டு)
இரண்டாம் ஐந்தாண்டுப் பதிவாளர்களை மறுஆய்வு செய்தும், பிறரைப் புதுமுறையிலும், கீழ்க்காணும் வகையில் இருநிலை-பொருள், இன மக்கள் பகுப்புகளாகப் பிரித்து, முன்போலவே எண் குறியிட்டு, முன்னேற்றத்துக்குரிய சலுகைகளைத் தருதல் வேண்டும். 1) மிக முன்னேறியோர் (மி.மு.ஏ):
சாதி + பொருள் = +2
2) மிகப் பின் தங்கியோர் (மி.பி.த.):
சாதி + பொருள் = -2
4. அகநிலைச் சீராக்கங்கள்: நான்காம் நிலை - பத்தாண்டு)
மூன்றாம் ஐந்தாண்டுப் பதிவாளர்களை மறு ஆய்வு செய்தும், பிறரைப் புதுமுறையிலும், கீழ்காணும் வகையில் இருவகைப் பொருள்வகை மக்கள் பகுப்புகளாகப் பிரித்து, முன்போலவே எண்குறிகளடிப்படையில் முன்னேற்றத்துக்குரிய சலுகைகளைத் தருதல் வேண்டும்.
1. அரசுதவி தவிர்த்தோர் (அ.உத): பொருள் நிலை மட்டும் (+) 2. அரசுதவி பெறுவோர் (அ.உ.பெ) பொருள் நிலை மட்டும் (-)
5. 25 ஆண்டுகளுக்கு மேல் (ஐந்தாம் நிலை)
பொருள் நிலைச் சலுகைகளைத் தேவையானால், மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து தரலாம். தேவையில்லையெனில் நீக்கி விடலாம்.
ஆனால், மேற்குறித்த 25 ஆண்டுக் காலத்திற்குள் சாதியுணர்வுகளும் பெயர்களுமே ஒழிந்துபோய்விடும். மொழி தழுவிய தேசிய இனப் பெயர்களே தமிழர், ஆந்திரர், கன்னடர், மலையாளர் முதலியனவே நிற்கும். புதிய பொருள் நிலைக் குமுகாயந் தோன்றிவிடும்.
இத்திட்டம் பொதுமக்கள் கவனத்துக்கும், அரசுப் பார்வைக்கும் வந்து, மேற்கொண்டு விளக்கங்கள் கேட்கப் பெறும் பொழுது, விரிவாகவும் விளக்கமாகவும் நடைமுறை வடிவாக்கித் தரப்பெறும். இப்பொழுது இந்த அளவில் போதும் என்று கருதுகிறோம்.
எவ்வாற்றானும் சாதித் தொடர்பான அனைத்து நிலைகளும் நம் காட்டு விலங்காண்டித்தனத்தையே காட்டுவனவாகும் எனும் உணர்வு நம்மிடையே வேண்டுவதாகும்.
(தென்மொழி சு-17; ஓ1, 2 ஆசிரியவுரை)
(1980)
தண்டமிழ் நிலவிய பண்டைத் தமிழ் நாட்டில் வாழ்ந்தோர் இழிந்த தொழில் என்று கருதிய தொழில் ஒன்றே யொன்றுதான். அது மானம், அறிவு, முயற்சி அத்தனையும் விட்டுவிட்டு வெறும் குடலுக்கும் வாய்க்கும் அடிமைப்பட்டு, அறியாதவனிடமோ, அறிந்தவனிடமோ போய் "எனக் கொன்று ஈவாயாக" என்று இரப்பது. இதனை,
'ஈயென விரத்தல் இழிந்தன்றே!' (புறம்-204)
'ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே' (தொல்-எச்-சூ-49)
என்பவற்றால் அறியலாம்.
“தாமாகப் போய் இரப்பதுதானே இழிவு. அவராகவே கொடுப்பின், அதை ஏற்பது இழிவோ?" என்று வினவுவார் "அவ்வாறு ஏற்பது இழிவு மட்டுமன்று; தீமை பயப்பதும் ஆகும்" என்பது அவர் கொள்கை என்றறிக. இதனை,
'ஏற்பது இகழ்ச்சி" (ஒளவையார்-ஆத்திச்சூடி)
'கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்" (கம்ப-வேள்வி-29)
"நல்லா றெனினுங் கொளல் தீது" குறள்-222)
என்பவை விளக்கிக்காட்டும்.
இனி, இவற்றைவிட வேறெதுவும் இழிந்ததிலையோ வென்பார்க்கு, வேறொன்றும் உண்டு. அது அத்தகைய இழிவைக் கருதாமல் பிறர்பால் போய் ஒருவன், 'ஈயென்று கேட்டு 'ஈயேன்” என்று வைத்துக் கொண்டே மறைத்து விடுவதாகும். இதனை, -
'- -அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்றோ! -(புறம்:204)
"இல்லென லிரந்தோர்க் கொன் றியாமை யிளிவு - (கலித்தொகை)
"இரப்போன் இன்மை கண்டுங்
கரப்போன் சிறுமை யானுறு கவ்வே" (தகடுர் யாத்திரை)
முதலியவற்றான். நன்கு அறியலாம்.
இனி, ஒருவரிடம் போய் 'ஈ'யென இரத்தலை ஈயேன் என்று கரத்தலையும் விட இழிவு வேறுண்டோவெனின் உண்டு என்க. அஃதென்னையோவெனின் கூறுதும். தன் பசிக்காகவும் தன்னைச்சார்ந்த உறவோர் பசிக்காகவுமே ஒருவன் இரத்தல் கூடும். அவ்வாறு அவன் இரக்காவாறு அவனது மெய் முயற்சியாலும், அறிவுத் திறத்தாலும் வேண்டுவது ஈட்டிக்கொள்ள, வலிய கைகால்களையும், மூளையையும் இயற்கையே எல்லோர்க்கும் கொடுத்திருக்கின்றது. ஆகையினால் இரத்தல் இழிந்தது; பிறர் இடுவதையும் ஏற்றல் தீது என்று யாவரும் மொழிந்தனர்.
வள்ளுவரோ,"ஒருவன் தன் உணவுக்காகவுமன்றித் தன்னைச் சார்ந்தார்க்கு மன்றி, நடுவழியில் நீரின்றி உயிர்துடிக்கும் 'ஆ' ஒன்றிற்கு, அருகில் உள்ள வீட்டின்கண்ணே சென்று 'அம்மையிர்! இங்கு ஓர் ஆ நீர்வேட்கையான் துடிக்கின்றது, அதற்கெனச் சிறிது நீர் ஈக' என்று கேட்பினுங்கூட அது நாவிற்கு வந்த இழிவே” எனும் பொருள்பட,
"ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்" (குறள் 1066)
மேலே இழிவென்று கண்டவை, நாகரிக மேம்பாட்டாலும், பொருள் குறைவாலும், மக்கட் பெருக்காலும் ஒருவருக்கொருவர் வேண்டிய எல்லாத் தேவைகளையும் தாமே செய்துகொள்ள இயலாமையானும், தம்மால் செய்யமுடிந்த பொருள்களைப் பிறர்க்கும் ஈயவேண்டியிருப்பதாலும், பண்டைத் தமிழர் கூறியவாறு இரப்பதை முழுதும் 'இழிவு' என்று இக்காலத்துக் கூறுவாரும், கூறுவார் கூற்றைக் கொள்வாரும் இலர். ஆனால் முற்காலத்தில் இழிவு என்று கருதியவற்றைவிட மிக இழிந்த தொழில்களை இக்கால் மாந்தருள்ளேயே சிலர் செய்கின்றனர். மக்கள் எல்லோரும் ஒரே நிறையும், ஒரே அறிவும், ஒரே உருவும், ஒரே உணர்வும் பெற்றவராயிருப்ப, ஒரு சிலர் உயர்ந்த தொழில்களைச் செய்யவும், ஒருசிலர் இழிந்த தொழில்களைச் செய்யவும், ஏற்பட்டதுகூட நாகரிகமோ, அறிவுடைமையோ, முறையுடைமையோ, அருளுடைமையோ வென்று கேட்கின்றோம்.
வானின் கோள் நிலைகளைக் காணமுயலும் இக்காலத்திற் கூடப் பலவிடங்களில், மானம் என்பதொன்றைவிட்டு வயிற்றுப் பிழைப்புக்காக மலக்குவியலை அள்ளி எடுப்பாரும், மாந்தரை மாந்தர் வைத்து விலங்குபோல் இழுத்துக்கொண்டு ஓடுவாரும் இருக்கத்தான் வேண்டுமோ? பண்டையில் மக்கட் பெருக்கமின்மையானும், சோம்பலின்மையானும், மக்கள் வெட்ட வெளிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும், வயற்புறங்களிலும் மலங்கழித்தனர். இற்றையோ புன்மை நாகரிகப் போலிப் பகட்டாலும் பல் துலக்காமல் தேநீர் முதலியவற்றை அருந்தும் படுசோம்பற் கொடு வாழ்வாலும், வேலை விரைவாலும், நகரப் பெருக்காலும், உண்டுறங்கி, உறையும் இடங்களிலேயே கழி நீரகங்களை அமைத்துக்கொண்டு மலங் கழிப்பார் ஆயினர். எனினும் வாழ்க்கை நிலைகட்கும், அறிவியல் விரிவுக்கும் ஏற்ப அக்கழிவுகளை மக்களுள் ஒரு சிலரைக்கொண்டே துப்புரவு செய்வதைவிடப் பொறிகள், அடிநில நீரோட்டம் முதலியவற்றைக் கொண்டு தூய்மை செய்ய முற்படுதல் அறிவுடைமையன்றோ?
இவ்விழிவான தொழில்கள் உள்ளவரை 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் வாய்ப்பிதற்றலுக்கு எட்டுணையும் பொருளில்லை. இதனை இல்லை என்று மறுப்பார் எவரேனும் இத்தகைய இழிதொழிலை ஏற்க முன்வருவரோ? வாரார், வாரார்.
இவை போன்ற இழிதொழில்களை அகற்றுதலும், அவற்றைப் பொறிகளைக் கொண்டு செய்வித்தலுமின்றி வேறு பல்தொழில் சீர்திருத்தங்களிலும், வளம் பெருக்கும் வகைகளில் ஈடுபாடு காட்டுதல் இரங்கத்தக்கது.
அவர் உண்மையிலேயே நாகரிகமுடையவராயின் நம்போல் ஒருவன் இழுப்பவும் அவன் இழுப்ப இவர் இவர்ந்தூர்வதும், தாம் கழிக்கும் மலக்குவியலை, தம்மைப்போன்றவரே அள்ளிப் புறஞ்சேர்த்தலும், சிறுநீர்த் தேக்கங்களை இறைத்துப்போய்ப் புறம் வார்த்தலும் செய்வதை விரும்புவரோ? அத்தகையோர், ஒழுக்கத்து விழுப்பம் பெற்றவரென்றும், மக்களில் நாகரிகம் மிக்கவரென்றும் கூறிக் கொள்ளுதலில் தினைத்துணையும் பொருளில்லை என்று கூற விரும்புகின்றோம்.
தென்மொழி, இயல் : 1. இசை : 9
(1959)
அறிவுத் துறையிலும், மக்கள் ஒற்றுமைப் பண்பாட்டிலும் மற்ற நாட்டினர் நாகரித்தின் மலை முகட்டில் நிற்ப, நந்தமிழ் நாட்டார் மட்டும், சாதிப் படுகுழியிலும் சமயச் சேற்றிலும் வீழ்ந்து அழுந்திக் கொண்டிருக்கின்றனர். இதுபற்றி, இந்நாட்டில், 'கற்றோம்' என்று தருக்கித்திரியும் யாவரும் நாணித் தலை கவிழ்க்க வேண்டும்; அற்றேல் மானமிருப்பின் இவ்விழிவு தாங்காமல் உயிரைப் போக்கிக் கொள்ளல் வேண்டும்.
ஆயிரமாயிரம் நெறிமுறை நூல்கள் தோன்றிய நாடென்றும், இறைநெறி நூல்கள் நிறைந்துள்ள உயர்நாடென்றும், எடுத்ததற்கெல்லாம் இறைவன் திருத்தோற்ற மெடுத்து மெய்நெறி வாழ்க்கை முறைகளை மக்கள் உய்யும் பொருட்டுக் கூறிப்போந்த திருநாடென்றும், பன்னூறு இலக்கியங்கள் தோன்றிப் பண்பாடு காத்த பொன்நாடென்றும், ஆயிரக்கணக்கான கோயில்களும் பல்லாயிரக் கணக்கான புராண, ஆகம உபநிடத நெறிமுறைகளும், அவற்றை மக்கட்குக் கூறுதலையே தத்தம் வாழ்வுத் தொண்டாகக் கருதி வாழ்ந்த நூற்றுக்கணக்கான துறவியரும், ஒழுக்க நெறியாளரும், அறநூல்கள் பலவும் தோன்றிப் படர்ந்து பல்கிய நாடென்றும் புகழப்படுகின்ற இந்நாட்டில்தான் நூற்றுக்கணக்கான சாதிப் பகுப்புக்களும் சமயப் பகுப்புக்களும் புகுந்து மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கவும், விலங்கினும் கீழாக மக்களுட் பலரை வெறுக்கச் செய்யவும் செய்தன. இவ்வழுகலையும், ஒழுகலையும் சமயப் புனுகிட்டு மூடிப் பொதிந்து வைத்து வெளிநாட்டார் அறியாமற் செய்துவரும் இந்நாட்டுப் பொறுப்பாளர் தம் அறியாமையை என்னென்போம்.
ஒரே அணுத்திரளையாக மாந்தர் உருப்பெறுதலும் ஒரே உணர்வாலும் அறிவாலும், குருதியோட்டக் கொள்கலன்களாலும் உருவாக்கப்பெற்று மக்களுள் ஒருவராய் விளங்கியிருப்ப அவரை இழிந்தோர் என்று பழித்தொதுக்குதல் எத்துணை மடமைச்செயல் ஆகும். இதனை மடமைச் செயல் என்று அறிந்தும் அதனை விலக்கி யொழிக்கமாட்டாமல் பேணி வருவது முன்னையினும் எத்துணை மடமைச் செயலாம்.
இறைவன் ஒருவன் உண்மையாயின், எல்லாச் சமயங்களும் அவ்விறைவனையே நாடிப் போகின்றன என்பதும் உண்மையாயின், பல சமயங்கள் இருத்தலும், அச்சமயக் கணக்கர் தம்வாழ்நாள் முழுவதும் மக்கட்கு வாழ்வுத் தொண்டாற்றுவது பற்றி எள்ளின் மூக்கத்துணையும் எண்ணாது, தந்தம் சமயமேம்பாடுகளையே கூறி வானாளை வீணாளாகக் கொண்டு, உண்டு, உறங்கிக் கொழுத்துப் புழுத்து வீழ்தலும் எற்றுக்கோ வென்று அறியோம். இவ்வீணுரைப் போலிப்புறச் சமயங்கட் பட்டோரும் ஒருவர்க்கொருவர் தாம் தம்மை உயர்ந்தோர் என்னலும் இன்னொருவரைத் தாழ்ந்தோர் என்னலும், அறிவியல் முன்னேறி கோளெய்தி (Rocket) தோன்றிய இக்காலத்துக்கும் ஏற்றதாகுமோ? அறிஞரே ஒர்ந்து தெளிமின்.
சாதி என்ற சொல் பண்டைத் தமிழ் நூல்களில் காணாத ஒரு சொல்லாம். திருக்குறள் முதலிய அறநூல்களில் குலம், குடி என்று வருகின்ற சொற்களும் சாதி என்ற பிறப்புப் பிரிவை உணர்த்தா. இவற்றிற்கு உரை செய்தோர் சமயத்தாலும், சாதியாலும் மடமை எனும் படுகுழியில் வீழ்த்தப்பட்டவரே யாதலின், அவரவர் போக்கிற்கியைய வீணுரையே செய்து போந்தார். தமிழில் உள்ள பழைய நூலான தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்கும் மக்கட் பாகுபாடுகள் பெரும்பாலும் தொழில் பற்றியவாயினும், ஆரியரின் புரையோட்டக் கருத்துக்கள் தழுவியனவேயாம்.
வெளிநாட்டாரை "நீவிர் யாரோ?" வெனின், அவர் சமயம்பற்றிக் கிறித்துவர் என்றோ யூதர் என்றோ, அற்றாயின் நாடு பற்றிச் சீனர் என்றோ அமெரிக்கர் என்றோ, அதுவுமின்றி மொழிபற்றி ஆங்கிலர் என்றோ, பிரெஞ்சியர் என்றோ கூறி நிற்ப, இப்பாழுந் தமிழரோ நீவிர் யாவர் எனின், மொழிபற்றித் தமிழர் என்றும் கூறாது, நாடுபற்றிச் சென்னையர், மதுரையர் என்றும் கூறாது, சமயம்பற்றிச் சைவர், வைணவர் என்றும் கூறாது, யாம் தென்னிந்திய சைவவேளாளர் குடிப்பிள்ளைமார் என்றும், முதலிமார் என்றும், தருக்கோடும் செருக்கோடும், கூறுவதன்றி, ‘யாம் இவர் குடியிற் பெண் கொள்ளோம்', என்றும் ‘யாம் இவர் வீட்டுத் திண்ணையிலும் ஏறோம்' என்றும் அறிவிலாது புல்லுரை புகல்வர்.
இச்சாதிச் சமயச் செருக்குகள் இவற்றோடமையாது வேற்றுமையையும், பலமூடப் பழக்க வழக்கங்களையும் இந்நாட்டார் தம் மூளையில் வேர்விட்டு முளைத்துக் கிளைக்கவும் நல்ல எருவாகவும் பயன்படுகின்றன. இவற்றின் பயனாய்த் தமிழர் என்ற ஓர் இனமே இல்லா தொழிந்ததே. தமிழர் என்று இக்காலத்துச் சொல்லளவிலும் மொழியளவிலும் கூறித் தலையெடுத்துப் பேசுவார்தமக்கும் உள்ளுர தம்தம் சாதிப்பற்றும், சமயப்பற்றும் பற்றிப் படர்ந்தனவே தவிர, தமிழ்ப்பற்றோ, தமிழரினப்பற்றோ, தமிழ்நாட்டுப் பற்றோ, தினையளவும் இல்லையென்பதை எல்லோரும் ஒப்பியே ஆகல் வேண்டும்.
