பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் எச்சரித்து ஊக்கினார். ஆம், நமக்குள் அடித்துக் கொண்டு எங்கிருந்தோ வந்த நாடோடிக்குப் பாரத நாட்டு மண்ணைப் பறிகொடுக்கக்கூடாது என்பது தான் திரு. லட்சுமி நரசிம்முலுவின் திடமான கருத்து. ஆராய்ந்து பார்க்குமிடத்து நூறு ஆண்டுகட்கு முன்பு தம் ராஜ்யத்தின் எல்லையையும் கடந்து, இந்தியா இந்தியருக்கே ’ என்று எண்ணிச் செயல் புரிந்த ஒரு பெருந்தலைவர் தமிழகத்தின் தலைநகரில் தோன்றிய திரு. லட்சுமி நாரசிம்முலுவே என்று எண்ணி வியந்து மகிழ வேண்டியுள்ளது! திரு. லட்சுமி நரசிம்முலுவின் முயற்சியின் பயனாக வெள்ளை அரசாங்கம் இந்திய மன்னர்களுக்குத் துரோகம் புரியத் துணிவு கொள்ளவில்லை. மைசூர் மன்னரின் தத்துப் பிள்ளையை ஆட்சிக் குரியவராக ஏற்றுக்கொண்டது அங்கிய ஏகாதிபத்தியம். இதற்கிடையில் தம் அரிய நண்பரும் தலைசிறந்த வழக்கறிஞருமாகிய ஜான் புரூஸ் நார்ட்டன் துணைகொண்டு லட்சுமி நரசிம்முலு இறந்துபோன தஞ்சை மன்னரின் விதவைகள் நல்ல நிலையில் வாழ எல்லா முயற்சிகளையும் செய்தார்; அவ்வாறே தமிழ் நாட்டின் சிற்றரசுகள் பல சிதைந்தொழியக் கார ணமாயிருந்த ஆர்க்காட்டு நவாபுவின் குடும்பமும் துன்பக் கடலில் மூழ்காவண்ணம் காத்தார். ஆயிரம் உண்டிங்கு பகை என்றாலும், அதை அந்நியர் பயன்படுத்தி நாட்டை மேலும் பாழாக்க அனுமதிக்க லாகாது, என்பதே வீர லட்சுமி நரசிம்முலுவின் தெளிந்த கொள்கை. அதனாலேதான் மைசூர்தஞ்சை-ஆர்க்காடு இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை மாறுபாடுகளை- எல்லாம் கனவிலும் கருதாது அப்பெருந்தகை தொண்டாற்றினர்.