பக்கம்:Humorous Essays.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஹாஸ்ய வியாசங்கள்

கவனித்துப் பார்த்த பிறகுதான் வெளிப்படையாயிற்று. தையல் என்பது தொழில் ஆகுபெயராம்; தையற்காரனைக் குறிப்பதாம். அதாவது தையற்காரர்களுடைய சொல்லை நீ நம்பாதே என்று அர்த்தமாகும். தையற்காரர்கள் எப்பொழுதும் சொக்காய் முதலியவற்றிற்கு துணி எவ்வளவு வேண்டுமென்றால், ஒன்றிற்கு இரண்டாகக் கூறுவார்கள்; பிறகு தாங்கள் அதைக் கிழித்து எடுத்துக் கொள்வதற்காக-அதற்காக தையற்காரர்கள் சொல்லை நம்பாதே என்று நமது ஒளவையார் நமக்கு போதித்திருக்கின்றனர்.

“தொன்னை மறவேல் ” (தொன்மை மறவேல்) என்பது இன்னொரு சிறந்த அடியாகும் ஆத்திச்சூடியில். இது என்ன அற்ப சமாசாரம் ஆயிற்றே, இதைப் பற்றி ஒளவையார் ஏன் எழுதினார்கள் என்று முதலில் நான் நினைத்ததுண்டு. பிறகு ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு நான் விருந்து சாப்பிடப் போன போது இதன் சூட்சுமத்தையறிந்தேன். சாப்பாட்டின் கடைசியில் பாயசம் அங்கு வழங்கினார்கள்; ஆனால் தொன்னை போட மறந்து போய் விட்டார்கள். பாயசத்தை இலையில் விட்டால் அது நான்கு பக்கமும் ஓட ஆரம்பித்தது, பக்கத்து இலைக்கும், ஓடிப் போய் எச்சலாக்கிற்று! அப்பொழுது இந்த ஆத்திச்சூடியடி ஞாபகம் வந்தது! தொன்னையை மாத்திரம் மறவாமல் வாங்கிக் கொண்டு வந்து பரிமாறியிருந்தால் இந்த கஷ்டமெல்லாம் வந்திராதே என்று ஒளவையாரைப் புகழ்ந்தேன்! ஆகவே இந்த ஆத்திச்சூடி வரியைப் படித்தவர்கள் எந்த விருந்திலும் தொன்னையை மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் நாம் ஆத்திச்சூடியில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தற்காலத்திய மேல்நாட்டு சாஸ்திரிகள், தாங்கள் ஏதோ வைடமின்ஸ் (Vitamins) என்பவைகளைக் கண்டு பிடித்ததாகப் பெருமை பாராட்டுகின்றனர்; இந்த வைடமின்ஸ் விதைகளில் அதிகமாக யிருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ரகசியம் முற்காலத்திலேயே நமது நாட்டு கிழவிகளுக்குக் கூட தெரிந்திருக்கிறது, இல்லாவிடில் ஆத்திச்சூடியில் “வித்தை விரும்பு” என்று ஒளவையார் எழுதியிருப்பார்களா? வித்தை=விதைகளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/48&oldid=1360475" இலிருந்து மீள்விக்கப்பட்டது