தமிழருள் கன்னடத்தார், தெலுங்கர், மலையாளத்தார் எனப் பிரிந்த பின்றை, எஞ்சியுள்ளோரில், ஒரு பகுதியினர் முகமதியராய் மாறி உருதுமொழி பேசித் தமிழ்ப்பற்றும் தமிழ் நாட்டுப்பற்றும், தமிழ் இனப்பற்றும் இன்றிக் குலைந்தும், கிறித்துவராய் மாறிக் கிறித்துவ மறையுங்கையுமாய்த் திரிந்து தமிழர் இனத்தொடும், மொழியொடும் மாறுபட்டு வாழ்ந்தும் வருகின்றனர். இவர் எல்லோரும் போக மிகுந்திருப்பவரிலும் சாதி, சமயப் படுகுழிகளில் வீழ்ந்துபோன காரணத்தால் ஒற்றுமை இன்றியும், நல்லுணர்வின்றியும் ஒரு சாதியாரைப்பற்றி ஒரு சாதியார் கவலைப்படாது தன் சாதிக்காரர் உய்யவே தன் மூச்சை இயக்குவதும், வேறு சாதிக்காரர் முன்னேறிப் போகையில் உடலெரிந்து புகைவதும் ஆகத் தாழ்ந்துபோகின்றனர்.
இவ்வாறு எல்லோரும்போக ஆரியர் கொள்கைக் குழப்பங்களை வெறுத்தொதுக்கித் தனியிடத்தே வாழ்ந்த கலப்பற்றத் தமிழரைத் தாழ்ந்தோர் என்றும், இழிந்தோர் என்றும் இத் தமிழர் என்று கூறிக் கொள்கின்றவரே தாழ்த்துவதும் வீழ்த்துவதுமாக இருக்கின்ற கொடுஞ்செயலை உன்னிப்பார்க்கின் நாம் அறிவிலும், நாகரிகத்திலும் உயர்ந்துள்ளோம் என்று எவரேனும் கூறுவரோ?, அவர் கூறினும் அறிந்தவர் ஒப்புவரோ? அறிவுடையோரே ஒர்மின்.
"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி?
என்று கேட்கும் கேள்வியில் விடுதலை மூச்சு வெளிவருகின்ற அதே நேரத்தில் மடமையும் அன்றோ கொப்பளிக்கின்றது?
அன்னியர் வந்து புகவேண்டுவதில்லைதான். அதற்கென மலக்குவியலாக நாம் இருப்பது நம் அறிவுடைமையைக் காட்டுவதாகுமோ? இவ்விழிவுகளை நாம் அறியாவண்ணம் செய்து, சீழ் பிடித்துப் புரையோடிப் போகக் கருவியிட்டாற்றாமல் புண் வைத்து மூடலாமா?
ஒழுக்க விழுப்பத்திலும், அற நெறிகளிலும் தோய்ந்து பலபடக் கூறி மாற்றார் மயங்கப் பேசும் நந்தமிழ் நாட்டின் உயர்வுகள் எங்கே? சிலப்பதிகாரமும், மணிமேகலையும், கம்பராமாயணமும், வில்லிபாரதமும், திருக்குறளும், நாலடியாரும் நம் கைகளில் இருப்பது எற்றுக்கு? நம்மால் அந்நூல்களுக்குந் தாழ்வேற்படுமேயல்லாது, அந்நூல்களால் நமக்குப் பெருமை ஏற்படுமோ? சேர சோழ பாண்டிய இனம் இப்பொழுது உள்ளதா? அதுபற்றிப் பேசி எய்தப்போகும் சிறப்பென்னை? ஐயகோ, பேசிக் கெட்டதல்லாமல் தமிழன் வாழ்ந்திருந்தது என்று? கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தமிழர் மட்டுந்தாம் தோன்றினாரா? அக்கல்லும் மண்ணுங் கூடத்தாம் தோன்றியிருந்தன. அவை மட்டுமா? அறிவியல் நூற்படி புழுவும், பூச்சியும், பறவையும், விலங்குகளுந்தாம் தோன்றியிருந்தன. அதன் பழமை நோக்கி அன்று தோன்றிய கல்லை முத்தென்றும், மண்ணைப் பொன்னென்றும், குரங்கை உடன் பிறப்பென்றுமா போற்றுகின்றோம்? இல்லையே. வெறும் காலப் பழமையாலும், மொழிச் சிறப்பாலும், இலக்கிய வளத்தாலும், வான் முட்டக் கோயிலெடுப்பதாலும், செம்பாலும், வெள்ளியாலும், பொன்னாலும் தெய்வப் படிவங்களைப் பண்ணி வைப்பதாலும், அவற்றிற்குப் பாலாலும், பழத்தாலும், தேனாலும், நெய்யாலும் வழிபாடுகள் செய்வதாலுமே ஒருவன் உயர்ந்தவனென்றால், இன்று அமெரிக்கரைவிடச், சீனரைவிடச், சப்பானியரைவிடத் தமிழன் முன்னேறியல்லவோ இருத்தல் வேண்டும். அன்று. அன்று. எந்தமிழ்மக்களே, வெறும் பழமையாலும், மொழியாலும் நீங்கள் உயரப்போவது எக்காலத்தும் நிகழப்போவதில்லை. இதை நெஞ்சில் நிறுத்துங்கள்.
மக்கள் குலத்தில் தாழ்ந்தோன் உயர்ந்தோன் என்று பாகுபாடு செய்யும்வரை நீங்கள் உயரப்போவதில்லை. தமிழ் பேசுவோர், தமிழ்த் தாய்க்குந் தந்தைக்கும் பிறந்து தமிழன் என்று சொல்லிக் கொள்ளும்வரை நீங்கள் உலகில் உள்ளவரோடு ஒப்பவைத்துச் சிறப்பிக்கப்படப் போவதில்லை. பள்ளனென்றும், பறையனென்றும், பிள்ளையென்றும், முதலியென்றும், பெயர்கள் சூட்டிக்கொண்டு பிதற்றித் திரியும்வரை நீங்கள் தமிழர் அல்லர். அவ்வாறு கூறிக்கொள்வதில் பொருளுமில்லை. சைவ மென்றும், சைவமே தமிழ் என்றும், வைணவம் என்றும், வைணவமே தமிழ் என்றும், பெளத்தம் என்றும், பெளத்தமே தமிழ் என்றும், சமணம் என்றும், சமணமே தமிழ் என்றும், கூறிக்கொண்டு மக்களை மக்கள் என்று கூற மறுத்தீர். இந்த இழிநிலை உள்ளவரை தமிழ்நாட்டைத் தமிழ்நாடென்று உலகில் வேறு ஒருவனும் கூற விரும்பமாட்டான்.
“இத்தகைய பாகுபாடுகள் இல்லாமற் போமாயின், தமிழ் நூல்கள் இல்லை. தமிழ் இலக்கியங்கள் இல்லை" என்று கூறுவீரானால் அத்தமிழ் நூல்களும், தமிழ் இலக்கியங்களும் அழிந்து போகட்டும். நீங்கள் எழுதிவைத்த தமிழ் இலக்கியங்களும் நெறி நூல்களும் தமிழ்நாட்டிற்கே பயன்படப்போவதில்லையாயின் வேறு எந்நாட்டவர்க்கு அந்நூல்கள் பயன்படப்போகின்றன? அறிஞரே எண்ணிப் பார்மின்!
சாதிச் சழக்குகளும், சமயப்புரட்டுக்களும் நம் நாட்டை உய்விக்கவில்லை என்பதை ஐயாயிரம் ஆண்டுகளாக ஏன், கல் தோன்றி மண்தோன்றா முன்பிருந்தே கண்டோம். கண்டும் உணர்ந்தோமா? இல்லையே இன்றைக்கும் அக்கொடும் பள்ளத்தாக்குப் படுகுழிகளிலிருந்து மீளமுடியவில்லையே. இன்று தமிழன் என்று தம்மைச் சொல்லிக்கொள்வார் ஒவ்வொருவருக்கும் தமிழ் என்மொழி; அது என்விழி; என்று அழகுபட மொழிவார் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்.
உங்கள் தமிழ் நூற்கள் உங்கட்குப் பெருமைதரும் அளவிற்கு உள்ளனவா? அஃதாயின் உங்கள் பெருமையின் அளவு எது?
நெஞ்சைத் தொட்டுத் திருக்குறளைக் கையேந்தி இதற்கு விடை கூறுங்கள். திருக்குறள் இப்பாழுந் தமிழன் கையிலிருக்க வேண்டிய நூலன்று. நிலாவுலகத்துக்குப் போவதாகக் கூறிக் கொள்ளும் அறிவியல் வல்லுநர்க்கு ஒரு சொல். "நீங்கள் அங்கு அழைத்துப்போகும் மக்களுள் ஓர் அமெரிக்கனும், ஓர் உருசியனும், ஓர் ஆங்கிலேயனும் ஒரு சீனனும், ஒரு சப்பானியனும் ஒரு பிரஞ்சியனும் என நாட்டிற்கொருவராக இருக்க விடலாம். ஆனால் இத்தமிழ்நாட்டான் ஒருவனைக்கூட அங்குக் கொண்டு போக வேண்டாம், அவன் வந்தால் அத்தூய நிலாவுலகத்தில் சாதிகள் என்னும் முட்காடு முளைக்கும். சமயங்கள் எனும் படுகுழிகள் வெட்டப்படும். இப்பாழுந் தமிழனுக்காக இவன் நாட்டிலுள்ள திருக்குறளை மட்டும் எடுத்துக்கொண்டு போங்கள். அது இவனிடமிருப்பதைவிட உங்கள் எல்லோரிடமும் இருப்பது நல்லது"
தென்மொழி, இயல்: 1 இசை: 12
(1960)
காரைக்குடியிலுள்ள இந்தியப் பல்தமிழ்க் கழகம் விடுத்த அழைப்பிதழில் “தமிழ்த் தோன்றல் திரு.க.வெ.சித.வே. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் (அழகப்பா கல்லூரி அறநிலையச் செயலர்) கழகத்தைத் தொடங்கி வைக்கவும், தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்கவும் இசைந்துள்ளார்கள்." என்று கண்டுள்ளது. அந்த அழைப்பிதழுக்கு நம் ஐயா (பெருஞ்சித்திரனார் அவர்கள்) விடுத்த விடை மடல்.
பேரன்புடையீர், வணக்கம்.
தாங்கள் அன்புடன் விடுத்த இந்தியப் பல்தமிழ்க் கழகத் தொடக்க விழா அழைப்பும் விளக்கத்தாள்களும் கிடைத்தன. தங்களின் அரும்பெரும் முயற்சி கண்டு பேருவகை கொண்டோம். கழகம் ஆற்றவிருக்கும் செயல்களையும், கொண்டிருக்கும் குறிக்கோள்களையும் படித்து அகமகிழ்ந்தோம். தங்களின் செயற்கரிய செயல்களுக்கு என்றும் துணை நிற்கவும் உறுதி பூண்டோம். எல்லாம் வல்ல இறைவன் இருதிறத்தானும் நின்று பேரருள் புரிய வேண்டுகின்றோம். நிற்க.
தாங்கள் விடுத்துள்ள அறிக்கையில் உள்ள எல்லாச் சொற்றொடர்களும் தங்கள் உளக்கருத்தை இனிதே புலப்படுத்தி மெய்ம்மலியுவகை செய்தனெனினும், எந்தமிழ்த் தாய்க்கு யாமென்று முன்னிற்பார் யாவரும் சொல்லவும் கொள்ளவும் மறந்த கொள்கையான, "சாதி சமயம் கட்சி என்றின்ன பிரிவுகளை மனத்தாலும் எண்ணாது, எண்ணவும் இடங்கொடாது செயலாற்றும் பண்புடையது இக்கழகம் என்பதை ஒருதலையாக நினையுங்கள்" என்ற இன்றியமையாச் சொற்றொடரே எம்மை மிகவும் மகிழ்வுறச் செய்ததும் ஆழ்ந்து எண்ணச் செய்ததுமாகும். சாதி சமய கட்சிப் போராட்டங்களே இற்றைத் தமிழின் இறங்கு நிலைக்கும் தமிழரின் இரங்கு நிலைக்கும் ஆன உண்மைப் பொருட்டாகும். மொழித் தொண்டும் அறிவுத் தொண்டும் குமுகாயத் தொண்டும் செய்யப் புறப்படுவார் எல்லாரும் புறத்தே பேச்சிலும் அகத்தே மூச்சிலும் அவற்றை மறவாமல் வளர்த்து வருகின்ற கொடுநிலை நினைக்குந்தோறும் எந்தமிழ் நெஞ்சம் அனல் மெழுகெனக் கசிந்து கண்ணிர் பொழிகின்றது. எண் பொருள் அளவாச் செலச்சொல்லித் தாம் பிறர் வாய், நுண்பொருள் காண்கின்ற பேரறிவுத் திறம் வாய்ந்தாரும், ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையுட் பேதையரெனவே வருதலைக் கண்டு வருந்தி வருந்தி நெஞ்சு நெக்குருகி உயிர்சாம்பி உடல் குறுகிக் கையற்றுக் குமைந்திருக்கின்றோம். மெய்த்தொண்டு செய்யப் புகுவார் எவரும் பொய்த் தொண்டாலேயே பொருள் தண்டி வருகின்றார். இத்தனை இடர்ப்பாட்டிற்கும் தமிழர்தம் தலை தாழ்ச்சிக்கும் இடனான அம் முப்பற்றுகளையும் வென்று குன்றா உரத்தொடும் குனியா மறத்தொடும் நின்று, எந்தமிழ்த் தாய்க்கும் நாட்டிற்கும் இரவு பகல் பாராது தொண்டாற்ற ஒருவரேனும் முன்வரின், தமிழ் நாடு விரைவில் உய்யுமே என்றும், அவ்வாறு முன்வரும் ஒருவரை இன்னுங் காண்கிலமே என்றும் ஏங்கிக் கிடந்தோம்.
இக்கால் தாங்கள் தொடங்கியுள்ள இந்தியப் பல்தமிழ்க் கழகம் உரஞ்சான்ற கொள்கையுடனும் திறஞ்சான்ற தலைவருடனும் அத்தகைய மெய்த்தொண்டு செய்ய முன்வந்ததே என்றெண்ணி அகமகிழ்ந்து நின்றோம். ஆயினும் ஐய, தங்கள் அழைப்பிதழைக் கண்ணுற்று மிகவும் துணுக்குற்றோம்.
எடுத்த எடுப்பிலேயே, தமிழ்த் தோன்றல் திரு.க.வெ.சித.வே. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் (அழகப்பா கல்லூரி அறநிலையச் செயலர்) கழகத்தைத் தொடங்கி வைக்கப்போவதாக அழைப்பில் கண்டுள்ளது. பிறர் மாட்டு நின்ற சாதி சமய கட்சிப்பற்றும் கழகத்தின் பெரும்பணியாளர் மாட்டுவரின் அவை தவிர்க்கப் பெறுதல் இல்லையாகின், தங்கள் கொள்கையாகக் குறிப்பிடப் பெற்றிருக்கின்ற அச் செயலாண்மைக்கு எவ்வகை உரந்தந்துள்ளீர்கள் என்பதை எம்மால் அறிய முடியவில்லை. செல்வச் செருக்கும், சாதி சமயச் செருக்குமே தமிழரைத் தாழ்த்தியவை என்பதை எம்மினும் மேலாகத் தாங்கள் அறிவீர்கள். அறிவாலும் கல்வியாலும் செல்வத்தாலும் மேம்பட்டு நிற்கின்ற தங்களைப் போன்ற தலைமையாளரே உள்ளங் கரந்துறைந்து உருவின் தலை காட்டி வெள்ளப் பெருக்காய் விரிந்து பொங்கும் சாதிப் பகட்டுகளைத் தவிர்க்க அஞ்சுவதாயின் எம்மனோரால் செய்தற்கு யாதுளது?
“ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்' -குறள்
- தென்மொழி, 1963
நம் நாட்டில் உள்ள தீராத கொடிய தொற்று நோய்கள் சிலவற்றுள் இந்தச் 'சாதி' எந்த மருத்துவத்தாலும் போக்க முடியாத மிகவும் கடுமையான கொடுமையான, தொற்றுநோய். ஆனால் தீர்க்கப்பட வேண்டிய தொற்று நோயாம். நாம் பொதுவாக தொற்று நோய்கள் என்று குறிப்பிடும் நோய்கள், ஏதோ ஆயிரத்தில் ஐந்து பெயர்களுக்குத் தான் பிடித்துக்கொண்டு சீரழிக்கும். ஆனால் இந்தச் சாதியெனும் தொற்று நோயோ இந்தியாவில் உள்ள ஐம்பத்திரண்டு கோடி மக்களையும் பிடித்துக்கொண்டு அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டு வருகிறது. இந்நாட்டை யாண்ட வெள்ளையர்களாலும், பிரஞ்சுக்காரர்களாலும், போர்த்துக்கீசியர்களாலும் அவர்கள் கண்டுபிடித்த மருந்துகளாலும் போக்க முடியாத இந்தத் தொழுநோய், இருக்க இருக்க உள்ளுக்குள்ளேயே புரையோடி அழுகிச் சீழ் பிடித்து நாடெங்கும் நாறத் தொடங்கிவிட்டது. இனி, இந்த நோயை அகற்ற முயல்வது பெரிய மலக்குவியலை மணக்கச் செய்வதுபோல நகைப்பும் வீண் முயற்சியும் வாய்ந்த செயலாகவே முடியும்! எந்த ஒரு காலத்திலாவது இந்திய மண்ணில் இந்தச் சாதி நாற்றம் அறவே நீங்கிவிடும் என்று சொல்வதற்கில்லை! உருசியா, அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நாடுகள், தம் தம் கையிருப்பில் வைத்துள்ள அத்தனை அணுகுண்டுகளையும் ஒரேயடியாக இந்திய மண்ணில் போட்டாலும் அவற்றின் மருந்துநெடிக்கு மேல் நம் நாட்டுச் சாதிச் சரக்கின் மூக்கைத் தொளைக்கும் நெடி கலந்த தீநாற்றம் குடலைப் புரட்டிக் கொண்டு தானிருக்கும். அவ்வளவு ஆழமாக, அகலமாக பனிமலையின் உச்சிக்கும் கன்னிமுனையின் அடிக்கும் தலை கால் வைத்துப் படுத்துக் கொண்டு, காலத்தையும் கருத்தையும் வென்று, நாளும் நலம்பல பல்கிப் புதுப் புதுத் தோற்றங்களுடனும் மாற்றங்களுடனும் கதிரவனைப் போல் சுடர்விட்டு ஒளிவீசுகின்ற இந்தப் பொல்லாத சாதியெனும் பெரும்பூதம் என்று இந்திய மண்ணைவிட்டுப் புரண்டு அரபிக் கடலிலோ வங்காளக் கடலிலோ இந்தியப் பெருங்கடலிலோ உருண்டு மாண்டொழிந்து போகுமோ, அன்றே இந்திய நாட்டின் விடுதலைநாள்! இவ்வளவு திட்ட வட்டமாக இந்தக் கொடுஞ் சாதியின் பெருமைகளை அறிந்திருந்தும், புத்தர் முதல் இன்று பிறந்துள்ள குழந்தைவரை எல்லாரும் சாதியை ஒழித்துக் கட்டவே (!) முனைந்து வருகின்றோம். இருந்தாலும் அதன் சல்லி வேரின் நுனியைக் கூடக் கிள்ள முடியவில்லை. அந்தத் துணிவில்தான் நாமும் ஏதாவது (எதுவும் நடைபெறாது என்று தெரியும்) சொல்லி வைப்போம் என்று சில கூற முன்வந்தோம்.
