பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தட்சசீலத்து மன்னரும் அவர் மகன் அம்பியும் அவனிடம் சரணடைந்து, தங்கள் படைகளையும் பொருள்களையும் அவன் பயன்படுத்திக் கொள்ளும்படி உதவி நின்றனர். அவர்கள் அருகிலிருந்த போரஸ் என்ற புருடோத்தம மன்னரிடம் பகைமை கொண்டனர். அவருக்குப் பர்வதேசுவரர் என்றும் பெயருண்டு. வல்லமை மிக்க அந்த மன்னரை அலெக்சாந்தரின் உதவி கொண்டு வீழ்த்த வேண்டும் என்பது அம்பியின் நோக்கம். அதற்கு இசைந்து, அலெக்சாந்தர் தன் படையுடன் தட்சசீலத்தில் போதிய அளவு ஓய்வெடுத்துக் கொண்டு, ஜீலம் நதியின் கீழைக்கரையில் ஆயத்தமாக நின்ற போரஸின் படையுடன் போரிட ஏற்பாடு செய்தான்.

ஆற்றின் அகலம் அதிகமாக இல்லாவிடினும், வெள்ளத்தின் வேகம் அதிகமாயிருந்தது. அதைக் கடப்பதற்குரிய பாலம் அமைப்பதற்கு ஓடங்கள் ஆயத்தமாக இருந்த போதிலும், அலெக்சாந்தரின் குதிரை வீரர்களும், காலாட் படையினரும் அக்கரையில் ஏறுவதற்கு வழியில்லாமல் இருந்தது. மாரிக்கால மழை பொழிந்து கொண்டேயிருந்தது. கரை நெடுகிலும் போரஸ் தம் யானைப் படையை நிறுத்தியிருந்தார். 30 மீட்டருக்கு ஒரு யானை வீதம் நின்று கொண்டிருந்த களிறுகளை எதிர்த்துக் குதிரைகள் மேலேற முடியாது. எனவே அலெக்சாந்தர், மேல் கரையிலேயே சில நாள் தங்கி, தன் படையைப் பல பிரிவுகளாகப் பிரித்துக் கரையில் பல இடங்களுக்குச் சென்று சுற்றி வரும்படி கட்டளையிட்டான். அவைகள் எங்த இடங்-