பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

படையெடுக்க வேண்டும் என்பது. ஆனால் அதற்குரிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கையில் அவர் கொலையுண்டு மடிந்தார்.

அவர் விட்டுச் சென்ற வேலையைச் செய்து முடிக்க அவருடைய வீரத்திருமகன் முன் வந்தான். அவன் தான் உலகப் புகழ்பெற்ற அலெக்சாந்தர். கம்பீரமான தோற்றம், நடுத்தர உயரம், கட்டமைந்தமேனி, சிவப்புநிறம் ஆகியவற்றுடன் அவன் காண்பவரைக் கவரும் அழகோடு விளங்கினான் . அவனுடைய வீரமும், மிடுக்கும், எழுச்சியும் யவனப் படைவீரர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. இளம் வயதிலேயே அவன் பல போர்களில் வெற்றி பெற்று வந்ததால், அவர்கள் அவனைத் தெய்வப் பிறவி என்றுகூட எண்ணத் தொடங்கினர். அலெக்சாந்தரும் தன்னை அவ்வாறே எண்ணியிருந்தாலும், அதில் வியப்பில்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா,ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களெல்லாம் சேர்ந்து உலகம் மிகப் பெரியது என்பது அக்காலத்திய மக்களுக்குத் தெரியாது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதியான பாரசீகத்துடன் சேர்ந்த ஐரோப்பாவே உலகம் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். அலெக்சாந்தர் அந்த உலகு அனைத்தையும் வென்று, ஒன்று சேர்த்து ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்றே ஆசை கொண்டிருந்தான்.

சிறு வயதிலேயே அலெக்சாந்தர் போர்ப் பயிற்சி பெற்றிருந்தான். யவன மன்னனாக முடி சூடுவதற்கு அவன் தங்தை சீரோனீ என்ற இடத்தில் போராடுகையில், அவனும் கூடச் சென்று உதவி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது.