பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

என்பது கதை. சாணக்கியரின் மேலான நோக்கம் தெரிந்த பின்பு, சந்தனதாசர் தம் மகனிடம், சாணக்கியர் இல்லாத நாட்டிலே குடியிருக்க வேண்டா என்று சொல்லியிருப்பார். சாணக்கியரைப் பற்றிய இத்தகைய விவரங்களை ‘முத்ரா ராட்சசம்’ என்ற உயர்ந்த ஓர் அரசியல் நாடகமாக விசாகதத்தர் என்ற ஆசிரியர் வடமொழியில் இயற்றியுள்ளார். அது தமிழிலும் வெளிவந்துள்ளது.

ஐரோப்பாவுக்கே நாகரிகத்தை அளித்த யவன நாட்டிலே அலெக்சாந்தரின் குருவாக விளங்கிய அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் அந்தக் காலத்தில் அடிமைகளை வைத்துக்கொண்டு வேலை வாங்கும் முறைக்கு ஆதரவான வாதங்களைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் இந்தியாவில் வாழ்ந்த அரசியல் மேதை சாணக்கியர், அடிமைகளை வைத்திருக்கும் முறை காட்டு மிராண்டிகளுக்கே ஏற்றது என்றும், நாகரிக மக்களிடம் அதை ஒழித்தே தீர வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். அரசியல், பொருளாதார முறைகளைப் பற்றிய அவர் கருத்துக்களை யெல்லாம் அவரது ‘அர்த்த சாத்திரம்’ என்ற நூலிலே காணலாம். வாணிகம், தொழில்கள், சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள், நகராட்சி, சமூகப் பழக்க வழக்கங்கள், திருமணம், விவாகரத்து, பெண்களின் உரிமைகள், சொத்துரிமைகள், சுரங்கங்கள், பயிர்த் தொழில், பாசன வசதிகள், கடற்போக்குவரத்து, மரக்கலன்கள், மக்கள் தொகையைக் கணக்கிடுதல் முதலிய பல பொருள்களைப் பற்றியும் அது விரிவாகக்