சாதியைச் சாகவிடாது காக்கும் பணியில் அவ்வப்பொழுது அரசர்களும், சமய வெறியர் சிலரும், சாதி வெறியர் பலரும், மருந்து அடிக்க அடிக்கப் படை படையாய்ப் பல்கிப் பெருகும் கொசுக்கூட்டம் போல் தோன்றிக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் ஓரே இனத்தில் தோன்றாமல் எத்தனை எத்தனைச் சாதிகள் உள்ளனவோ அத்தனைச் சாதிகளிலும் வேற்றுமை பாராது அவ்வப்பொழுது தோன்றி, அவரவர் சாதியாரைத் தேற்றியும் தம் தம் சாதிப் பழக்க வழக்கங்களை மறந்து போகாமல் அறிவுறுத்தியும் அத்தகைய செயல்களுக்காகப் பலவகையான செல்வங்களைத் திரட்டியும் காத்தும் வந்திருக்கின்றனர். வருகின்றனர். ஆனால் காலத்திற்குத் தகுந்தாற்போல் அச் சாதிக் குரவர்கள் மாறுபாடான தோற்றங்களுடன் பிறந்து தம் தம் திருப்பணிகளைப் புரிந்து வருகின்றனரேயன்றி, அவர்தம் உள்ளம், அறிவு, உணர்வு எல்லாம் அன்றிருந்த போலவே இன்றும் உள்ளன. அக்காலத்திய சாதிக் குரவர் குடுமி வைத்துக் கொண்டிருக்கலாம்; கையில் ஓலைச் சுவடியும் எழுத்தாணியும் பிடித்துக் கொண்டிருக்கலாம். அவரே இக்காலத்தில் ஒழுகை (கிராப்) வைத்துக்கொண்டும் தாளும் தூவலும் பிடித்துக் கொண்டுமிருக்கலாம். ஆனால் இருவர் உள்ளங்களும் ஒரே வகையான மலக்குழிகள்தாம். இத்தகைய சாதிக் கிறுக்கர்கள் இக் கால் ஊர்கள்தொறும் தெருக்கள்தொறும் தோன்றித் தம் பிறவித் தொண்டைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தம் பெருக்கத்தையும் நம் புனித (!) சாதி சமய வேறுபாடற்ற பாரத அரசினர் தம்முடைய ஆட்சி நாடகத்தில் நடிக்கவேண்டிய ஒரு காட்சிக்காக அணியப்படுத்திக் கொண்டுதான் வருகின்றனர்; இவை ஒருபுறம் கிடக்க.
சாதியென்னும், இவ்விந்திய மக்கள் கூட்டத்தை விடாமல் அமுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் தீராத தொழு நோய் தொடக்கத்தில் யாரால் எவ்விடத்தில் இறக்குமதி செய்யப் பெற்றது அல்லது தோற்றுவிக்கப் பெற்றது என்று ஆயும் தருக்க முனைப்பு நமக்கு இப்பொழுது வேண்டா. ஆனால் ஒன்றை மட்டும் எண்ணியே ஆகல் வேண்டும். தந்நலமும், சோம்பேறித்தனமும், மக்களை அடக்கி அடிமைப்படுத்தும் கொடிய எண்ணமும் வாய்ந்த சமய வெறியர்கள் ஒரு சிலரால்தான் இது வித்திடப் பெற்றிருக்கும். அவர் யாவராயினும் ஆகுக. ஆனால் அக்குமுகாய அரிப்புப் புழுக்களால் தோற்றுவிக்கப் பெற்ற இச்சாதியெனும் வேண்டா அமைப்பு, அறிவியலும் மனவியலும் குமுகாய நலவியலும் தோன்றி வளர்ந்து கொண்டிருக்கும் இக் காலத்திலும் நமக்கு வேண்டுவதுதானா என்பதையும், அது வேண்டாக்கால் அதனைக் குழிதோண்டிப் புதைக்கும் வழிகள் எவை என்பதைப்பற்றியும் மட்டுமே நாம் இங்குச் சிறிது கூறுவோம்.
சாதி அமைப்பு ஒரு சில இயற்கை அமைப்புகளாலும், சில செயற்கைப் பாதுகாவலினாலும் மக்களோடு பின்னிப் பிணைந்து அவரைவிட்டு எவராலும் எக்காலத்தும் எம் முயற்சி கொண்டும் பிரிக்க முடியாததாகக் கட்டுண்டு கிடக்கின்றது. அவை ஏற்படக் காரணமாயிருந்த இயற்கை அமைப்புகள் இவை.
1. வழி வழியாக வந்த தொழில் முறைகள்.
2. அச்சமும், குருட்டுத்தனமும், புரட்டுகளும் வாய்ந்த சமய நம்பிக்கைகளும், அவற்றால் கிடைத்த போலிப் பெருமைகளும், தலைமை நிலைகளும்.
3. நிறவேறுபாடுகளும், பழக்க வழக்கங்களும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளும்.
இவையன்றிக் கீழே காட்டப்பட்ட செயற்கைக் காரணங்களாலும் அச்சாதி நிலைப்புகள் வலிவூட்டப்பெற்றன.
1. சாதிப் பற்றில்லாதவரோ அதுசார்ந்த சமயப் பற்றில்லாதவரோ குமுகாயத்திலும், அரசியலிலும் தலைமையும் அதிகாரமும் வாய்ந்த பதவிகளைப் பெறுவதற்குத் துளியும் வாய்ப்பில்லை.
2. ஏழைகளைவிடச் செல்வமும், நன்மதிப்பும், அரசியல் அதிகாரமும் படைத்தவர்களிடமே உள்ளூரச் சாதி வெறி உள்ளமை.
3. ஒவ்வோர் அரசும் பிரித்தாளுகின்ற அரசியல் சூழ்ச்சிக்கு இலக்காகச் சாதிப் பூசல்களையும் அதனடிப்படையில் அமைந்த சமயப் பூசல்களையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ பயன்படுத்திக் கொண்டமை.
4. அவ்வப்பொழுது தோன்றிக் குமுகாயச் சீர்திருத்தக்காரர் களாகவும் முன்னேற்றப் போக்குடையவர்களாகவும் பகுத்தறிவாளர் களாகவும் தம்மை மக்கள்முன் அறிமுகப்படுத்திக் கொண்ட பலர், தம்மளவிற்காவது சாதி அமைப்புகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வாராகாமையால், அவர் தம் கொள்கைகளின் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மாறாத நம்பிக்கையின்மை.
5. தீண்டாமை யொழிப்பையே 'சாதி' யொழிப்பு என்று தவறாகக் கருதியதுடன், கடுமையான தீண்டாமையால் வரும் கேடுகளை விட, பொதுவான, எளிய சாதி ஏற்றத் தாழ்வுகளாலேயே சாதி நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாமை.
6. அரசினர் பதிவுகளிலும், ஆவணங்களிலும், வழக்கு மன்றங்களிலும் சாதிப்பாகுபாடுகள் வற்புறுத்தப் பெறுகின்றமை.
7. பண்டையில் ஆரியப்பார்ப்பன சமயகுரவர்களும், சாதி வெறியர்களும் அரசியலில் தலைமையிடம் பெற்று, அறநெறி என்ற பெயராலும், விரகாலும் சாதிப்பாகுபாடுகளையும் பழக்க வழக்கங்களையும் வற்புறுத்திக் கெடாது காத்தமையும், இக்காலத்தும் சாதி சமய வேறுபாடற்ற அரசு என்று தவறாகக் கூறி கொண்டு எல்லாச் சாதி சமய அமைப்புகளுக்கும் சட்டத்திலும் நடைமுறைகளிலும் பாதுகாப்பளிக்கப் பட்டமையும்.
8. பொருள் நலமும் உறவு நலமும் கருதி ஒவ்வோர் இனத்தாரும் தம் தம் இனத்துக்குள்ளேயே மண நிகழ்வுகளையும், பிண நேர்ச்சிகளையும் முன்னிட்டுப் புழங்கிக் கொண்டமை.
9. ஒரு சாதியாரால் பிற சாதியார்க்குக் ஏற்பட்ட கொடுமைகள் ஒருவாறு தணிந்தவுடன், கொடுமைதரா நிலையில் சாதி அமைப்பு மென்மையான வினை முறைகளால் மக்களை ஆட்கொண்டு ஒரு தீமையில்லாத நோயாக அவர்களைப் பற்றி நின்றமை.
10. ஒவ்வோர் இனத்தாரும் தம் தம் சாதி அமைப்பால் ஒருவகைப் போலிப் பெருமையையும், தம்மினும் தாழ்ந்தாரை விடத் தாம் உயர்ந்தவர் என்ற பொந்திகையை கொண்டுள்ளமை.
மேலே கூறப்பெற்ற தலையாய காரணங்களாலும் பிறவற்றாலும் சாதியென்னும் கொடிய நஞ்சு எல்லாருடைய நெஞ்சுகளிலும் குருதி நாளங்களிலும் ஏற்றப் பெற்று வலிவு பெற்று வருகின்றது. அறியாத கல்லா மாந்தரிடம் தோன்றி முள் காடாகப் படர்ந்த இத்தீய அமைப்புகள் இக்கால் கற்றவர்பாலும் வலிந்து புடை திரண்டு வருவது எல்லா நல்ல உள்ளங்களிலும் பெரியதொரு கவலையை உண்டாக்கியிருக்கின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி அமைப்புகள் தோன்றி மாணவர் தம் நெஞ்சுகளில் தம் தூண் போன்ற கால்களை ஊன்றிக் கொண்டுள்ளன. இவை தமக்கு ஆங்காங்குள்ள சாதிக் கிறுக்கர்களும் வெறியர்களும் பலவகையான காரணங்களைக் காட்டிப் பொருளாலும் வினையாலும் வலிவூட்டிக் கொண்டு வருகின்றனர். தம்மை எல்லாரினும் உயர்ந்தவராகக் கருதிக் கொள்ளும் பார்ப்பன முதலைகள் சில தத்தமக் கென்று அரசியல் துறைகள் சிலவற்றில் பட்டயங் கட்டிக் கொண்டு ஆங்காங்குச் சாதி மூட்டம் போட்டு வருகின்றனர். அவர்களுக்கு மடத் தலைவர்கள் சிலர் தோன்றாத் துணையாகி அவர்களை வேண்டாத இடத்திற் கெல்லாம் இட்டுக் கொண்டு போகின்றனர். தொடக்க நிலைப் பள்ளி முதல் பாராளு மன்றத்தின் படிக்கட்டுவரை சாதிக் கொடுமைகள் மக்களைப் பேயாய் ஆட்டி வைக்கின்றன. நாட்டை யாள்கின்ற பெருந்தலைவர்களும் தம் தம் சாதிப் பட்டங்களைப் பறை சாற்றிக் கொள்ள விரும்புவது மன்றி, அச்சாதி வெறியர்களுக்கு மறைமுகத் துணைவர்களாகவும் இருந்து வருகின்றனர். அவ்வச் சாதியினர் அவரவர் மக்களையே முன்னேற்றிவிட அல்லும் பகலும் அரும்பாடுபடுகின்றனர். இன்னவாறு சாதியென்னும் பெருவிலங்கு தன் கட்டைவிரல்களையும் சுட்டு விரல்களையும் அங்கிங் கெனாத படி எங்கும் படிய வைத்துக் கொண்டு மக்களைச் சீரழித்துக் கொண்டு வருகின்றது. இவற்றிற் கெல்லாம் ஒரு முடிவு வேண்டாவா? அவற்றை ஒழிப்பதுதான் எப்படி என்று இவ்விந்திய நிலத்தில் யாருக் கொருவராகிலும் கவலை கொள்பவராக இருப்பர். சாதியொழிப்புக்கு எவ்வளவோ வழிகள் எக்காலத்தும் எல்லாராலும் அவ்வப்பொழுது சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் எந்த வழியாக விருப்பினும் அதை அந்தச் சாதி வெறியர்களிடமே ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதுவரை இவ்வகையில் ஈடுபட்டுழைத்த நல்லவர்கள் சிலரால் ஒருசில கொடுமைகளே தடுக்கப் பெற்றிருக்கின்றன என்றாலும், சாதி அமைப்புகளை இவர்களின் முயற்சிகள் ஒருசிறிதாவது தகர்த்துள்ளன என்று கூற முடியாது. இவற்றிற் கெல்லாம் காரணம் அவர் செய்த முயற்சிகளெல்லாம் என்றும் அரசினர் சார்புள்ளவையாக இல்லாமலிருந்தமையே! எவரேனும் துணிந்து எதிர்பாரா வகையில் இந்நாட்டின் வல்லதிகாரம் படைத்த தலைவராக வருவாரானால் அவருக்குப் பயன்படும் வகையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை அவர் தம்செவிகளில் போட்டு வைக்கின்றோம். அப்படி அவர்கள் அந்நிலைக்கு வருவார்களானால் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு துணிந்து இவ்வழிகளை மேற்கொள்ளலாம். மற்றப்படி இவற்றை அரசினர் மேற்கொள்ளப் போவதில்லை. அவை இவை:
1. சாதிப் பெயர்களை எக்காரணங் கொண்டும் அரசினர். ஆவணங்களிலும் பதிவுகளிலும் பதிந்து கொள்ளாதிருத்தல்.
2. சாதிகளின் பெயர்களால் உள்ள தெருக்கள் (சின்னப்ப முதலித் தெரு, இருசப்ப செட்டித் தெரு முதலியன) ஊர்கள் (இரெட்டியார் பாளையம், வண்ணாரப்பேட்டை முதலியன) மன்றங்கள் (சைவ வேளாள மகா சன சங்கம்), (வன்னிய குல சத்திரிய சேவா சங்கம் முதலியன), வாணிக நிலையங்கள் (பிராமணாள் கபே, நாட்டுக் கோட்டைச் செட்டியார் நகைக்கடை முதலியன), செய்தித்தாள்கள் (செங்குந்த மித்திரன், சலவை மணி முதலியன), கல்விக் கூடங்கள் (நாடார் உயர் நிலைப்பள்ளி, செங்குந்தர் உயர் நிலைப்பள்ளி முதலியன), கட்சிகள் (வன்னியர் முன்னேற்றக் கட்சி, தாழ்த்தப்பட்டோர் லீக் முதலியன), திருமணக் கூடங்கள் (ஆரிய வைசிய கல்யாண மண்டபம், தியாகு முதலி கலியாணச் சத்திரம் முதலியன), சுடுகாடு இடுகாடுகள் (சக்கிலியன் சுடுகாடு முதலியன), கோயில்கள் (சாணார் கோயில் முதலியன), ஆகியவற்றிற்கு உடனடியாகப் பொதுப் பெயர் சூட்டச் செய்வதுடன் அதை மீறிச் செய்வாரைக் கடுமையான தண்டங்களிட்டுத் தடுத்தல்.
3. எவர் பெயருக்குப் பின்னும் சாதிப் பட்டங்களை (காமராச நாடார், இலக்குமணசாமி முதலியார், சிதம்பரநாதச் செட்டியார் என்றபடி) குறித்தல் கூடாதென்று சட்டத்தாலும் தண்டத்தாலும் தடுத்தல்.
4. கலப்பு மணங்களை வற்புறுத்தல்: 1, ஒரு குறிப்பிட்ட காலம்வரை தம் தம் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்பவர்களிடம் திருமண வரியாகப் பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் உருபா தண்டுதல். 2. இந்த வரி வருமானத்தைக் கொண்டு, கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு வேலைச் சலுகை, கல்விச் சலுகை, குடியிருப்புச் சலுகை முதலியன தந்து ஊக்குவித்தல்)
5. ஒரு குறிப்பிட்ட காலம்வரை ஓரினத்தைச் சேர்ந்தவரைப் பிறிதோர் இன மக்கள் வாழும் சூழலிலும், ஒரு வட்டத்தைச் சார்ந்தவர்களைப் பிறதொரு வட்டத்திலும் சட்டமன்ற, பாராளுமன்றங்களுக்கான வேட்பாளர்களாக நிறுத்தல்.
6. சாதி சமயக் குறியீடுகளை அறவே எவரும் அணியவோ தீட்டிக் கொள்வதோ கூடாவென்று தடுத்தல்.
7 தாழ்ந்த சாதி மக்களே செய்து வருகின்ற இழி தொழில்கள் சிலவற்றை அவர்கள் செய்யாமல் தடுத்து அத்தொழில்களை புதிய அறிவியல் முறைகளைக் கொண்டு நடத்துவிக்கச் செய்தல்.
8. சாதிகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் எழுதப் பெறும் சீர்திருத்த நூற்களன்றிப் பிறவகையில் சாதிப் பாகுபாடுகளை வற்புறுத்தும் அற நூற்கள் (மனு முதலியன), இன நூற்கள் முதலிவற்றிற்குத் தடைபோடுதல்.
9. சாதி அடிப்படையில் தனிப்பட்ட சலுகைகளை எவர்க்கும் வழங்காது மக்கள் ஏழ்மை யடிப்படையில் எல்லார்க்கும் பொதுவான கல்வி, தொழில் முதலியவற்றை அமைத்துத் தருதல்.
10. சாதி வெறியர்களைத் தோன்ற விடாது பல்வகையாலும் தடுத்து நிறுத்தல்.
ஆனால் இவற்றை யெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வரும் துணிவும், அறிவும் உணர்வும் எந்தவொரு கட்சிக்கோ, தலைவர்க்கோ, அவரால் அமைக்கப் பெறும் குடியரசு ஆட்சி அமைப்பிற்கோ இருக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூறலாம். பட்டாள ஆட்சியோ, வல்லதிகார ஆட்சியோதாம் அவற்றைச் செய்ய முடியும். அதுவரையில் எத்தகைய கல்வியாலுமோ, ஆட்சியாலுமோ சாதியென்னும் பரந்து வளர்ந்த கள்ளிக்காட்டில் ஒரு சுள்ளியைக் கூட அகற்றிவிட முடியாது. வேண்டுமானால் அவர்களின் அரசியல் பித்தலாட்டங்களுக்குச் சாதியொழிப்பு என்ற சடங்கு முறையையும், அவர்தாம் நடிக்கும் அரசியல் சீர்திருத்த நாடகங்களில் சாதியொழிப்பு என்ற ஒரு நகைச்சுவைக் காட்சியையும் காட்டிக் கொண்டிருக்கலாம். மற்றப்படி அவற்றால் ஒரு சிறு மாறுதலையும் கட்டாயம் விளைவித்து விட முடியாது. வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல் நம் நாட்டை அடைத்துக் கொண்டுள்ள சாதிக் காடுகளை அழிக்கும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. ஆங்காங்குக் குமுகாயக் காளான்களாக முளைத்துக் கொண்டிருக்கும் 'சாதி'க் கிறுக்கர்களின் வெறிக் கூட்டங்களில் நம்மையும் உறுப்பினராக்கிக் கொள்ளாமலிருப்போமாக.
