பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பொதுவாக மாசிடோனியர் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர், அலெக்சாந்தரும் இள வயதிலேயே குதிரைகளை அடக்குவதில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஒரு நாள் ‘பூஸிபாலஸ்’ என்ற முரட்டுக் கருப்புக் குதிரை ஒன்றை அவன் தந்தையும், மற்ற வீரர் சிலரும் பார்த்து, விலை பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அக்குதிரை ஓரிடத்தில் அடங்கி நில்லாமல், துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. எவரும் அதனருகில் செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் அலெக்சாந்தர் தான் அதை அடக்குவதற்கு ஆணையிடுமாறு தந்தையை வேண்டினன். அவரும் இணங்கவே, அவன் துணிந்து அதனிடம் சென்று, நெடுநாள் அதனுடன் பழகியவன்போல், அதை அவிழ்த்து வேறிடத்திற்குக் கொண்டு சென்று, அப்படியே அதன்மீது துள்ளி அமர்ந்துகொண்டு, ஊரை ஒரு முறை சுற்றி வந்து சேர்ந்தான். அதைக் கண்ட மன்னரும் மற்றவர்களும் பெருவியப்படைந்தனர். மரங்களின் வழியாகத் தன் கண்கள் கூசும்படி செய்து கொண்டிருந்த கதிரொளியால்தான் அக்குதிரை கலங்கிக் குதித்துக் கொண்டிருந்தது என்றும், அதன் கண்களை மறைத்து இடம் பெயர்த்துக் கொண்டு போனதும், அது கூச்சம் தெளிந்தது என்றும் அலெக்சாந்தர் எடுத்துச் சொன்ன பிறகே எல்லோருக்கும் செய்தி விளங்கிற்று. மன்னர் பிலிப் அக்குதிரையை அவனுக்கே அளித்துவிட்டார். அது முதல் பின்னர் அவன் கலந்து கொண்ட போர்களில் எல்லாம் அவன் அக்குதிரையையே பயன்படுத்தி வந்தான்.