பக்கம்:Humorous Essays.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஹாஸ்ய வியாசங்கள்

இன்னொரு ஆனந்தம் என்னவென்றால், ஒவ்வொரு ஸ்டேஷனில் நிற்கும் பொழுதும் அங்கே பத்து ரூபாய் டிக்கெட்டு வாங்கினவர்கள் வண்டிக்குள் ஏறப் பார்ப்பதும் வண்டியிலுள்ளவர்கள் உள்ளே இடமில்லையென்று அவர்களைப் பிடித்துத் தள்ளுவதுமே. இந்தச் சண்டையின் சங்கீத கோஷம் மனதுக்கு மிகவும் இனிமையாயிருந்தது. இச்சண்டையின் மத்தியில் ஒரு விநோதம் நேரிட்டது. நான் உட்கார்ந்த இடத்திற்கு மேலாகச் சாமான்கள் இடம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த இடம் சிறிதாயிருந்த போதிலும் அதிலாவது கொஞ்சம் படுத்துறங்கலாமென்று மேலே நிமிர்ந்து பார்க்க, எனக்கு முன்பே அங்கொருவர் படுத்திருந்தார். சரி, அவர் அதிர்ஷ்டசாலியென்று நினைத்து அந்த யோசனையை விட்டேன். ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் இராஜமகேந்திரம் வரையில்தானிருந்தது. அந்த ஸ்டேஷனில் வழக்கப்படி, ஸ்டேஷன் பக்கமாக ஏராளமான ஜனங்கள் எங்கள் வண்டியில் ஏறப் பார்க்க, உள்ளே இருந்தவர்கள் அவர்களை ஏறாமலிருக்கும்படி சண்டை போடுகிற தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அச்சமயம் சாமான்கள் வைக்க வேண்டிய இடத்தில் படுத்துக் கொண்டிருந்த மேற்சொன்னவரும் எழுந்து உட்கார்ந்து, வண்டியில் ஏறப் பார்த்தவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த புத்திசாலியான ஒருவர் (அவர் ஒரு முஸ்லிம்) வண்டியின் பின்புறமாக ஏறி, நாங்கள் எல்லாம் ஸ்டேஷன் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, மேலே உட்கார்ந்திருந்தவர் இடத்தில் படுத்துக் கொண்டார்! வண்டி புறப்பட்டவுடன், முதலில் படுத்திருந்தவர் தன் இடத்தைத் திரும்பிப் பார்க்க, வேறொரு ஆசாமி அங்கே படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்குக் கோபம் பிறந்து, மற்றவரை அதட்டி எழுப்பிப் பார்த்தார். அந்த ஆசாமி எழுந்திருக்கவில்லை. உடனே ஒருவரை யொருவர் அவரவர்கள் பாஷையில் திட்ட ஆரம்பித்தனர். தெலுங்கு பாஷை சாயபுவுக்குத் தெரியாது. இவருக்கோ அவரது இந்துஸ்தானி பாஷை தெரியாது. முடிவில் இருவரும் கைகலப்பார்கள் போலிருந்தது. அச்சமயம் என் வண்டியில் யாருக்காவது இந்துஸ்தானி தெரிந்திருந்தால், அந்த முஸ்லிமிடம் சொல்லி இருவரையும் சமாதானப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/16&oldid=1352394" இலிருந்து மீள்விக்கப்பட்டது