தென்மொழி, சுவடி. 3 ஒலை-8 (1965)
நாம் ஒரு தவற்றைப் பிறர்க்குச் சுட்டிக்காட்டித் திருத்தம் செய்து கொண்டு வருங்கால், நாமே அத்தவற்றைச் செய்யாமல் இருக்கிறோமோ என்று விழிப்புடன் பார்த்துக் கொள்ளல் வேண்டும். நான் சொல்வது போலச் செய், ஆனால் நான் செய்வது போலச் செய்யாதே (Do as say but don't do as i do) என்று பொது மக்களிடம் சொல்லுதல் கூடாது.
'ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு?'
என வள்ளுவர் கேட்டிருக்கின்றார். பொதுவான மாந்தனுக்கே இந்த இலக்கணம் என்றால் பொதுத்தொண்டு, குமுகாயச் சீர்திருத்தம் செய்யவேண்டியவர்களுக்கோ இக்கண்ணோட்டம் மிகுதியும் வேண்டும்.
பெரியார் ஈ.வே.இரா. அவர்களின் இயக்க இதழாக நடந்து வரும் ‘விடுதலை', தமிழகத்தின் தன்மதிப்புக் கழக ஏடாகும். பகுத்தறிவுக்கேற்ற செய்திகளுக்கும், குமுகாயச் சீர்திருத்தச் செய்திகளுக்குமே இன்றியமையாமை காட்டி வெளிவரும் ஏனெனில் விடுதலை இதழில், சாதிப் பெயர்கள் வருவது வருந்தற்குரியது மட்டுமன்று கண்டித்தற்குரியது. ஏனெனில் விடுதலை கொண்ட குமுகாயத் திருத்தங்களுள் சாதி யொழிப்பும் தலையாய வேலை யில்லையா?
எடுத்துக் காட்டாகக் கடந்த சில விடுதலை இதழ்களில் வந்த 'சாதிப்' பட்டங்கள் நம்மை மிகவும் வருந்தவும் நாணவும் செய்கின்றன.
பெரியாரவர்கள் 4-10-66 அன்று குடியேற்றத்தில் பேசவிருந்த விளம்பரத்தில் "எம்.வி.சாமிநாத முதலியார் தலைமையில் பெரியார் பேசுவார்" என்று வெளியிட்டிருப்பதும், 13.9.66 அன்றைய தாளில் 29.8.66 அன்று மாத்துரில் பெரியார் தலைமையில் நடந்த திருமணத்தில் திரு. சகதீச முதலியார் அவர்களும் பேசினார் என்று வந்திருப்பதும், பெரியார்
விழாக்குழுவின் பெயர்களை வெளிப்படுத்திய பட்டியலில் (4.10.66) திரு. ஏ.எசு.சி, உலூர்துசாமிப் பிள்ளை, திரு.டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, திரு.அ.வெ.ரா.கிருட்டிணசாமி ரெட்டியார் முதலியவரும் உளராகக் காட்டியிருப்பதும், 'விடுதலை'யின் சாதியொழிப்புக் கொள்கைக்கு இழுக்கைத் தேடுவனவாகும். உலூர்துசாமி, நாராயணசாமி, கிருட்டினசாமி என்று திருத்தி வெளியிடுவதால் அவர்கள் எல்லாரும் வருந்துவார்கள் என்றால் ஈ.வே.இராமசாமி நாய்க்கர் என்று தினமணி, சுதேச மித்திரன் வெளியிடுவதற்காகப் பெரியார் மகிழ்கின்றார் என்பது பொருளா? அல்லது வருந்துகின்றார் என்றால் அதில் என்ன பொருளிருக்கிறது? இங்கெடுத்துக் காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுகள் இரண்டே! ஒவ்வொரு நாளும் விடுதலையில் இத்தகைய சாதிப்பட்டங்கள் எவர் பெயருடனாவது ஒட்டிக்கொண்டுதாம் வருகின்றன. இது பெரும்பாலும் ஆசிரியர் பிழையாகும். இத்தவற்றைக் கவனித்து உடனே திருத்திக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம். இல்லையேல் இது பெரியாரின் கொள்கைக்குப் பேரிழுக்காகும் என்பது சொல்லித் தெரிதல் வேண்டா.தென்மொழி, சுவடி-4, ஒலை-9, (1966)
துறக்க மென்பார்; இறைப் பணியென்பார்;அன்பென்பார்;
தொலைசென்று கற்றவர் என்பார் - கண்
உறக்க மிலாதுயிர்த் தொண்டென்பார்; பணியென்பார்
உலகெலாம் ஒன்றென ஆர்ப்பார்!
சிறக்க வுண்பார்; உடுப்பா ரருஞ் செயல்களைச்
சிறப்புறச் செய்தனம் என்பார் - ஆனால்
பறக்கும் பறவைக்கும் விலங்குக்கும் இல்லாத
பல் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்.
வளியும் எழுசுடர் ஒளியும்ஆய் வார்; கடல்
வண்ணமும் மண்ணையும் ஆய்வார் - புற
வெளியும் உலாவி விண் கோளுக்குஞ் சென்றுயிர்
வீழ்வையும் வென்றனம் என்பார்!
துளியும் மடமை யிலாதெங்கும் ஒட்டியே
தோற்றுவோம் புத்துல கென்பார் - ஆனால்
நெளியும் புழுவுக்கும் பாம்புக்கு மில்லாத
நெடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்!
மருவறப் பேணுக உடலென்பார்; உளமென்பார்!
மற்றுயிர் போற்றுக வென்பார்! - நிலத்
தொருவருக் குணவிலா திருந்திடில் உலகத்தை
ஒழித்திடு வோம்; உண்மை யென்பார்!
தெருவற ஊரற நாள்தோறும் கூட்டங்கள்
திட்டங்கள் பற்பல செய்வார் - ஆனால்
கருநிறக் காக்கைக்கும் கழுகுக்கும் இல்லாத
கடுஞ் 'சாதி'ப் பிரிவுகள் கொள்வார்!
எவர்முகங் கண்டாலும் இழி 'சாதி'க் குறிகள்;ஈங்
கெவர்பெயர் பின்னுக்கும் வால்கள் - தெருச்
சுவர்களில் இல்லக் கதவுகள் தம்மிலும்
சூழ்ந்தன இழி சாதிப் பேய்கள்!
அவரவர் குலத்துக்குத் தனித்தனிக் கழகங்கள்!
அவரவர் குலத்துக்குப் பள்ளி - கற்ற
எவரெவர் ஆனாலும், குலவெறித் தீமைக்கே
இழுக்குவார்! என்னென்று சொல்வோம்!
தென்மொழி, சுவடி-4, ஒலை-9 (1966)
தம்பி! சென்ற இரண்டு இதழ்களிலும் எதிர்காலத்தைப் பற்றியும், அந்த எதிர்காலத்தைச் சிறந்ததாகவும் இன்பமானதாகவும் உருவாக்க வேண்டுமானால் நீ நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் ஒருவாறு தெளிவாகச் சொன்னேன். இந்த இதழில் நாம் தவிர்க்க வேண்டிய சில பூசல்களைப் பற்றிக் கூறுவேன்.
தம்பி! மாந்தர்களாகிய நாம் விலங்குகள், பறவைகள், பிற சிற்றுயிர்கள் போல் அன்றி, உயர்ந்த அறிவுணர்வும் எண்ணுதிறனும் செயல் திறனும் வாய்ந்தவர்கள் இல்லையா? எனவே நாம் எல்லாரும் ஒரே இனம், ஒரே வாழ்க்கை உடையவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தவறில்லை அன்றோ? ஆனால், தம்பி, நாம் எல்லாரும் ஒன்று என்று ஒப்புக் கொள்கின்றோமோ? நான் வேறுசாதி, நீ வேறு சாதி; அவன் வேறு சாதி என்று நம்மில் நாமே ஆயிரக்கணக்கான சாதி குலங்களாகப் பிரித்துக் கொண்டுள்ளோம். உன்னுடன் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளைக் கேட்டுப்பார். சிலர் தங்களைப் பிராமணர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வர்; சிலர் தங்களைச் செட்டியார், முதலியார், பிள்ளைமார், பள்ளர், பறையர் என்று இன்னும் நூற்றுக்கணக்கான சாதிப் பெயர்களைக் கூறுவார்கள். அவர்கள் அத்துடன் நில்லாது இவன் இன்னவனைவிட உயர்த்தி, இவன் இவன் தாழ்ச்சி, இவன் வீட்டில் நாங்கள் தண்ணீரும் அருந்தமாட்டாம் இவன் வீட்டுப் பக்கமே நாங்கள் போகமாட்டோம் என்று பலவாறாக இழிவாகவும் பழிப்பாகவும் பேசிக் கொள்ளுவர்.
இவ்வகையான சாதிகளும் இழிவு தாழ்வுகளும் இவர்களில் மட்டு மன்றி இவர்கள் வழிபடுகின்ற தெய்வங்களிலும் வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்திருக்கின்றன தெரியுமா? சாதியின் பெயரால் அல்லது குலத்தின் பெயரால் மக்கள் பிரிக்கப்படுகின்ற அதே நேரத்தில் சமயத்தின் அல்லது மதத்தின் பெயராலும் மக்கள் பலவாறு
பிரிக்கப்பட்டுள்ளனர். ஒருவன் சைவன் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக்கொள்ளுகின்றான் இன்னொருவன் வைணவன் என்கின்றான். இப்படிச் சமணன் என்றும், புத்தன் என்றும், இசுலாமியன் என்றும், கிறித்துவன் என்றும் பலவாறாகத் தம்மைக் கூறிக்கொள்கின்றனர் மக்கள்.தம்பி! இவர்கள் இத்துடன் நிற்கவில்லை. இவர்கள் சார்ந்த சாதிகளையும் மதங்களையும் வெளிப்படையாகக் காட்டி அவ்வவற்றிற்கான குறியீடுகளையும், பூச்சுகளையும் தங்கள் உடல்களில் அணிந்து கொள்கின்றனர். பிராமணன், தான் எல்லா மக்களினும் மிகவும் உயர்ந்தவன் என்று கூறிக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் ஒரு பூணூலையும் தன் உடலில் மாட்டிக் கொள்கிறான். உன்னுடன் படிக்கும் பிராமணத் தம்பியை நீ அழைத்து "தம்பி உன் உடலில் பூணூல் அணிந்திருக்கின்றாயா?" என்று கேள். "ஆமாம்" என்பான். அஃது எதற்கு? என்று கேள். "நாங்களெல்லாரும் பிராமணர்கள் உங்கள் எல்லாரையும்விட சாதியிலே உயர்ந்தவர்கள்" என்பான். இன்னும் சைவனாக இருந்தால் பூணுலுடன் நெற்றி நிறைய நீறும், வைணவனாக இருந்தால் பட்டையான நாமமும் தீட்டியிருப்பான்.
தம்பி! இந்தச் சாதியமைப்புகளும் சமய அமைப்புகளும் போலியாகவும், பூசலுக்காகவும் ஏற்பட்டவை. மக்கள் அறியாமையால் தங்கள் தங்களுக்குள் உணவுக்காகவும், உடைக்காகவும், உறையுளுக்காகவும் போரிட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்கள்; மூட நம்பிக்கைகள். இவை இவ்விருபதாம் நூற்றாண்டின் எல்லைவரையிலும் கூட நம்மை விட்டுப் போன பாடில்லை. நாம் இறந்துபோன பின்னர்கூட இச்சாதிகளும் சமயங்களும் நமக்கு அடையாளங்களாக நின்று நம்மைத் தாழ்த்திக் கொண்டும் உயர்த்திக் கொண்டும் உள்ளன.
அன்புள்ள தம்பி! இறைவன் பொதுவானவன். அவன் இன்ன வடிவினன், இன்ன நிறத்தினன் என்றுகூட நம்மால் அறிய முடியாது. உணர்வு வடிவமாக இவ்வுலகங்கள் எல்லாவற்றிலும் காற்றுப் போல், ஒளியைப்போல் அளாவி நிற்கும் இவ்விறைப் பேராற்றலை நாம் வணங்கினாலும் அல்லது வணங்காமல் நின்றாலும் ஒன்றுதான். எல்லா அறிவும் தானேயாக நிற்கும் அவ் விறையாற்றலுக்கு நம் அறிவும் ஒன்று தான்; அறியாமையும் ஒன்றுதான். விருப்பு வெறுப்பற்ற அப்பேருண்மைக்கு நம் விருப்பமும் ஒன்றுதான்; வெறுப்பும் ஒன்றுதான். எனவே தம்பி, நீ நெற்றி நிறைய நீறுபூசிக் கொள்வதும், நாமம் தீட்டிக்கொள்வதும் அவற்றுக்குள் பூசல்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்துக் கொள்வதும் உன் அறியாமையே தவிர வேறு இல்லை. நீ செய்கின்ற அறியாமைக்கும் பூசல்களுக்கும் இறைவனைக் காரணங்காட்டாதே! நம் சாதிப் பூசல்கள் நம் இனத்தை அழிப்பன. நம் சமயப்பூசல்கள் நம் அறிவைத்
தடுப்பன. நம்மைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் குல சமயப் பூசல்கள் ஒழியும் வரை தம்பி! நாம் முன்னேறி விட்டோம் என்று சொல்ல முடியாது. மனத்தில் அழுக்குகளையும் அறிவில் இருளையும் வைத்துக்கொண்டு உடலில் குலக்குறிகளையும் சமயக் குறிகளையும் இட்டுக்கொள்வது மிகவும் அருவருப்பாகும்.தம்பி, நாம் எல்லாரும் ஒரே இனம் என்று எண்ணு! சாதிப் பிரிவை வெளிப்படுத்தும் குறிகளை விலக்கு. சமயப்பிரிவைப் பறைசாற்றும் குறிகளை அகற்று. அகமும் புறமும் தூய்மையாக இருக்கட்டும். நம்மில் எவ்வகையிலும் இழிவு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டிருக்கும் தீய கொடும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டிய இழிவுகளுள் முதலாவதாகும். அதனை உடனே களைந்தெறி!
தமிழ்ச்சிட்டு குரல்-3 இசை-8, 1969)
சாணித் திரளைகள் நாம்!
எங்குப் பிறப்பினும் வாழினும் என்னினம்
ஏற்றமுற் றுய்யவே வேண்டுவேன்!-ஒரு
தங்கச் சிலையினைக் காப்பதுபோல் தமிழ்த்
தாயினைக் காக்கவே தூண்டுவேன்!
வங்கக் கடலினைத் தாண்டினும் மேற்றிசை
வானைக் கடந்துநாம் வாழினும்-புகழ்
மங்கச் செயுங்குலத் தாழ்ச்சியை என்னினம்
மண்ணிற் புதைத்திடக் கேட்குவேன்!
செந்தமிழ்த் தாய்பெற்ற பிள்ளைகள் நாம்;ஒரு
சேரப் பழுத்த பழக்குலை!-இதில்
எந்தப்ப ழத்தை உயர்வென்று சொல்வது?
எதனை இழிவெனக் கொள்வது?
முந்தப் பெறும்பல பேரினங்கள் இந்த
முதுமை நிலத்தினில் வாழ்கையில்-நாம்
கொந்திப் பிடுங்கிடும் தாழ்ச்சி யுயர்ச்சியால்
குலங்குல மாய்மனங் காய்வதோ ?
வேற்றுப் புலத்திடை வாழவந் தோம்;உயர்
விண்ணை-கடல்களை நீந்தினோம்!-நிலந்
தூற்றப் பெறுங்குலத் தாழ்ச்சி உயர்ச்சியின்
தொல்லைகள் நீந்தத் தயங்குவோம்!
மாற்றப் பெறும்புதுத் தோற்றங்கள் பார்க்கிறோம்
மற்றும் பொதுமைகள் காண்கிறோம்!-உயிர்
ஊற்றை-உடலினைத் தாழ்வு சொலும், இழி
வுள்ளச் சிறுமைகள் சேர்க்கிறோம்!
வானென ஓங்கிடும் கட்டிடங் கள்,பல
வாழ்க்கைப் புதுமைகள் செய்கிறோம்!-விண்
மீனெனப் பூத்த உயிர்களி டையே, கீழ்
மேலென வேற்றுமை பெய்கிறோம்!
தானுயர் வென்றிடும் சாதிகளும் ஒன்றிற்
றாழ்ந்த நிலைக்கொன்று தாழ்கையில்-தாழ்(வு)
ஏனெனக் கேட்க நடுங்கிடு வோம்; அறி
வூக்கமி லாதவோர் தன்மையால்!
சேர்க்கின்ற வேற்றுமை பற்பல; நம்மினம்
செய்த கொடுமைகள் பற்பல!-தீமை
வேர்க்கின்ற உள்ளங்கள் பற்பல!கூசிடும்
வெட்டிப் பொறாமைகள் பற்பல!
ஆர்க்கின்ற நூல்களால் என்னபயன்? கோடி
அறங்கள் முழக்கிடும் நூல்களேன்? - நாம்
யார்க்கவை சொல்லத் துடித்திடுவோம் ? நம்மை
யாருக்கிங் கே,விலை போக்குவோம்?
'சாதி'ப் புழுக்கள் நெளிந்திடு மோர்மொத்தைச்
சாணித் திரளையாய் வாழ்கையில்-நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்; உல
கோருக் குரைக்கத் துடிக்கிறோம்!
காதுயிர்ப் பற்றசெ விடர்களாய், இரு
கண்களி லாத குருடராய்-நில
வீதி யுலாவரப் பார்த்திடு வோம்! என்ன
வேட்கையில் இங்ஙணம் செய்குவோம்?
முன்னம் பிறந்தவர் என்பதனால் உயர்
மூதுரை சொல்லத் துடிக்கிறோம்-எனில்
சின்னஞ் சிறியராய் வாழ்ந்திடு வோம்;மனச்
சிறுமையி னால்புழு வாகிறோம்!
இன்னும் நினைக்க மறுத்திடு வோம்; உல
கேசும் படிபல பேசுவோம்!-நறுங்
கன்னல் மொழித்தமிழ்த் தாயினமே, சாதிக்
காற்றில் கரைந்துயிர் சாய்வதோ ?
