பக்கம்:அகமும் புறமும்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 357


எது நாகரிகம்?

நாகரிகம் உடையவராலேதான் உலகம் நடை பெறுகிறது என்று கூறினால், இன்றும் அதனை மறுப்பார் யாரும் இல்லை. நாகரிகம் என்பது யாது என்று கேட்டால்தான் விடை நன்கு கூறமுடியாது விழிக்க நேரிடும். சென்னப் பட்டினத்தில் வாழும் அனைவரும் தம்மை மிக்க நாகரிகம் உடையவர் என்றே கருதிக் கொள்கின்றனர்; தருக்கோடு பேசவும் செய்கின்றனர். ஆனால் இவர்கள் எதனால் இவ்வாறு கூறிக்கொள்கின்றனர் என்பதை அறிய அதிக நேரம் செல்லாது. எளிய உடை அணிந்து கோணல் எழுத்துக்களை அறியாத ஒருவர் இந்நகரப் பெருமக்கள் ஏறிச்செல்லும் பஸ் முதலியவற்றில் வந்து ஏறிவிட்டால் அவர் படும்பாட்டைப் பார்க்க பல கண்கள் வேண்டும். சென்னையில் வாழும் நாகரிகர்கள் அப்புதியவரை மனிதராகக்கூட மதிக்க மாட்டார்கள். ஏன் பஸ் கண்டக்டர்கூடச் சென்னையில் வாழும் ஒரே காரணத்தால் தம்மை மிக்க நாகரிக முடையவராகவே கருதிக்கொள்வதால், அப்புதியவரை நாட்டுப்புறத்தார் என்று ஏளனமாகப் பேசுதலைக் கேட்கிறோம்.

எனவே, இக்கால முறைப்படி பார்த்தால், வேட்டி உடுக்காமல், கடுங்கோடைக் காலமாயினும் கம்பளியால் நெய்யப்பட்ட சட்டை மாட்டிக்கொண்டு கழுத்தில் ஒரு சுருக்குத் துணியும் அணிந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வாழ்வதே நாகரிகம் என்பது விளங்கும். இதுதான் நாகரிகம் எனில், இன்று வாழும் தமிழர் பலர், அவருள்ளும் இளந்தமிழர் பலர் நாகரிகம் மிகுந்தவர்களே! இத்தகைய நாகரிகம் மிகுந்துவிட்டதால், தமிழ்நாடு என்ன கதியடையும் என்று கூறத்தேவையில்லை. ஆனால் இவர்-