பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V. பெருந்திணை


பெருந்திணையும் அகத்திணையுள் அடங்குவதாகும். இத்திணையில் நான்கு துறைகள் உள்ளன. ஏறிய மடல் திறம், இளமைதீர் திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம், மிக்க காமத்து மிடல் என்பவையே இவை. உரையாசிரியர்களும் பிறரும் இத்திணைத் துறைகள் அமைந்த பாடல்கட்குத் தவறான பொருள் கண்டு மலைந்தனர். காரணம், ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்ற மூன்றற்கும் அவர்கள் கொண்ட தவறான பொருளே யாகும். இத்திணையின் 'பெரு' என்ற அடையின் பொருள் தெளிவாயின் திணைப் பொருள் விளக்கம் எய்தும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் வரும் பெருந்திணை-ஐந்திணை என்ற இரண்டு திணை பற்றிய கருத்துகளை ஒப்பிட்டு ஆராயின், ஐந்திணையின் ஒரு மிகு நிலையே பெருந்திணையாக வளர்கின்றது என்ற உண்மை தெளிவாகும். பெருந்திணைக்கண் வலிந்த காமத்துக்கு இடம் இல்லை; அகத்திணைப் பண்பிற்கு ஒத்ததுவே இது. தொல்காப்பியரும் சங்கச் சான்றோர்களும் இத்திணையை அன்புடைக் காமமாகவே எண்ணிப் பாடியுள்ளனர். காதலர்களின் காமப் பாங்கு உள்ளத்தளவிலும் சொல்லளவிலும் காத்தோம்பிக் கொள்ளுங்கால் அவை ஐந்திணைக் கோலங்கொள்ளுகின்றன; அவை அங்ங்னம் காத்தோம்பப்பெறாமல் மிகு நிலை எய்துங்கால் பெருந்திணைப் பொருளாக வடிவங்கொள்ளுகின்றன. இந்தக் கருத்தின் அடிப்படையில் இத்திணைத் துறைகள் நான்கும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் பெறுகின்றன இப்பகுதியில்,