பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல்-22

பெருந்திணை


ஏறிய மடற்றிறம் இளமைதீர் திறம்
தேறுதல் ஒழித்த நாமத்து மிகுதிறம்
மிக்க நாமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணை குறிப்பே.[1]

என்பது பெருந்திணையைக் குறிப்பிடும் தொல்காப்பிய நூற்பா. பெருந்திணை நான்கு துறைகள் கொண்டது. அவை.

1. காதலியைப் பெறாத நிலையில், காதலன்மடலேறிச் செல்லுதல்.

2. கட்டிளமைக் காலத்துஇன்பம் துய்க்காது, கணவன் மனவியை விட்டு நெடுங்காலம் பிரிந்திருத்தல்.

3. எவ்வகையானும் தேறுதல் அடையாமல் மனைவி காமம் முற்றுதல்.

4. காமம் காழ்க்கொண்ட மனைவியின் துணிவுச் செயல்.

பெருந்திணை அன்பு சான்ற அகத்திணையின் ஒரு பிரிவு என்பதனை மறவாது பெருந்திணைக் கருத்தை இன்னதென அறுதியிடல் வேண்டும். அதற்கு முன்னர் உரையாசிரியர்களும் பிறரும் இந்நாள்வரைக் கூறி வரும் பொருள்களைத் தொகுத்துக் காண்போம்.

1. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்.

2. ஒருவன் ஒருத்தியிடம் கழிகாமம் கொள்ளுதல்; அவளை அடையப் பெறாவிடில் மடலேறுதல்.

3. தனக்கு இளைய பருவத்தாளைக் கூடுதல் அகத்திணை நெறியாகும்; அங்ஙனமின்றி ஒப்பும் மூப்பும் உடைய பருவத்தாளைக் கூடி இன்புறல்.


  1. அகத்திணை-54