தென்மொழி சுவடி-1 ஓலை-8,9 (1974)
தமிழர்கள் இவ்வுலகில் எங்குப் போய் வாழ்ந்தாலும் ஒரே உணர்வினராக - ஒரே வகைப் பண்பினராக வாழ்கின்றனர் என்பது ஒரளவில் மகிழ்ச்சி தருவதனாலும், பிறிதோரளவில் மிகவும் வருத்தம் தருவதாகவும் இருக்கின்றது என்பதை என் சிங்கை மலேசியச் சுற்றுச் செலவின் பொழுது உணரவேண்டியிருந்தது. தாய் நிலந் துறந்து வேற்றுப் புலங்களில் வயிற்றுக்காகவும் வாழ்க்கைக்காவும் குடி பெயர்ந்து மலைகள் தாண்டியும் கடல்கள் தாண்டியும் சென்று வாழும் தமிழர்கள், பெரும்பாலும் கடந்த இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் என்னென்ன வகையான உணர்சசிகளுடன் வாழ்ந்தார்களோ அவ்வவ் வகையான உணர்ச்சிகளுடனேயே அங்கும் போய் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் மொழிப்பற்றும் இனப்பற்றும் அவர்களின் நல்லுணர்வுகளாக இன்றும் ஆங்காங்கே பளிச்சிட்டு மிளிர்கின்றன என்றாலும், தமிழகத்தில் உள்ள மூடநம்பிக்கைகளும் அவர்கள் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து கொண்டிருப்பதைப் பல விடங்களில் பலர்வயின் கண்டேன்; கண்டு மிகவும் வருந்தினேன்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ள தமிழர்கள் பலர் பல தலைமுறைகளைக் கண்டவர்களாக விளங்குகின்றனர். அவர்களுள் பெரும்பாலார் தங்கள் உடைகளிலும் உணவு முறைகளிலும் ஆங்காங்கு உள்ள பழக்கவழக்கங்களையே பின்பற்றி வருகின்றனர் என்றாலும், சிறுபான்மையினர் இன்றும் வேட்டி சட்டை உடுப்பவர்களாக இருப்பதையும் கண்டு மகிழ்ந்தேன். மேலும் தோட்டப்புறங்களில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்கள் குடியிருப்புகளில் புகுங்கால் தமிழகத்திற்குள் நுழைவது போன்ற ஒர் உணர்ச்சியே உண்டானது. சில இடங்களில் அரசமரத்தடி கோவில்களும் நம் பெண்களின் அரட்டை அளப்புகளும் எனக்குத் தமிழகச் சிற்றூர்ப் புறங்களையே நினைவூட்டின. ஆனால் இவ்வகை உணர்வுகளில் எல்லாம் என் உள்ளத்தில் தீப்போல் காந்தியவை, அவர்கள் தங்களுக்குள் இன்னும் விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் குல, சமய வேறுபாடுகளேயாகும்.
சிங்கை மலேசியத் தமிழர்களுள் ஒரு கணிசமான பகுதியினர் இலங்கைத் தமிழர்களாவர். அவர்களும் தாய்த் தமிழகத்தினின்று குடியேறிய பலரும் பெரும்பாலும் சிவனிய(சைவ)க் கொள்கையினராக இருந்தாலும் மாலிய (வைணவ) வழிபாடும் வேறுசில சிறுதெய்வ வழிபாடுகளும் கூட அவர்களிடையே இருந்து வருகின்றன. தமிழகத்துப் பிராமணப் பூசாரிகள் சிலர் சில கோயில்களில் இருந்து வழிபாடுகளுக்குதவுவதை நான் பார்த்து வியந்தேன். சிலரிடம் இதைப்பற்றிக் கேட்டபொழுது, அவர்கள் தமிழகத்தினின்று இதன் பொருட்டாகவே தருவிக்கப்பட்டனர் என்று விடை கிடைத்தது.
சில கோயில்களில் தமிழ்க் குருமார்கள் சிலர் பூச்சார்த்திகளாக இருந்து வருவதும் குறிப்பிடத் தகுந்தது. கோயில்களைப் பற்றிய அமைப்புகளிலெல்லாம் தமிழக மணமே வீசுகின்றது. சிலைகளின் அமைப்பும் கோயில் மதில் சுவர்களின் தோற்றமும் வண்ணப் பூச்சுகளும் தமிழகத்தையே அங்கு உருவாக்கிக் காட்டுகின்றன. அவை முற்றும் தமிழகச் சிற்பிகளையே கொண்டு செய்யப்பட்டனவாகத் தெரிகின்றன. சிலவகைச் சமய மூடநம்பிக்கைகளையும் அங்குத் தமிழகத்தைப் போலவே காண நேர்ந்தது. ஆனால் இவற்றில் எல்லாம் கூட என் மனம் மிகவும் வருந்துமாறு ஏதும் நடந்து விடவில்லை. தமிழ் எவ்வாறு ஆரியக் கலப்பு நீக்கம் பெற்றுத் தூய்மையுற வேண்டியுள்ளதோ, அதுபோலவே தமிழர்களின் சமயவுணர்ச்சியும் ஆரியக் கலப்பு நீக்கம் பெற்றேயாகல் வேண்டும். அதைத் தொற்றிக் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், மனவேறுபாட்டு நோய்கள் முதலியனவும் நீங்கியாகல் வேண்டும். அதுவரை நாம் கொண்டுள்ள சமயக் கோட்பாடுகள் முழுத்துய்மை பெற்றனவாகவோ பொதுமை சான்றனவாகவோ எல்லா மக்கள் நலத்திலும் ஒரே படித்தான அக்கறை கொண்டுள்ளனவாகவோ கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ள முடியாது.
இனி, சமய நிலைகள் ஒருபுறம் இவ்வாறிருந்தாலும், தமிழர்கள் தங்கள் தாய்நிலந் துறந்து அயல்நிலங்கள் நோக்கிக் கப்பல் ஏறும் பொழுது விடாப்பிடியாக அவர்கள் தமிழகத்திற் கொண்டிருந்த குலவேறுபாட்டுக் குப்பைக் கூலங்களையும் அன்றோ, அவர்கள் வாழப்புகுந்த அயல் நாடுகளுக்கு வாரிக்கொண்டு சென்றிருக்கின்றார்கள்! இந்த உண்மைதான் என் நெஞ்சாங்குலையில் நெருஞ்சி முள்ளெனக் குத்திக் கொண்டுள்ளது. இவர்களின் அறியாமையை என்னென்பது பெயர்களின் பின்னர் இன்னும் வாலிட்டு எழுதுவது, இடுகாடு சுடுகாடுகளில் கூடச் சிற்சில இடங்களில் குலப்பிரிவுகளைக் கையாள்வது, திருமண, இறப்பு நிகழ்ச்சிகளில் குலவேறுபாடுகளைத் தெற்றெனக் காட்டும் பழக்க வழக்கங்களை இன்னும் குரங்குப் பிடியாய்க் கை கொண்டிருப்பது போலும் தீய மூடப்பழக்கங்கள் தமிழர்கள் எத்துணையளவு நாட்டியல், குளமுகவியல், பொருளியல் முன்னேற்றங்களைப் பெற்றாலும் தங்கள் மனங்களில் உள்ள மனக் கசண்டுகளை நீக்கிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலர் அவ்வப்பொழுது பொருளியல் முன்னேற்றம் ஏற்படுமானால் இந்தக் குல முறைகள் மூடநம்பிக்கைகள் எல்லாம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறக் கேட்டிருக்கின்றேன். பெரும்பாலும் பொதுவுடைமைக் கொள்கையினரும் பேராயக் கட்சிக் கொள்கையினர் சிலரும் இதைக் கூறி வருகின்றனர். இந்தக் கூற்றுக்கு மண்டையடி விழுந்திருக்கின்றது இங்கே! பொருளியல் மட்டுமன்று - அறிவியலில் முன்னேறினால் கூட, சில சமய வெறிகளும் 'சாதி'வெறிகளும் அறவே ஒழிந்து போகாமற் போனாலும் அடங்கியாகிலும் கிடக்குமா என்னும் ஐயப்பாடு என்னுள் பூதம்போல் வளர்ந்து விட்டது.
தமிழகத்தினின்று ஓராண்டுக்கு முன் இங்குச் சுற்றுலாப் போந்த திரைப்படப் பாட்டாசிரியர் கண்ணதாசன் இங்குப் பேசிய கருத்துகளைப் பற்றி அன்பர்கள் சிலர் வாயிலாகக் கேட்டுக் செவிகொதித்துப் போனேன். நிகரியக் கொள்கைகளையும், காந்தியப் பொதுமைக் கருத்துகளையும் பேசிவரும் அத் தமிழகக் குடிமகன், கோயில் கூட்டங்களிலேயே, கள்ளொழுகும் வாயுடன் 'முருகன் எங்கள் செட்டிக் குலத்தைச் சேர்ந்த கடவுள். ஐம்பெரும் பாவியங்களுள் இரண்டு பெரும் பாவியங்கள் (சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) எங்கள் செட்டியினப் பாவியங்கள்' என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டாராம். அதைக் கேட்டு, இங்கு வாழும் அவ்வினத்தவருள் பெரும்பாலோர் மிகவும் உடல் குளிர்ந்து போனார்களாம். (மேலும் அக் கண்ணதாசர் என்ன கூறினார் என்பதைக் கேட்கையில் அண்மையில் ஏதோ எம்.சி.இராமச்சந்திரன் தம் தேர்தல் விரகாண்மைக்காக, "நான் சொன்னால் தமிழகப் பெண்கள் தங்கள் கணவன்மார் பேச்சைக் கூடக் கேட்காமல் ஒப்போலைகளை எங்கள் கட்சிக்கே போடுவார்கள்" என்று சொன்னதைத் தப்பறைகொட்டி வாய்ப்பறை கிழித்த பச்சைத்தமிழர் பலர் இதைக் கேட்டால் என்ன கூறுவார்களோ என்று மனங்கொதித்து நின்றேன். "நான் இங்குள்ள இத்தனைக் கடவுள்களுள் ஏன் கண்ணனை என் கடவுளாகக் கொண்டிருக்கின்றேன் என்றால் அவன்தான் பெண்கள் பலருடன் கூடிக் களித்திருக்கின்றான்; அவனைப் போல்தான் நானும்" என்று கண்ணதாசத் தமிழர் பெண்கள் எல்லாரும் தலைகவிழ்ந்து நாணுமாறு பெரிய பொதுக் கூட்டத்திலேயே பெருமை பேசியிருக்கின்றார். இதற்காகத் தான் போலும் இவர் தமிழகத்தில் கண்ணன் கோயிலைக் கட்ட முனைந்திருப்பதும், அதற்கு பலரும் ஊக்கமாக நின்று ஆக்கந் தருவதும்.) இந்நிலைகள் எல்லாம் குலவெறிக்கு எத்துணையளவு இங்கு வலிவூட்டப் பெற்று வருகின்றது என்பதையும், அவ்வெறி இங்கு எத்துணையளவு வேரூன்றியிருக்கின்றது என்பதையும் தெளிவாக உணர்த்தும்.
மேலும் இங்குப் பலவாறான சாதி இயக்கங்கள் இயங்கி வருவதையும், அவை தங்கள் இனவேறுபாடுகளைப் பலவாறு விரிவுபடுத்திப் பூசல்கள் இட்டுக் கொள்வதையும் காணுங்கால் தமிழன் நிலாமண்டிலத்திற்கே போய் வாழ நேரிட்டாலும் சாணிச் சட்டியில்தான் தன் தலையைத் தோய்த்துக் கொள்வான் என்றே உறுதியாக நம்ப வேண்டியிருக்கின்றது. அவன் எத்தனை வகையான உடைகளை உடுத்தால் என்ன? எவ்வளவு உயர்ந்த உணவு வகைகளை உண்டால் என்ன? எத்தனை நாகரிகமுள்ள மக்களிடையில் போய் வாழ்ந்தால்தான் என்ன? அல்லது எத்தனை உயரமான கட்டிடங்களில் போய் வாழ்ந்தால் தான் என்ன? அவன் உள்ளத்தில் குலவேறுபாட்டு முடை நாற்றமும், மூளையில் உயர்ச்சி தாழ்ச்சியென்னும் மேடு பள்ளங்களும் அகற்றப் பெற்றுச் சமனிலைப் படாதவரை, தமிழகத்தின் குப்பை மேடுகளின் மலப்புழுவாய் அவன் நெளிவதும் அமெரிக்க அரசவை விருந்தினனாக அவன் உலாவருவதும் ஒன்றுதான்! அதனால் அவனுக்கோ பிறர்க்கோ என்ன பயன் ஏற்பட்டு விடப் போகின்றது என்பது விளங்கவில்லை.
இனி, என் அயலகச் செலவின் பொழுது நான் அறிந்து கொண்ட தமிழகச் செய்திகளுள் என்னை அதிரச் செய்தது, மதுரையில் நடந்த 'யாதவர்' மாநாட்டுத் தீர்மானந்தான். 'மொழி, மாநில வேறுபாடுகளை யெல்லாம் மறந்து இந்தியாவில் உள்ள யாதவர்களெல்லாம் ஒன்றுபடவேண்டும்', என்றும் 'இனிமேல் தென்னகத்தில் உள்ள யாதவர்களும் கோனார், பிள்ளை என்னும் குலப்பட்டங்களை வைத்துக்கொள்வதை விட்டு விட்டு வடநாட்டினர் போல் யாதவ்' என்னும் பட்டத்தையே வைத்துக் கொள்ள வேண்டும்', என்றும் அம்மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பெரியார், அண்ணா, பாரதிதாசன் போன்றவர்களின் பகுத்தறிவுக் கொள்கையின் மேல் விழுந்த சமட்டி அடிகளாகும்! இவ் விருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மேனாட்டார் நிலாக் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் வலைவீசிக் கொண்டுள்ள காலத்திலும் - தமிழர்கள் இத்தகைய கீழ்மை நிலைக்கும் கூடப்போகத்தான் போவார்களென்றால் அவர்கள் கற்காலத்திற்கே கூடத் திரும்பிப் போவது நல்லது என நெஞ்சார நினைக்கின்றேன். 'ஓ! தமிழ இனமே! நீ அடிமையாக வாழ்ந்தாலும் சரி; அரசனாக வாழ்ந்தாலும் சரி, பதியெழுவறியாப் பழங்குடியாக இருந்த இடத்திலேயே இருந்தாலும் சரி; அல்லது பதிபெயர்ந்து அகன்று பாரெங்கிலும் உள்ள நாடுகள் அனைத்திலும் போய்ப் பதிந்து வாழ்ந்தாலும் சரி; உன்னை நீயேதான் தாழ்த்திக் கொள்ளல் வேண்டும்! அத்தனையளவுக்கு ஆரியம் உன்னை அடிமாற்றியுள்ளது; திரிபு படுத்தி உள்ளது. அதன் அடிப்படையாக உள்ள இறுதி அணுவும் உன் உடலினின்று அறக் கழன்றாலன்றி உன் குடிபெயர்ப்பாலும் பயனில்லை; கொடிச் சிறப்பாலும் உயர்வில்லை; நீ என்றென்றும் ஆரியத் தமிழனே! உன்னை ஈடேற்றுபவர் இனி பிறப்பரா என்பது ஐயமே' என நெஞ்சு புழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை!
தென்மொழி: சு:11 8-9, (1974).
தினமணிக் கதிரின்
சாதிவெறித் தூண்டுதலை முதலமைச்சர்
உடனே தடுத்து நிறுத்தவேண்டும் !
'தினமணிக் கதிர்' என்னும் இதழ், தன் விற்பனையைப் பெருக்கும் நோக்கத்துடன், மக்களிடையே, திராவிட இயக்கங்களின் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான அரிய முயற்சியால், ஓரளவு மறைந்து வருகின்ற சாதியுணர்வைத் தூண்டிவிடும் வகையில், சாதியின் பெயரால் சிறப்பிதழ்களை வெளியிட்டு வருவதும், அவ்விதழ்களை வெளிக்கொணர்வதற்கும் அதன் ஆக்கத்திற்கும் உதவும் வகையில் அவ்வச் சாதிகளைச் சேர்ந்த பேதையினரும் சாதிவெறியினரும், தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றிய செய்திகள், தங்கள் சாதிகளைச் சேர்ந்த பெரிய 'பெரிய' அறிவாளித்தனங்களை - செல்வத்தனங்களைக் கொண்ட மக்களைப் பற்றிய விளத்தங்களையெல்லாம் பெருமை(!)யுடன் எழுதி அனுப்புவதும், பின்னர் அவ்விதழ்கள் வெளியானதும் அவற்றைப் போட்டியிட்டுக் கொண்டு படிப்பதும், இதனால் அவ்விதழ் நிறுவனர் கொள்ளை ஊதியம் அடித்துக் கொழுப்பதும் நடுவூரில் நச்சுமரம் செழிப்பதுபோல் நாளும் நடந்து வருகின்றன. இச்செய்தியை அரசு உள்பட அனைவரும் அறிவர்.
ஆனால், பெயருக்காவும், ஏதுமறியாப் பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவும் என்றே, பெரியாரின் பெயரால் கடந்த ஓராண்டுக் காலமாக விழாக் கொண்டாடிக் கொட்டமடித்த அமைச்சர்களும், அதிகாரிகளும், அவரின் சாதியொழிப்புக் கொள்கைக்கு நேர்மாறாக நடந்து வரும் இக் கொடுமையான உணர்ச்சிப் பரவலையும், மக்களின் மென்மையுணர்ச்சிகளைத் தூண்டிப் பணம்பறிக்கும் இப் பகற்கொள்ளையடிப்பையும், கண்டுங் காணாதவர் போல், அல்லது தடுத்து நிறுத்த
51
அவ்வாறின்றி, அவர்கள் இதுவரை, இது பற்றி ஏதும் அறியாதவர்களாயிருப்பின், இன்றே அதுபற்றி உடனடியான நடவடிக்கை எடுத்து, அவ்விதழ் அவ்வாறு சாதி வெறியை வளர்க்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும். முதலமைச்சர் இதுபற்றித் தனிக் கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இல்லெனின் அவ்விதழின் அப் போக்கைக் கண்டிக்கும் நோக்கத்துடன், தென்மொழி பெரிய போராட்டத்தை நடத்தவேண்டி வரும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.
இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
குறிப்பு : ஆங்காங்குள்ள தென்மொழி யன்பர்களும், பிற பொதுநல ஆர்வலர்களும் இவ்வறிக்கையை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுப் பரப்புக. அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்க. பெரிய பெரிய தட்டிகளில் எழுதிப் பொது விடங்களில், பொது மக்களின் பார்வைக்கெனவும் வைக்க.
தென்மொழி சுவடி-17; ஒலை-2 (1980)
52
மீண்டும் தீபம் நா.பார்த்தசாரதி தமிழினத்திற்குக் கேடான சில தில்லு மல்லுகளில் இறங்கியிருக்கிறார். பார்ப்பனர்க்கே உள்ள இயல்பான குறும்புகள் - எவ்வளவு, படித்தாலும் அவர்களை விட்டுப் போகாது என்பதற்குத் 'தினமணிச்' சிவராமன்களும், 'தீபம்' பார்த்தசாரதிகளும், 'துக்ளக்' சோக்களும் என்றென்றும் எடுத்துக் காட்டுகளாகவே இருப்பர். அண்மையில் தீபம் பார்த்தசாரதி, தமிழ் மக்களிடையே அழிந்து வரும் சாதிவுணர்வை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் அல்லது தூண்டிவிடும் வகையில், அவர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தும் தினமணிக் கதிரைச் சாதித் சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறார். செளராட்டிரா சிறப்பிதழ், நகரத்தார் சிறப்பிதழ் என இரண்டு சிறப்பிதழ்களை இதுவரை தினமணிக் கதிர் வெளியிட்டுருக்கிறது. இனி அடுத்து 'ரெட்டியார் சிறப்பிதழ்' வெளிவருவதாக அறிவிப்பு வந்துள்ளது. சாதியின் பெயரால் இன்னும் என்னென்ன சிறப்பிதழ்களைக் கொணர விருக்கிறாரோ நமக்குத் தெரியாது.
