பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

145


பெருமையை நம்புவீர்களா? திருக்குறளை ஐயந்திரிபற முற்றும் படிப்பீர்களா? எங்கே பார்ப்போம்!.

இங்கே இருநோக்கம் என்றால், இரண்டு நோக்கங்கள் இல்லை; ஒரே நோக்கந்தான். இரண்டு கண்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்துதான் நோக்க முடியும் - அதுவும் ஒரு நோக்கத்தான் செய்ய முடியும். இங்கே 'இரு' என்றது ஒருவனது இரட்டை நடிப்பு (Double Act) போல, ஒருநோக்கின் இரட்டை நிலைமையைக் குறிக்கிறது. அதனால்தான் ஆசிரியர் 'இருநோக்கு' என்று ஆரம்பித்திருந்தும் 'உள்ளது' என ஒருமையில் முடித்துப் போந்தார். இந்த இரட்டை நடிப்பில், ஒன்று நோய் செய்கிறது, மற்றொன்று மருந்தாகிறது. அப்படி என்றால் என்ன?.

மாலை நான்கு அல்லது ஐந்து மணியானால் சிலருக்குத் தலைவலி ஏற்பட்டு விடும். தேநீர் அருந்தினால்தான் அது போகும். அந்தத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் என்ன? அதுவும் அந்தத் தேநீர் தான். கிடைக்காதபோது நோய் கிடைத்தபோது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே! இந்தக் கருத்தை 'குண நாற்பது' என்னும் நூலிலுள்ள

"மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான் மருந் தாகிய
தேனிமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறையழி துயரம் நின்
அருளின் அல்லது பிறிதின் தீராது"

என்னும் பாடற் பகுதியோடு ஒத்திட்டு நோக்கி மகிழ்க! (நறவின் தேறல் = மது: நீ என்றது தலைமகளை.) எனவே தலைமகளது நோக்கம், பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது