பக்கம்:அலைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோம சன்மா O 199


நம்முடைய மகத்துவம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? என்ன மரியாதை, என்ன பக்தி; ஏதேது, இவர்களுக்கு அடுத்த ஜன்மமே யிருக்காது போலிருக்கிறதே! அத்தனை பேருக்கும் நேரே ஒரே புஷ்பக விமானந்தான்.

எங்கும் ஒரே புஷ்ப மயம். முன்னால் நாலு பேர் பக்கத்துக்குப் பத்து பேர். உடுக்குப் பாட்டு, பஜனை, தேங்காய், பழம். வெற்றிலை, சந்தனம், விபூதி, எலுமிச்சம்பழம், சாம்பிராணி.

கிராமத்தைத் தாண்டிக் காட்டோரமாய் ஒரு கோயிலை அடைந்தனர், சூர்ய கதியில் கோபுரத்தின் பித்தளை ஸ்தூபி நெருப்புக் கொழுந்தாய் எரிந்தது.

கோயில் பூசாரி தொந்தியும் தொப்பையுமாய், கையில் ஒரு செம்பு ஜலத்துடன் வெளிவந்து பெருத்த விழிகளுடன் சிரித்த முகத்துடன், அவர்களுடைய மகத்தான விருந்தாளியை வரவேற்றார். அம்மன் பிரசாதமாகிய அந்த ஜலத்தைக் கொஞ்சம் அவன் தலையில் தெளித்து விட்டு உள்ளே சென்றார்.

சோம சன்மா நின்ற இடம் த்வஜ ஸ்தம்பத்துக்கடியில். அங்கேயிருந்து நேரே பார்த்தால், வாகன மண்டபத்தைத் தாண்டி, உள்ளே இருளடைந்த கர்ப்பக் கிருஹத்தில், அகல் விளக்குகள் எரிவது தெரிந்தது.

மறுபடியும் உள்ளே போன பூசாரி, கன்னங் கறுத்த மேனியுடன் வெளி வருகையில் உள்ளிருளில் ஒரு பாகமே பிரிந்து வெளி வருவது போலிருந்தது. கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி, கை மணிக்கட்டில் காப்பிட்டதுபோல் ஒரு புஷ்ப சரம், கையில் கத்தி, கத்திப்பிடியில் ஒரு சாமந்திக் கொத்து. பிறைச்சந்திரன்போல் வளைந்த அந்த அரிவாளின் கூர்மையில் காலை வெய்யில் பட்டதும், மின்னல்கள் பிறந்து ஒன்றுடன் ஒன்று கோத்துப் பின்னி விளையாடின. அவனை நோக்கி அவர் வந்தார். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/201&oldid=1290280" இலிருந்து மீள்விக்கப்பட்டது