பெரும்பாலும் பார்ப்பனர்கள் மற்றவர்களைச் சாதியின் பெயரைச் சொல்லி அழைப்பதிலேயே மிகவும் விருப்பமானவர்கள். என்ன ரெட்டியார், முதலியார் எங்கே காணோம், பிள்ளை அந்த வேலையைச் செய்தாரா, செட்டியாருக்கு என்ன குறைச்சல், கவுண்டருக்கு எப்படி அவ்வளவு கோபம் வந்தது, இருந்தாலும் நாய்க்கர் இவ்வளவு அமர்க்களம் செய்திருக்கக் கூடாது என்ற வகையில்தாம் பார்ப்பனர் பேச்சுக்களில், வக்கணைகள், ஏசல்கள், குத்தல்கள் இருக்கும் இதற்கு என்ன கரணியம் என்றால், மற்றவர்களுக்கு அந்தந்தச் சாதி மறந்து போகாமல் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதொன்று; இரண்டாவது அவர்கள் தம்மை என்றென்றும் பிராமணர் என்பதை மறந்துவிடாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது சூத்திரர்கள் தாங்கள் அனைவரும் ஓரினம் என்பதை உணர்ந்து விட்டால், தங்களைப் பிராமணன் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்
53
முறைப்படி அவர்கள் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்ளுகையில் நம்மைச் சூத்திரர் என்றே சொல்லுதல் வேண்டும். அப்படித்தான் ஆண்டாண்டுக் காலமாய் நம்மைச் சொல்லிக் கொண்டும் வந்தார்கள். இப்பொழுது சமயம் வாய்க்கும்பொழுதெல்லாம் அல்லது அவர்களுக்குள் நம்மைச் சுட்ட வேண்டி வரும்பொழுதெல்லாம் அந்தச் சூத்திரன் இது செய்தான் என்றே சொல்லியும் வருகிறார்கள். பிராமணர் என்பது வருணாச்சிரம முறைப்படி சாதிப் பிரிவு அன்று; குலப் பிரிவு. குலப் பிரிவால் அவனை அழைத்துக்கொள்ளும் அவன் நம்மைச் சாதிப் பிரிவால் ஏன் அழைக்கின்றான். எனில் இச் சாதிப் பிரிவுகளின் பெயர்கள் தொழிலடிப்படையில் தோன்றிய பெயர்கள் என்பது அவனுக்குத் தெரியும். மேலும் பிள்ளை, முதலி, செட்டி, இரெட்டி என்பவை யெல்லாம் தூய தமிழ்ப் பெயர்களாகவே இருக்கும். இந்தப் பெயர்களால் நம்மை அழைக்க விரும்பும் அவன், சூத்திரன் என்ற பெயரால் நம்மை ஏன் வெளிப்படையாக அழைக்க விரும்பவில்லை யென்றால், அந்தப் பெயரின் இழிவை நாம் உணர்ந்து விட்டோம் என்பதால்தான். கடந்தகால இழிவை நாம் உணர்ந்து விட்டோம் என்பதால்தான். கடந்தகாலத் திராவிட இன மீட்பு முயற்சிகளால் ஏற்பட்ட நன்மைகளுள் இதுவும் ஒன்று, சூத்திரன் என்றால், தேவடியாள் மகன், வேசி மகன், அடிமை என்கின்ற பொருளெல்லாம் நமக்குத் தெரிந்து விட்டது என்பதை அவன் உணர்கிறான். அதனால்தான் சூத்திரன் என்ற பெயரால் நம்மை அழைக்காமல் தொழிற்பெயரடிப்படையில் அமைந்த பிரிவுப் பெயர்களையே சாதிப் பெயர்களாக ஆக்கி, அவற்றால் நம்மை அழைத்து வருகிறான். நாமும் அதில் ஏதோ செருப்பாலடித்த பெருமையிருப்பதாகக் கருதி அதை ஒப்புக் கொண்டுவருகிறோம். மற்றபடி அவன் பிராமணனா யிருக்கையில், நாம் சூத்திரர்தாமே என்பதை நாம் உணர்வதில்லை. அப்படி உணராமல் இருக்க சாதி நிலைகளால் ஏதோ ஒரு பெருமையிருப்பதாக நம்மை நம்ப வைத்திருக்கின்றான். அந்த நிலையை நாம் நன்றாக உணர வேண்டுமானால், அவன் சிலரைச் சிலவிடங்களில் பிள்ளையென்றோ, முதலியார் என்றோ, ரெட்டியார் என்றோ வெறுமே அழைக்காமல், நாம் உவக்கும் வண்ணம் என்ன பிள்ளைவாள், முதலியார்வாள், ரெட்டியார்வாள் என்று அழைப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சாதிப் பெயரால் நம்மை அழைப்பது அல்லது அழைத்துக்கொள்வது இழிவு என்றோ தாழ்ச்சி என்றோ நாம் உணர்ந்தால் சாதியமைப்புகளை நாம் கடைப்பிடிக்க மாட்டோம் என்பதால், உயர்வு என்று கருதும்படியே அவன் செய்து வருகின்றான். அதனால் சாதிப் பெயரில் ஒரு கவர்ச்சியோ, பெருமையோ, ஓர் உயர்ச்சியோ இருப்பதாக நாம் கருதிக்கொண்டு, அதனை விட மனமில்லாமல் கடைப்பிடித்து வருகின்றோம். அறிவியல் வளர்ச்சியும், பொது நிலை மலர்ச்சியும் சிறந்தோங்கி வரும் இக்காலத்தில், என்னதான் சாதிப் பெயரில் ஒரு கவர்ச்சியோ, உயர்ச்சியோ இருந்தாலும், அதனைப் போட்டுக் கொள்வதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஒரு நாகரிகமோ, பொருளோ இல்லை என்று கருதும்படியான ஒருநிலை வந்து விட்டதை உணர்ந்துதான், பார்த்தசாரதி முதலிய படித்த சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்கள், அந்த உணர்வுகளை ஒரேயடியாக அழிந்து போய்விடாத வண்ணம், அதை மறைமுகமாக, கலையென்னும் பெயராலும், இன வரலாறு (Social History) என்னும் பெயராலும் வளர்க்கத் தலைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொலைகாரக் குறும்பை நாம் விளங்கிக் கொண்டு இதனை முளையிலேயே கிள்ளி யெறிதல் வேண்டும்.
பார்த்தசாரதி முதலியவர்கள் சாதிப் பெயர்களைக் கிண்டிக் கிளறுவதால் இருவகையான நன்மை பெறுகிறார்கள். ஒன்று, சாதிப் பற்று அல்லது வெறியுள்ள அந்தச் சாதியார்கள் அவ்விதழைக் கட்டாயம் பேரளவில் வாங்குவார்கள். அவ்வகையில் மிகுந்த விற்பனையும் கொள்ளை ஊதியமும் கிடைக்கும். இஃது உடனடியான பயன். இரண்டு, அசைவுற்று வரும் பார்ப்பனர் வகுத்த சாதி வேற்றுமைகள் நிலைநிறுத்தப்படும் இது மெதுவாக ஆனால் உறுதியாகக் கிடைக்கும் பயன். அதனால்தான் தினமணிப் பார்ப்பனர்கள் சாதி யிதழ்களைத் துணிவாக வெளியிட முனைந்து வருகின்றனர்.
இந்த நிலையை நாம் மேலும் வளர விடக் கூடாது. பார்த்த சாரதிக்கு சாதி யிதழை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளும், கண்டன மடல்களை ஏராளமாக அனுப்பிவைக்க வேண்டும். அவற்றுக்குச் செவிசாய்க்க வில்லையானால் தினமணி கதிர்களை வாங்க வேண்டாம் என்று வாசகரிடத்திலும், விற்க வேண்டாம் என்று கடைக்காரர் களிடத்திலும் கேட்டுக் கொள்ள வேண்டும். மீண்டும் அவ் வேண்டுகோள்கள் கேட்கப் பெறாவிடத்து கடைகளில் விற்பனை நடக்காத வண்ணம் மறியலில் ஈடுபடுத்த வேண்டும். எஃது எப்படியாயினும் சாதி நிலைகளுக்கு இக்கால் சிறிது தளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. போகப் போகப் இத்தளர்ச்சி வளர்ச்சி பெற்று சாதித் தவிர்ப்புணர்வுகள் மிகலாம். அதன்பின் சாதியழிவுகள் தோன்றிப் படிப்படியாக ஒழிய வேண்டியதுதான். ஆனால் நம் முயற்சிகளுக்கெல்லாம் பெருந்துணையாகத் தமிழ் மொழியை வளர்ப்பதும் அதன் வழித், தமிழுணர்வை - நாமெல்லாம் ஒரே தமிழின மரபினரே என்றெண்ணும் நினைவை வேரூன்றச் செய்வதும் மிக மிக இன்றியமையாதனவாகும். ஆங்காங்குள்ள தமிழறிஞர்களும், தமிழிளைஞர்களும், அன்பர்களும் ஒன்றுகூடித் திட்டமிட்டுப் பார்த்தசாரதிகளுக்கு நேர் எதிர் வினைகளில் இறங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
தென்மொழி, சுவடி-16; ஒலை-10. 1980
திருக்குறள் பரப்புவதையே தங்கள் வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட, திருக்குறள் கற்ற அறிஞர்கள் ஒரிருவர் அண்மையில் ஆங்காங்கே நடைபெற்றுவரும் சாதி மாநாடுகளில் கலந்து கொள்வது பற்றி அறிய மிகவும் வருந்துகிறோம். புறத்தே ஒருவருமாகவும் அகத்தே வேறு உணர்வினராகவும் உள்ள அவ்வறிஞர்கள் தங்களை அச்சாதிச் சகதியினின்று மீட்டெடுத்துக் கொள்ளவில்லையானால் அவர்களைப் பற்றிய கண்டனக் கட்டுரைகள் தென்மொழியில் வரும் என எச்சரிக்கின்றோம்! அவர்களின் சாதி வெறி ஒழிக!
தென்மொழி: சுவடி-17, ஒலை-11, (1981)
'தென்மொழி'யின் தொடக்கக் காலத்திலேயே நான் என்ன சாதி என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் அளவுக்கு மேல் இருந்தது. அவரவர்கள், நான் அவர்கள் சாதியாக இருந்து விட மாட்டேனா என்று ஏக்கத்துடன் இருந்ததும் எனக்குத் தெரிந்தது. சிலர் அவ்வாறே நினைத்தும் மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். பலர் என்னிடம் நேரிடையாகக் கேட்கத் தயங்கினார்கள். சிலர் வேறுவகையான ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபட்டார்கள். சாதி ஆசையையும் அங்காப்பையும் விடாத ஒரிருவர் என்னை நேரிடையாகவே ஒரிருமுறை கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் நம் கொள்கையையே விடையாகக் கூறி அவர்களது சின்னத்தனமான ஆசையைக் கடிந்திருக்கின்றேன்.
பாவாணரைப்பற்றியும் இந்தச் சிக்கல் இருந்தது. ஏனோ தெரியவில்லை; சிலருக்கு அவர்கள் கற்ற கல்வியைவிட, கொண்ட கொள்கையை விட, இந்தச் சாதிப் பித்து மிகுதியாக வளர்ந்திருக்கிறது. கல்லாதவர்களைவிடக் கற்றவர்களிடந்தான் இப்பித்து மிகுதியாக விருக்கிறது என்றுஞ் சொல்லலாம். இதில் சிலர் போலித்தனமான ஒருவகைப் பெருமையையே வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த சாதிப்பற்று மிக்க அன்பரொருவர் 'பாவாணர் இன்ன சாதியென்று சொல்லுகிறார்களே; உண்மையா' என்று என்னிடம் ஒருமுறை கேட்டடார், 'ஏன், அதைத் தெரிந்து கொண்டுதானா அவர் நூல்களை நீங்கள் படிக்கத் தொடங்குவீர்கள்?' என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கவர் 'இல்லை இல்லை; சும்மா கேள்விப்பட்டேனே என்றுதான் வினாவினேன்' என்று பல்லை இளித்தார்.
அண்மையில் ஒருவர் (மிக மிக நெருக்கமான ஒருவர்) இந்த ஆராய்ச்சியில் ஒரு முடிவைக் கண்டுபிடித்திருக்கிறார். சில நேரங்களில் சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது "அவர் நம்ம ஆள் " என்று அவரிடம் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனால் நான் அவர் சாதிதான் என்று நினைத்துக் கொண்டாராம். இன்னும் சொன்னால் அவர் அப்படி நினைத்துக் கொள்ளட்டும் என்றே நான் அவ்வாறு சொல்லியிருக்கின்றேனாம்; கண்டுபிடித்திருக்கிறார்.
தெனாலிராமன் கதையில் ஒரு கதை உண்டு 'தனக்குள்ளது உலகத்திற்கு' என்பது அது. அதில் அரசனின் பணியாள் ஒருவன் தன்னிடம் கொஞ்சம் பொன் உள்ளதைக் கொண்டு, அரசன் கேட்டதற்கு மக்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பொன் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறுவான். அரசன் அமைச்சரைக் கொண்டு அவனிடமுள்ள அந்தக் கொஞ்சம் பொன்னையும் எடுத்துக் கொள்ளச் செய்த பொழுது, அந்தப் பணியாள் அரசனிடம் முக வாட்டமாக, 'இந்த நாட்டிலுள்ள மக்கள் கொஞ்சம் பொன்னுக்கும் வக்கற்றவர்களாக உள்ளார்கள்' என்பான்.
அந்தப்படி, நான் நம்மாள் என்பது, 'நம் கொள்கையுள்ள ஆள்: அல்லது தமிழினத்தவர்; அல்லது பிராமணரல்லாதவர்' என்று இடத்திற்குத் தக்கபடி பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இருக்கும். சாதியுணர்வு நெஞ்சில் நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் சிலருக்கு அவ்விடை வேறு பொருளில் பட்டிருக்கின்றது. அதற்கு நான் என்ன செய்வது?
கடைசியில் 'நான் வேறு சாதி; என் துணைவி வேறு சாதி' என்று கண்டு கொண்டாராம். அப்படிக் கண்டு கொண்டதுடன் நிற்காமல் தன் சாதியை விட என்சாதி மெலிந்த சாதி என்று வேறு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்? என்ன செய்வது? மாந்தன் படிநிலை வளர்ச்சிக் காலந்தொட்டு, சாதியுடனேயே இறைவனால் படைக்கப்பெற்றிருக்கின்றான் என்று பார்ப்பனர் சொல்லும் வருணாசிரம தர்மத்தைக் கடைபிடிப்பதில் அவர்க்கு அத்துணை அழுத்தமான நம்பிக்கை! ஆனால் புறத்தே பார்ப்பனியத்தைச் சாடுகின்ற கொள்கையை உடையவர், அவர்! அறிவியலும் படித்தவர். என்ன செய்வது? அறிவியல் வளர்ந்திருப்பது எல்லாம் வெறும் கருவி அளவில்தானே! மனஅளவை அதால் மாற்றிவிட முடியுமா, என்ன?
பகுத்தறிவு, பொதுமை, தமிழ், தமிழினம், மண்ணாங்கட்டி என்று பேசுவதெல்லாம் வெறும் கவர்ச்சிக்காகவும் காசுக்காகவும் என்று தானே பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! சாதியைக் கேட்டுத்தானே அறிவையும் கருத்தையும் கொள்கையையும் மதிப்பிடுகிறார்கள்! இந்தத்தமிழினம் என்றைக்குத்தான் உருப்படுமோ! இத்தகைய சாதிப் பேய்களும் வெறியர்களும் உள்ளவரை அஃது எங்கே உருப்படப் போகிறது!
ஒதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். (834)
தென்மொழி : சுவடி 18 ஒலை:10 (1982)
நம் நாட்டு மக்களை எல்லா நிலைகளிலிருந்தும் முன்னேற விட முடியாமல் செய்கின்ற, - நமக்கு நாமே அமைத்துக் கொள்கிற தடைகள், கட்டுகள் பல வகையானவையாகும். அவை குடும்பக் கட்டுகள்; குமுகாயத் தடைகள்; சாதி இடையூறுகள்; மத முட்டுக்கட்டைகள்! குழந்தைப் பருவத்திலிருந்தே இவை நம் நாட்டு மக்களை உள்ளரிப்புச் செய்து, அவர்களைப் பரந்துபட்டு வளர முடியாமல் பல வகையான வாழ்வியல் முன்னேற்ற நெருக்கடிகளை உண்டாக்கி விடுகின்றன. இவை இளைஞர்களிடம் உள்ள எதிர்ப்புணர்வுகளையும் தடைகளை மீறுகின்ற முன்னுணர்வு வேகங்களையும் பெரிதும் தாக்கி ஊறுபடுத்தி விடுகின்றன. பெரும்பாலும் அவர்களைக் குருடாக்கி மூலையில் கிடத்தி விடுகின்றன. முடமாக்கி நடையிடாமல் செய்து விடுகின்றன. தாங்கள் விரும்பிய உணர்வுகளைத் தம் அண்டை அயலாரிடம் எடுத்துக் கூறுவும் முடியாமல் கட்டு திட்டங்களாக அமைந்து விடுகின்றன. அவர்கள் அவற்றை உடைத்தெறியவும் முடியாதவாறு கோழைகளாகவும் போர்க்குணம் அற்றவர்களாகவும், ஒன்றை மீறிச் செய்யும் உணர்வற்றவர்களாகவும் அடக்கி ஒடுக்கி விடுகின்றன. பிறகு அவர்கள் எப்பொழுதுமே தங்கள் வாழ்க்கையில் சோர்வுற்ற சோடைகளாகிப் போகின்றனர்.
நம் மக்கள் சிறு குழந்தைகளாக முளைவிடும் பருவத்திலேயே பெற்றோர்களால், கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறார்கள். தளதளவென்று உள்ளத்தில் உணர்வுகள் செழித்து வளர்கின்ற அப்பொழுதே அவர்கள் கால்களுக்கு கட்டுப்பாட்டு விலங்குகளைப் பூட்டி விடுகின்றனர். "அங்கே ஓடாதே; இங்கே ஓடாதே; அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே" - என்றபடி பற்பல இயக்கத் தடைகளைப் போட்டுக் கொண்டே இருக்கின்றனர், நம் பெற்றோர்கள். இத் தடைச் சொற்கள் பிற்காலத்தில் நம் குழந்தைகளை எத்துணையளவு முடமாகவும் மூடமாகவும் ஆக்கி விடுகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை.
