பக்கம்:அலைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணண்



ண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து , அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஒயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான்.

சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. கால்வாயின் எதிர்க்கரைக்கப்பாலிருந்து வயல்களில் பச்சைக்கதிர்களின் ரகசியங்கள் காற்றுவாக்கில் மிதந்து வந்து எட்டின. கதிர்களின் பேச்சை இரைந்து அடக்குவது போன்று ‘க்ரீச்...க்ரீச்” என்று அலறும் ஆந்தையின் அகவல், நிசப்தத்தை துண்டுதுண்டாய் வெட்டிற்று. புதர்களில் சலசலப்பு... -

கண்ணன் தன்னந்தனியனாய் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இதுகூட அவ்வளவு பயமில்லை. வீட்டுக்குப் போனால் மாமாவிடம் பயத்துக்கு எதிரே இந்த பயம் என்ன பயம்?...

கல்லெரிந்து அலுத்த பின், கண்ணன் முட்டிக்காலைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆடினான். வளையம் வளையமாய்ச் சுருண்ட மயிர்த் திருகுகள் காற்றில் அலைப்புற்று, கண்ணிலும் நெற்றியிலும் மோதின. வாய் சிறிதே மலர்ந்து, முன்னிரண்டு பற்கள் மாத்திரம் சற்றே எட்டிப் பார்க்க, அவன் அழகாயிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/150&oldid=1265960" இலிருந்து மீள்விக்கப்பட்டது