பக்கம்:அலெக்சாந்தரும், அசோகரும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53


ஆனால் சுகற்பநந்தனிடம் அமைச்சராயிருந்த சுபுத்தி சர்மன் என்ற திறமைமிக்க அறிவாளியிடம் அவர் பகைமை பாராட்டாமல், அவரைச் சந்திர குப்தரின் அமைச்சரவையில் அமரச் செய்ய வேண்டுமென்று விரும்பினார். சுபுத்திக்கு இராட்சசர் என்றும் ஒரு பெயருண்டு. அவர், நந்தர்கள் அழிந்த பின்பும், அவர்களிடம் கொண்டிருந்த அன்பு மாறாமல், சந்திரகுப்தரை எதிர்த்து மறைவாக வேலைசெய்து கொண்டிருந்தார். அதைப் பற்றி அவ்வப்பொழுது தெரிந்துகொண்ட சாணக்கியர் அவர் திட்டங்களை யெல்லாம் தகர்த்து, அவரை இணங்க வைக்க ஏற்பாடு செய்தார். அதற்காக இராட்சசரின் உயிர் நண்பரான சந்தன தாசர் என்ற வைசியர் ஒருவரைப் பிடித்துத் தூக்கில் போடப்போவதுபோல் அவர் பாவனை செய்தார். சாணக்கியரின் உட்கருத்தை அறியாத அந்த உத்தமர், உண்மையிலேயே தாம் தம் நண்பருக்காக உயிர்த்தியாகம் செய்யப் போவதாக எண்ணியிருந்தார். அப்பொழுது அவர் மைந்தன் வந்து கொலைக் களத்திலே அவரைக் கண்டு வணங்கினான். அவருடைய மரணத்திற்குப் பிறகு தான் என்ன செய்யவேண்டும் என்று வினவினான். சந்தன தாசர் வேறொன்றும் சொல்லவில்லை. “குழந்தாய்! நீ சாணக்கியன் இல்லாத ஒரு நாட்டிற்குச் சென்று வாழ வேண்டும்” என்று மட்டும் சொன்னாராம். பின்னர் இராட்சசரும் அங்கு வந்ததும், சாணக்கியர் அவரிடம் பேசி, சந்திரகுப்தரின் அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்து, சந்தன தாசரை விடுதலை செய்யும்படி பணித்தார்

1155-4