கல்விக் கூடங்களிலும் நம் இளைஞர்களுக்கு உரிமைகள் தரப்படுவதில்லை. ஆரியர்களால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றனர். உரிமையற்ற அடிமை உணர்வையே ஒழுக்கம் என்றும் பண்பாடு என்றும் அவர்கள் வரையறை செய்து விடுகின்றனர்.
ஒழுக்கம் என்பது தனக்குத் தானே தடையாக அமைந்து கொள்ளாத
ஓர் உயிரூக்க உணர்வு.
அதே போல் பண்பாடு என்பது பிறர்க்குத் தான் தடையாக அமைந்து
விடாத ஒரு மாந்த வளர்ச்சி உணர்வு.
முன்னது அகத்தது; பின்னது புறத்தது!
இவற்றைத் தவறாகப் பொருள் கொண்டு, பெற்றோரின் கட்டு திட்டங்களுக்கும், உற்றாரின் உதவாக்கரைக் கட்டுப்பாடுகளுக்கும், அடங்கி நடப்பதே ஒழுக்கம்; பொருளற்ற புன்மைச் சாதிக் கட்டுக்கள் ஒடுங்கி கிடப்பதே ஒழுக்கம் அறியாமையும் மேலாளுமையும் உள்ள மதச் சேற்றுக்குள் மூழ்கிக் கிடப்பதுதான் ஒழுக்கம் என்று பலவகையாக தவறாக - அடிமைத்தனமாக-விரிவாக்க உரை செய்யப்பெறுகிறது.
அதேபோல், பொருளியல் முடக்கமும், தந்நல முயற்சிகளும், அரசுக்கும் ஆட்சிக்கும் கட்டுப்பட்டுக், கடந்த காலக் குமுகாய, அரசியல், சாதியியல், மதவியல் நெறி முறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் அடங்கி அடிமையுற்றுக் கிடப்பதே பண்பாடு என்று, பழம்பழமைத் தனமாக விரிவுரை செய்யப் பெறுகிறது.
இவ்வகைக் கட்டுபெட்டித் தனங்களாலேயே இந்த நாட்டு மக்கள், குறிப்பாக நம் தமிழின இளைஞர்கள் உரிமை உணர்வின் பெருமையையும் அடிமை நீக்கத்தின் இன்றியமையாமையும் உணர முடியாதவர்களாகவும் விடுதலை வெளியின் மூச்சுக் காற்றை உயிர்க்க முடியாதவர்களாகவும் உள்ளனர் என்றால் அது தவறான குற்றச்சாட்டு ஆகாது.
இக் கால இளைஞர்களை முதலில் இவ்வுயிர் உரிமைத் தளைகளிலிருந்து, வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து, ஆண்டான் அடிமைக் கோட்பாடுகளிலிருந்து விடுவித்தல் மிக மிக இன்றியமையாதது. நம் உயிருக்கும் உள்ளத்தின் உணர்வுகளுக்கும், அறிவு மூச்சுக்கும் தடையாக நாமோ நம் குமுகாயமோ, நம் அரசியலாளர்களோ அறியாமல் அமைத்துக் கொடுத்துள்ள குமுகாய வலைகளை அறுத்தெரியுங்கள்! அவர்கள் நமக்குப் பூட்டியுள்ள சாதி சமய விலங்குகளை உடைத் தெறியுங்கள்! அவர்கள் நமக்கு இட்டுள்ள குடும்ப குழும்பத் தடைகளைத் தகர்த்தெறியுங்கள்! இளைஞர்களே! உங்கள் அறிவுக்குச் சரியென்றுபடும் எதையும் செய்ய, உங்கள் உரிமைக் காற்றை நீங்கள் உயிர்க்க உங்கள் குடும்பம் தடையிடுமானால், அக் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள்! உங்கள் ஊர் இடையூறானால், அந்த ஊரை விட்டு, வெளியேறிப் போங்கள்! உங்கள் உற்றார் உறவினர் முட்டுக் கட்டையாக இருப்பவர்களெனில் அவர்களின் உறவுகளை முறித்துப் போடுங்கள்! உங்கள் சாதியோ, மதமோ தடை செய்யுமானால் அவற்றை உடைத்துத் தூள்தூளாக்குங்கள்!
நீங்கள் தம்மந் தமியர் அல்லர்! ஒரு புதிய குமுகாயத்தின் நாடி நரம்புகள்! இனி, மலர்ச்சியுறப் போகும் புதிய உலகத்தின் விரிந்த பார்வையாளர்கள்! உங்களுக்கு அரிதாகக் கிடைத்த இந்த மாந்தப் படைப்பை உங்களுக்கிட்ட தடைகளைக் கொண்டு ஊறுபடுத்திக் கொள்ளாதீர்கள்! முடப்படுத்திக் கொள்ளாதீர்கள்!
வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! காட்டின் விலங்குகளைப் பாருங்கள்! அவ்வுயிர்களினின்று படிநிலை வளர்ச்சி பெற்று வெகு தொலைவுக்கு முன்னேறி வந்து விட்ட நீங்கள், அவற்றை விட மிகக் குறைந்த உரிமையைக் காற்றையே உள் வாங்கி விட்டுக் கொண்டிருக்கீறீர்கள்! அவற்றிற்கு இல்லாத குடும்பக் கட்டுப்பாடுகளோ, சாதி, மத மூட நம்பிக்கைகளோ, கட்டு திட்டங்களோ, நமக்கு எதற்கு?
அவற்றைப் போல் உரிமை வாழ்வை உங்களால் சுவைக்க முடிகிறதா? அவற்றைப் போல் மகிழ்வூடன் உங்களால் வாழ முடிகிறதா? எண்ணிப் பாருங்கள். பின், உங்களை மகிழ்வடையச் செய்யாத, உரிமை வாழ்வு வாழச் செய்யாத, அம் மாந்த முன்னேற்றத் தடைச் சுவர்களைத் தாண்டி உலக நெடும்பாதையில் எம்பிக் குதியுங்கள்! உங்களுக்கென்று மகிழ்வான, உரிமையான எதிர்காலம் ஒன்று காத்துக் கிடக்கின்றது! அதை நோக்கிக் காலடி எடுத்து வையுங்கள்! உங்கள் உரிமையின் குரல் வளையை நீங்களே நெறித்து, உங்களைக் கொன்று கொள்ளதீர்கள்.
தமிழ்ச்சிட்டு குரல்18 இசை:11, 1987
- ஒரு பொது மதிப்பீடு !
சாதி, கல்வி, பொருளியல்-மூன்று நிலைகளையும்
கணித்தறியும் முறையே பயனுடையதாக இருக்கும்!
எவ்வாறாயினும் சாதிப் பிரிவுகளை
நிலைப்படுத்தி விடக் கூடாது!
வி.பி.சிங் தலைமையேற்றிருக்கும் தேசிய முன்னணி அரசு, தன் தேர்தல் அறிக்கையில் கூறிய உறுதிமொழிக்கு இணங்க, மண்டல் அறிக்கையை ஆகத்து 7ஆம் பக்கல் முதல் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.
இந்த மண்டல் குழுவின் அறிக்கை செயலுக்கு வந்தால், இந்தியாவில் சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களாகக் கருதப் பெறுபவர்களுக்கு, நடுவண் அரசுப் பணிகளாகிய அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, வருமான வரித்துறை, வைப்பகத்துறை, வானொலி, தொலைக்காட்சித் துறை, பொருளியல் துறை, அறநெறித் துறை, செய்தித் துறை, படைத்துறை, ஆட்சித்துறை, வானூர்தித் துறை முதலிய கொழுத்த வருவாய் உள்ள அனைத்துத் துறைகளிலும், பார்ப்பனர்களுக்கும், மேலாளுமை முதலாளிகளுக்கும் வணிக வகுப்பினர்க்கும் உள்ள வாய்ப்புகளும் வசதிகளும் மளமளவென்று சரிந்து போகும். மாறாக, இதுவரை இத்துறைகளால் வரும் வாழ்க்கை நலன்களையே கண்டறியாத ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இவற்றில் ஒரளவு இடம் பெறும் வாய்ப்புகள் ஏற்படும். இதுவரை அவர்கள் இத்துறைகளைத் தகுதிகள்,
பண ஆளுமைகள் ஆகியவற்றால் எளிதாகக் கைப்பற்றி, நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது விழுக்காட்டிற்கு மேல் அகலக் கால் பரப்பிக் கொண்டு, வேறு வகுப்பினரைக் கிட்டவும் நெருங்க விடாமல் அடக்கி ஆண்டு, நுகர்ச்சி பெற்று வந்தனர். இவற்றில் அரசு கை வைக்கப் போகிறது என்ற நிலை வந்ததும், அவர்கள் இவ்வரிய மாற்றங்களை ஏற்படுத்திய இம் மண்டல் குழுத் தீர்வுக்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். இது ஒரு கொடுமையான அதிகார ஆளுமைப் போக்காகும்.
மண்டல் குழு அறிக்கை என்பது, பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) என்பவரின் தலைமையில், 1978ஆம் ஆண்டு சனதா அரசால் அமைக்கப் பெற்று, இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் சாதி எண்ணிக்கை விழுக்காட்டின் அடிப்படையில் அரசுப் பணிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று, 1980இல் தீர்வு செய்யப்பெற்ற ஓர் ஆய்வு அறிக்கை ஆகும். அதில் முன் கூறிய நடுவணரசுப் பணிகளில், குமுகாய அமைப்பில் சாதி நிலைகளால் பிற்படுத்தப் பெற்ற இன மக்களுக்கு, 27 விழுக்காடு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. தாழ்த்தப் பெற்றவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடுகளும் வழி செய்யப் பெற்றுள்ளன.
மொத்தம் 430 பக்கங்கள் கொண்ட மண்டல் குழு அறிக்கை, சாதிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய நடுவணரசுப் பணி வாய்ப்புகளையே முழு நோக்கமாகக் கொண்டு வரையறை செய்யப் பெற்றதாகும் என்பதில் ஐயமில்லை. சாதியொழிப்போ குமுகாயச் சமநிலையோ அதனுடைய நோக்கமன்று.
இருக்கின்ற மத வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள், பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏற்கெனவே உள்ள ஒரு குமுகாய அமைப்பை மாற்றி, வேறொரு முன்னேற்றமான வேறுபாடற்ற ஒரு புதிய குமுகாய அமைப்பைக் கருத்தில் கொண்டு செய்த முடிவுகள் அல்ல, இம் மண்டல் குழு முடிவுகள். >
தற்போது அப்படியே நடைமுறையில் உள்ள ஆனால் ஏற்கெனவே அமைந்து இறுகி விட்ட ஒரு சாதியமைப்புக் குமுகாயத்திலேயே, ஏற்படுத்தப்பட்ட சாதிகளாகக் கருதப்பெறும் சாதியினங்களை வேறு பிரித்து அறிந்து, அவற்றுக்கும் அரசுப் பணிகளில் முன்னேற்ற வாய்ப்புகளைத் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தீர்வுசெய்யப் பெற்றதாகும் இக் குழு அறிக்கை.
எனவே, சாதிகளை அப்படியே ஒப்புக் கொண்ட தன்மையிலேயே, இம் மண்டல் குழு அறிக்கை செயல்படுத்தப் பெறும் என்பது தெரிகிறது. ஆகையினால், இவ்வறிக்கைச் செயற்பாடு ஒரு வகையில் சாதிப் பிரிவுகளை அப்படியே நிலை நிறுத்துவதற்கும் பயன்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியும் உள்ளது. ஆனால், சாதி வேறுபாடுகளை அத்துணை விரைவில் ஒழித்துவிட முடியும் என்னும் நம்பிக்கையற்ற தன்மையால், அவை இருக்கும்வரை, சலுகைகள் இவற்றின் அடிப்படையால் கொடுக்கப் படவேண்டிய கட்டாயத்தை நமக்கு உருவாக்கித் தந்துள்ளதாகவே நாம் கருத வேண்டும். சாதி இருக்க வேண்டும் என்பது மண்டலுடையதோ, அல்லது நம்முடையதோ ஆன கருத்தன்று. மக்களின் பின் தங்கிய அல்லது முன்னேறிய தன்மைகளைக் கண்டு அறிவதற்கு, இச் சாதியமைப்பே தலையான-முகாமையான ஓர் அளவீடாக, இன்றைய அளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இவ் விந்திய நாடு பல்வேறு வகைச் சிக்கல்களுக்குரியதான ஒரு நாடாக இருந்து வருவதை நாம் எல்லாரும் அறிவோம். பல்வேறுபட்ட நிலைகளில், பல்வேறு வகைப்பட்ட இன மக்கள் முன்னேற்றம் இன்றித் தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டுந்தாம் உள்ளனர். அவர்கள் அனைவரையும் அரசியல் என்னும் நிலையிலோ அல்லது பொருளியல் என்னும் ஒரு நிலையிலோ மட்டும் சலுகை தந்து முன்னேற்றி விட்டால் மட்டும் போதும் என்று நினைத்து விடக்கூடாது. இதில், தவிர்க்க முடியாத ஓர் இக்கட்டான நிலை என்னவென்றால், நம் மக்களிடை உள்ள எந்த சாதிப்பிரிவு ஒழிக்கப்பெற வேண்டும், மக்களெல்லாம் சாதி வேறுபாடற்ற ஒரே மக்களினமாக மதிக்கப் பெறவேண்டும் என்று அன்றுமுதல் இன்றுவரை உள்ள பொதுமைநல அறிஞர்கள் கருதினார்களோ, நாமும் கருதுகின்றோமோ, அதே சாதிப் பிரிவுகளை நிலைபெறச் செய்யுமாறு, அவற்றின் அடிப்படையிலேயே அவர்களின் முன்னேற்றத்திற்குரிய திட்டத்தை வகுத்துக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்பதுதான். இது நம் நிலையில் பெரிதும் வருந்துவதற்கும் இரங்குவதற்கும் உரிய அவலமான சூழலாகும்.
இந்நிலையில் இன்னொன்றையும் கருத வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஆண்டாண்டுக் காலமாக, எதிர்பாராமல் இறுகி விட்ட சாதி அமைப்புக் குமுகாயத்தில், உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு, தன் ஆளுமை ஆட்சி அதிகார ஆற்றல்களால் நீண்டநெடிய வளமான வாழ்க்கை வசதிகளைப் பெற்று வந்த மேல் சாதிக் கூட்டமும், தன் பொருளியல் வலிமையால் அவற்றை விலை பேசி வளைத்துப் போட்டுக் கொண்டு, தன் வயப்படுத்தியிருந்த வணிக வாய்ப்புக் கும்பலும், தம் சாதிவெறியையும் பணவெறியையும் விட்டுக் கொடுக்காமலேயே, அவ்வாய்ப்பு வசதிகள் போய் விடக்கூடாதே என்று எண்ணுவதும், வர விருக்கின்ற மண்டல் குழுத் தீர்வால், கிடைக்க இருக்கின்ற வாழ்க்கை வசதி வாய்ப்புகளை இனியேனும் பெற்றுத் தன்னை ஈடேற்றிக் கொள்ளுவதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, பாட்டாளி, உழவாண்மை மக்கள் துடிதுடிப்புடன் முனைந்து நிற்பதும், அரசுக்குப் பல்வேறு வகையான
இக்கட்டுகளையும் இடர்ப்பாடுகளையும் உண்டாக்கி வருவது பெரிய வாய்ப்புக் கேடே!
இவ் விரண்டு எக்குத்தொக்கான சூழலில்தான் இவ்வரசு இம் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. இதைச் செயல்படுத்துகின்ற வலிமையில் சாதிப் பிரிவுகளை ஞாயப்படுத்தவும், என்றென்றும் நிலைப்படுத்தவும் கூடாது; கூடவே கூடாது. அதே பொழுது, குமுகாயத்தில் இன்று மக்கள் சாதித் தன்மையில், கல்வித்தன்மையில், பொருளியல் தன்மையில் ஆகிய மூன்று தன்மைகளிலும் பின்தங்கிய நிலைகளையும் ஒன்றாகவே கருதி மதிப்பிட்டு விடவும் கூடாது. ஒன்றுக்காக மற்ற இரண்டையும் குறைத்து மதிப்பிட்டு விடவும் கூடாது.
மண்டல் குழு தன் ஆய்வுக்கு 1961ஆம் ஆண்டுக் குடிமதிப்புக் கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்குப் பின்னாக அக் குழுவின் அறிக்கையை நிறைவேற்றப் புகும் இன்றைய காலகட்டத்தில் நிலைமை வேறாகக் கூட இருக்கலாம். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிற்றுார்களையும் ஒரு நகரப் பிரிவையும் மட்டுமே மண்டல குழு தன் கள ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
அதுவுமன்றி 1953ஆம் ஆண்டு இதே நோக்கத்திற்காக காகா காலேல்கர் தலைமையில் அமைக்கப் பெற்ற ஆய்வுக் குழு, தன் அறிக்கையில் நாட்டில் உள்ள சாதிகளில் 2399 சாதிகளையே குமுக, மற்றும் கல்வி, பொருளியல் நிலைகளில் பிற்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்டிருக்கையில், மண்டல் தம் அறிக்கையில் 3743 சாதிகளைப் பட்டியலிட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதிலிருந்து இன்னும் இவ்வாய்வு தேவைப்படுகிறது என்பதை உணரலாம்.
இவ்வாறு சில தொய்வு நிலைகள் இவ்வறிக்கையில் இருந்தாலும், இன்றைய நிலையில் இது செயற்பாட்டுக்குக் கொணரப்பட்டிருப்பது, பிற்படுத்தப் பெற்ற மக்கள் நிலையில் பெரிதும் பாராட்டுக்குரியது என்றாலும், இந்நிலைகள் இன்னும் திருத்தம் பெற்று முழுமை பெற வேண்டும் என்றே நாம் கருத வேண்டியுள்ளது. அந்நிலையில் நம் தமிழர்கள் எப்படி இருப்பார்களோ, எங்கு இருப்பார்களோ, சொல்ல முடியாது.
இனி, இவ்வறிக்கையைப் பார்ப்பனரில் சிலர் வரவேற்கவும், சிலர் எதிர்க்கவும் செய்கின்ற நிலையும் நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். பார்ப்பனர் எப்பொழுதும் எதிலும் இரண்டு கூறாகவே இயங்குவர். இதனைக் கொண்டு, பார்ப்பனரில் ஒரு வகையினர் தங்கள் நிலையில் மாறி வருகின்றனர் என்றோ, ஒரு வகையினர்தாம் மாறாத தன்மையுடையவர்களாக உள்ளனர் என்றோ, கருதி விட வேண்டா. அவர்களுடைய நிலையில் அவர்கள் என்றும் மாறாத தன்மையுடையவர்களே! அவர்கள் தங்களுடைய பார்ப்பனீயத் தன்மையில் என்றுமே நெகிழ்ந்து விடாதவர்கள்! அவ்வாறிருக்க, அவர்களில் சிலர் மண்டல் குழு அறிக்கையை ஏன் வரவேற்பது போல் காட்டிக் கொள்கிறார்கள் எனில், நடுவண் அரசு நடைமுறைக்குத் தாங்கள் ஒத்துப் போவது போற்காட்டி - அதனால் தங்களுக் கேற்படும் தலையாய சாதி, மத நன்மைகளைத் தொடர்ந்து பெறுவதற்கே! மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தத்தால் நாட்டில் சாதி அமைப்பு ஒழிந்து போக வழியில்லை அன்றோ ? இந்த நிலையைப் பார்ப்பனர்கள் என்றும் வரவேற்கத்தானே செய்குவர்.
அடுத்து, தமிழர்களுக்கு ஒன்றை இவ்விடத்தில் நாம் கூறியே ஆகல் வேண்டும்.
மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தம் ஓர் இடைக்காலச் சலுகை முறையே! இதனால் தமிழினம் தலைநிமிர்ந்து விடவோ என்றும் நிலையான உரிமைகளைப் பெற்று விடவோ வாய்ப்பில்லை. தமிழ்நாடு தனி நாடாக அமையாத வரை, இது போலும் சலுகைகளுக்காக அவர்கள் வடநாட்டினரையும், பார்ப்பனீய வணிகக் கூட்டங்களையும் போற்றிக் கொள்வதுடன், அவர்களிடம் என்றென்றும் நாம் கையேந்தியே நிற்க வேண்டும் என்பதை என்றும் மறந்து விடவேண்டா. மண்டல் குழு அறிக்கைச் செயற்படுத்தம் போல் நமக்குக் கிடைக்கின்ற கோடிச் சலுகைகளை விட தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையால் கிடைக்கும் வெற்றி, பலகோடி உரிமை நலன்களை நமக்குத் தொடர்ந்து ஈட்டித் தரும், மீட்டுத் தரும் என்பது அழிக்க முடியாத உண்மையாகும்!
சலுகை போனால் போகட்டும் -நம்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒரு கோடி கண்ட - நம்
தமிழ் (இனம்) விடுதலை ஆகட்டும்!
- தமிழ்நிலம், இதழ் எண்.140. (1990)
'அரிஜன்' என்பது காந்தியின் ஏமாற்று!
'தாழ்த்தப்பட்டவன்' என்பது தன்மானமின்மை !
‘தலித்’ என்பது தமிழின இழப்பு !
'பழந்தமிழன்’ என்பதே சிறப்பும் பெருமையும் !
'ஆதி ஆந்திரன் ஆதிகன்னடன் ஆதிகேரளன்
- என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது, -
'ஆதி(பழந்) த்தமிழன்’ என்பதே சிறந்தது!
தமிழ்க்குடி மக்களுக்குப் பாவலரேறுவின் அறிவுரை !
தமிழர்களைத் திராவிடர் என்று அழைப்பது மொழியியல் படியும் இனவியல் படியும் வரலாற்றுத் தவறானது என்பதையும், தமிழிலிருந்து சமசுக்கிருதத் தொடர்பால் பிரிந்த ஏனைய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழிகளே திராவிட மொழிகள் என்பதையும், அவற்றைப் பேசுபவரே திராவிடர்கள் என்பதையும் முந்தைய தமிழ்நிலம் (167,168) இதழ்களில் எடுத்துக் கூறினோம். அஃதாவது 'திராவிடம்' என்னும் சொல் தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியியல் மாறுபாட்டுடன் குறித்த சொல். ஆனால் அதை மொழி வரலாறு எழுதிய அறிஞர் கால்டுவெல் அவர்கள் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகளைக் குறிப்பதற்கு ஒரு மொழியியல் குறியீட்டுச் சொல்லாகவே பயன்படுத்தினர். அதே போல, தமிழர்கள் வடபுலம் சென்று வாழ்ந்து பரவியிருந்த பொழுது, ஆரியர்கள் அவர்களை மூலத் தமிழினத்திருந்து வேறு பிரித்துக் காட்ட திராவிடர்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிக்க வேண்டியிருந்தது.
திராவிடர்கள், தமிழினத்திலிருந்து ஆரிய மொழிக்கலப்பாலும், இட வேறுபாட்டாலும் மாறுபட்டவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பெற்ற ஒரு குறியீட்டுச் சொல்லேயன்றித் தமிழர்களை அச்சொல் ஒருபோதும் குறியாது. எனவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலியவை தமிழ் மொழியினின்று பிரிந்த மொழிகள் ஆகுமேயன்றி, அவை ஒரு போதும் தமிழ் ஆகிவிடா. அது போலவே தமிழும், தமிழரும் ஒரு போதும் திராவிடமும், திராவிடரும் ஆகிவிடமாட்டார். தமிழ் என்பது மூலமொழி; தமிழர் என்பர் மூல இனத்தினர். அது போலவே திராவிடம் என்பது தமிழினின்று பிரிந்த மொழிக் கூட்டத்தையும், திராவிடர் என்பவர் தமிழரினின்று பிரிந்த கலப்பு மொழிக் கூட்டத்தினரையுமே குறிக்கும்.
சமசுக்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை; திராவிடரும் இல்லர். ஆனால், சமசுக்கிருதம் நீங்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் தமிழே! திராவிட மொழியினர் அனைவரும் தமிழரே! தமிழரையும், ஆரியரையும் அல்லாமல் இந்தியாவில் வேறு இனத்தினர் இல்லை. அதுவும் ஆரியரின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே இனத்தினர் தமிழரே! வடபுலத் தமிழரே ஆரியர் வருகைக்குப் பின்னும், சமசுக்கிருதம் எனும் அவர் மொழி செய்து கொள்ளப்பட்ட பின்னரும் திராவிடர் என்று அழைக்கப் பெற்றனர். இத் தெளிவான வரலாற்று உண்மைகளை உணராதவர்களே தமிழர் திராவிடர் என்றும், திராவிடர் என்னும் மூல இனத்தவரிலிருந்து வந்தவர்களே தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இருபத்தொன்பது இனத்தவர் என்றும், தமிழ் மொழியும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையளம், துளுவம் முதலிய அனைத்துத் திராவிட மொழிகளும் திராவிடம் என்னும் தொன்மை மொழியினின்று பிறந்த உடன் பிறப்பு மொழிகளே (Sisters Languages - சகோதர மொழிகளே) என்றும், பலவாறாகத் தத்தமக்குத் தோன்றிய கருத்துகளை வரலாறாக வைத்துத் தருக்கமிடுவர். இவை நிற்க,
இனி, மேற்கூறிய மொழி இன வரலாற்றின் அடிப்படையில், இக்கால் உள்ள தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர் முதலிய இனங்கள் அனைத்தும், பிந்தைய திராவிட இனத்தவர் என்றும், இவர்களில் சிலர் மிக முந்தைய திராவிட இனத்தவர் (Proto-Dravidians) என்றும், அவர்களே ஆதிதிராவிட இனத்தவர் என்றும், மற்றொரு வரலாற்றுப் பிழையினைச் செய்து வருகிறார்கள். இத் தவறான முந்தைய, பிந்தைய மதிப்பீட்டைத் தமிழின வரலாற்றை நன்கு உணராத மேலை நாட்டையும், வட இந்தியாவையும் சார்ந்த வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறி வந்தாலும், தமிழர் தவிர பிற தெலுங்கு, கன்னட, மலையாள, துளு இனத்தினர். தங்களுள் ஆதி திராவிடர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தமிழருள் உள்ள பழந்தமிழ் இனத்தவரையே ஆதி திராவிடர் என்றும், தங்களுக்குள் உள்ள பழங்குடியினர் சிலரை, ஆதி ஆந்திரர் (தெலுங்கர்), ஆதி கன்னடர், ஆதி கேரளர், ஆதி துளுவர் என்றுமே கூறி வருகின்றனர். உண்மையில் தமிழர் திராவிட இனத்துள் அடங்குபவரே அல்லர். தமிழரினின்று ஆரிய மொழி, இனக்கலப்பால் உருவாகிய தெலுங்கரும், கன்னடரும், மலையாளரும், துளுவரும் பிற நடு இந்திய, வட இந்திய தமிழினத் திரிபுக்குடிகளுமே திராவிடர் ஆவர். இதில் 'ஆதி' என்பதற்குப் பொருளே இல்லை. எனவே, ஆதிதிராவிடர் என்று இடைக்காலத்தில் அடையாளங்காட்டப் பெற்ற பழந்தமிழரே, தவறான முறையில் அப்பெயரால் அழைக்கப்பெற்று வருகின்றனர் என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். எனவே அவர்கள் தங்களை ஆதிதிராவிடர் என்று அழைத்துக் கொள்ளும் வரலாற்றுப் பிழையை உணர்ந்து இனிமேல் தங்களை ஆதித்தமிழர் அல்லது அதனினும் சிறந்ததும் வரலாற்றுப் பொருத்தம் உடையதுமாகிய பழந்தமிழர் என்னும் சொல்லால் கூறிக் கொள்வார்களாக,
இவ்வகையில், அவர்களும் தமிழரே என்னும் உண்மையை வலுப்பெறச் செய்யவும், அதில் ஒரு பெருமையை மற்றவர்கள் உணரச் செய்யவும் தங்கள் மேல் ஆரியர் சாற்றிய இழிவைத் துடைத்துக் கொள்ளவும் இயலும் என்று உணர்தல் வேண்டும். வரலாற்று அடிப்படையில் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர் என்றும், இழிக்குலத்தவர் என்றும் ஊர்புறத்தே வைக்கப் பெற்ற கொடுமை, தொடக்கத்தில் அவர்கள் - தமிழரில் சிலர்-ஆரியரையும் ஆரியத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தமையால் ஏற்பட்ட விளைவால் நேர்ந்ததே என்பதை உணர்ந்து கொண்டால், அவர்களைப் பழந்தமிழர் என்பதே பொருத்தமும் உண்மையும் பெருமையும் ஆகும் எனத் தெளியலாம். மேலும், இவர்கள் ஆதிதிராவிடர் என்று தங்களை அழைத்துக் கொள்வதால், தமிழரினின்று இவர்கள் இன்று விலகி நிற்பது போல், பழந்தமிழர் என்று அழைத்துக் கொள்வதால் இவர்கள் விலகி நிற்கத் தேவையுமில்லை; இணைந்து நிற்கும் இன்றியமையாமையும் உண்டாகும் என்க.
'திராவிடர்' என்னும் பெயர் ஆந்திரர், கன்னடர், கேரளர், துளுவர் முதலிய அனைத்து இனத்தினர்க்கும் பொதுவானால், அவர்கள் ஏன் அப்பெயரால் தங்களை அழைத்துக் கொள்ள விரும்பவில்லை? திராவிடர் என்று கூறிக் கொள்ளும் வரலாற்றுத் தவறைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்ட தந்தை பெரியாரும் கூட, இவ்வகையில் தாம் குழப்பம் அடைவதாகவே கூறியுள்ளதும் இங்குக் கருதத் தக்கது. அவ்வாறிருக்க, தமிழர்கள் மட்டும் தங்களைத் திராவிடர்களென்றும், அதிலும் தமிழின முந்தையர் தங்களைப் பழந்தமிழர் என்று கூறிக் கொள்ளாமல் 'ஆதிதிராவிடர்கள்' என்று பொருளற்ற முறையில், தொடர்ந்து விடாப்பிடியாகக் கூறிக் கொள்ள ஏன் விரும்பவேண்டும்? இழிவை உடைமையாக்கிக் கொள்வது உரிமை மீட்பிற்கு உதவுமா, என்பதை எண்ணிப் பார்க்கும்படி அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
{{gap}இனி, அரிஜன் (அரியின் மக்கள்) என்னும் பெயர் இவர்களுக்கு 'வருணாச்சரம'த்தை ஆதரிக்கும் காந்தியால் - ஒரு போலிப் பெருமையாக இடப்பெற்றதாகும் என்பதை இவர்கள் உணர்தல் வேண்டும். அப்பெயர் இவர்களை இழிவுபடுத்துவதே அன்றிப் பெருமைப்படுத்துவதில்லை. மக்களில் ஒரு பகுதியினர் 'அரியின் (கடவுளின்) மக்கள்' என்றால், மறு பகுதியினர் யாருடைய மக்கள் என்பதற்கு அக்காந்தியாலும் விடை கூற முடியாது. எனவே அவ்வாறு அழைப்பது மிகப் பெரும் சூழ்ச்சியும் ஏமாற்றுமே ஆகும். ஆகவே, அந்தப் பெயர் கொண்டு தங்களை அழைத்துக் கொள்வதையும் இவர்கள் தவிர்த்துக் கொள்ளுதலே இவர்களின் தன்மானத்திற்குப் பெருமை தருவதாகும்.
அடுத்து, இவர்கள் தங்களைத் தாங்களோ, பிறரோ "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று கூறிக் கொள்வதும், கூறுவதை ஏற்றுக் கொள்வதும் தன்மானமின்மையும், தன்மதிப்பு (சுயமரியாதை) இழப்புமாகும் என்பதை உணர்தல் வேண்டும். இவர்களை ஆரியப் பார்ப்பனரே, தங்களின் வேத புராண, இதிகாசங்களை இவர்கள் ஏற்று மதித்துப் போற்றிக் கொள்ள மறுத்ததால், தாழ்த்தி வைத்தனர்; ஊருக்கு வெளியேயும் வாழ வைத்தனர். அதுவுமின்றி, இவர்களைத் தாழ்ந்தவர்கள் என்று இழிவாகவும் கூறினர். இதனடிப்படையில் இவர்களே தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று செயப்பாட்டு முறையில் தாங்களே கூறிக் கொண்டனர். இவ்வாறு கூறிக்கொள்வது மாந்தப் பிறவியையே இழிவுபடுத்துவதாகும். எனவே, இவர்கள் இப் பெயராலும் தங்களை அழைத்துக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
இனி, எல்லாவற்றுக்கும் மேலாக, இக்கால், தங்களைத் 'தலித்' என்னும் சொல்லால் கூறிக் கொள்வது தாங்கள் தமிழினத்தினர் என்னும் மெய்ம்மத்தையே இழந்து கொள்ளும் இழிவு சான்றதாகும். தலித் (Dalith) என்னும் மராட்டியச் சொல்லுக்குப் பள்ளம், பள்ளத்தாக்கு என்பது பொருள். இச்சொல் இடவாகு பொருளாகப் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டவன், அல்லது, தள்ளப்பட்டவன் அல்லது அமுக்கப்பட்டவன் என்றெல்லாம் பொருள் தரும். இதற்கு ஒடுக்கப்பட்டவன், அடக்கப்பட்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் Depressed என்னும் சொல்லுக்கு அழுத்தப்பட்டவன் என்னும் பொருள் கொண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பிரைத் Depressed Classes என்று அழைப்பது போல், 'தலித்' என்னும் சொல்லால் இவர்கள் வீழ்த்தப்பட்டவர்கள் பின்தள்ளப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்று அழைத்துக் கொள்கின்றனர். இச்சொல் இந்தியாவின் அனைத்து இனக் கூறினர்க்கும் ஒரு பொதுவான சொல்லாக வழங்கப் பெறுவது ஒரு வகையில் தக்கதே எனினும், தமிழின வரலாற்றடிப் படையில் தாங்கள் சார்ந்த தமிழ் இனத்தின் மூதாதையர் என்பதையும், பார்ப்பனரை எதிர்த்து வெளியேறியவர் என்னும் பெருமையையும் குறிக்கும் பழந்தமிழர் என்னும் சொல்லைவிடச் சிறந்ததாகக் கொள்ள முடியாது. எனவே, ‘தலித்’ என்பதால் இன இழப்பே ஏற்படும். இன இழப்பு அச்சு அடையாளமற்ற நாடோடி ஏதிலியர் என்னும் நிலையை ஏற்படுத்தி விடலாம். மேலும் இன்றைய இன உரிமை மீட்பு முயற்சிகளுக்கிடையில் இச் சொல் பொருளும் பொருத்தமும் உடையதன்று.
எனவே, இறுதியாக தமிழினத்தில் 'தாழ்த்தப்பட்டவர்' 'ஆதிதிராவிடர் அரிஜன் தலித்’ என்றெல்லாம் பிறரால் கூறப்பெறும் அல்லது தாங்களே கூறிக் கொள்ளும் சில வகுப்பினர், எந்தநிலையிலும், தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், மற்ற இலக்கிய, கலை, பண்பாடு நாகரிகங்களுக்கும் முழு உரிமையுடைய வகையில் தங்களைப் பழந்தமிழர் என்றேகூறி, இன நிலையில் நிலை நிறுத்திக் கொள்ளவும், பெருமைப்பட்டுக் கொள்ளவும், அரசியல், பொருளியல் நிலையில் தங்களுக்குற்ற உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளவும் பாடுபடுவார்களாக,
தமிழ்நிலம், இதழ் எண்: 170. (1994)
* | பாவியக் கொத்து | 22.00 |
* | ஐயை | 30.00 |
* | கழுதை அழுத கதை | 35.00 |
* | கொய்யாக்கனி | 25.00 |
* | கற்பனை உற்று | 40.00 |
* | கனிச் சாறு(பெருஞ்சித்திரனார் பாடல்கள்) | |
முதல் தொகுதி | 50.00 | |
2ஆம் தொகுதி | 90.00 | |
* | நூறாசிரியர் | 100.00 |
* | தன்னுணா்வு | 5.00 |
* | பாவேந்தா் பாரதிதாசன் | 25.00 |
* | இலக்கியத் துறையில் தமிழ் வளர்ச்சிக்கான ஆக்கப்பணிகள் | 5.00 |
* | ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் | 100.00 |
* | சாதி ஒழிப்பு | 40.00 |
* | செயலும் செயல் திறனும் | 90.00 |
* | ஓ ! ஓ ! தமிழா்களே ! | 11.00 |
* | தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளா்ச்சியும் | 10.00 |
* | நெருப்பாற்றலில் எதிர் நீச்சல் | 6.00 |
* | இளமை விடியல் | 50.00 |
* | இட்ட சாபம் முட்டியது | 10.00 |
* | மொழி ஞாயிறு பாவானாாா் | 10.00 |
* | எண் சுவை எண்பது | அச்சில் |
* | மகபுகுவஞ்சி | அச்சில் |
* | அறுபருவத் திருக்கூத்து | எடுத்துக்காட்டு |
* | கனிச்சாறு (பெருஞ்சித்திரனாா் பாடல்கள்)(தொகுதி 3 முதல் 8 வரை) | அச்சில் |
* | பாவலரேறு பெருஞ்சித்திரனாா் கட்டுரைகள் | அச்சில் |
* | வாழ்வியல் முப்பது | அச்சில் |
* | தமிழீழம் | அச்சில் |
மற்றும் | ||
* | பாவலரேறு நினைவேந்தல் மலர்(முதலாமாண்டு) | 60.00 |
* | பாவலரேறு வாழ்க்கைச் சுருக்கம் | 40.00 |
* | மொழிஞாயிறு பாவானாா் மலர் | 100.00 |
•