பக்கம்:உத்தரகாண்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    105


“அம்மா, நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும், நீங்க தா மாப்புள வீட்டுக்காரங்க. இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்...” என்றார்.

சிவப்பாக, முன் வழுக்கை மின்ன, ஒரு நாமக்காரப் பெரியவர், கதர்சட்டை அணிந்து வந்திருந்தார். இவளைக் கண்டதும் கைகுவித்தார்.

“தாயம்மா தானே? நினைப்பிருக்கா? இந்தாத்துல பர்மாக்காராளுக்கெல்லாம் தங்க இடம் கொடுத்து அவாவாளுக்குச் சொந்த ஊருக்குப் போக உதவி செய்த போது... கிணற்றுத் தண்ணி இழுத்து, குஞ்சு குழந்தைகளுக்குத் துணி மணி வாங்கிக் குடுத்து...

“ஓ... தம்பி விஜயராகவனில்ல?” என்றாள் அவள் வியந்து. மனசுக்குள், அதற்குள் எப்படிக்கிழவனாய்ப் போனாய் என்ற கேள்வி முளைத்தது.

“ஆமா உங்கம்மா கைக்குழந்தையை எடுத்திட்டு செயிலுக்குப் போனாங்க. இப்ப எப்படி இருக்காங்க? நீங்க கல்யாணம் கட்டி நல்லாயிருக்கீங்கல்ல?”

“இருக்கேம்மா. காங்கிரஸ் தியாகத்துக்கு, மக்களுக்குன்னு இருந்த காலம் போயிடிச்சம்மா. வருங்கால சந்ததிக்கு கடனைத்தான் வைக்கப் போறோம்னு பெரியவர் ராஜாஜி சொல்றதுதான் பலிச்சிருக்கு. டம்பாச்சாரி திட்டங்கள். காந்திஜி எதெல்லாம் வாணாம்னு சொன்னாரோ, அதெல்லாம் நாட்டுல வந்திட்டது...” என்றார்.

“அய்யா, நீங்க இப்ப ஒதுங்கக் கூடாது. வரணும், பெரியவர் என்னை அதுக்காகவே இன்னிக்கு அனுப்பிச்சார். நாளைக்கு நரசிம்மன் சார் வருவார், உங்களைக் கூட்டிட்டுப் போக. இப்ப ஒதுங்குவது விவேகம்னு படலன்னு, அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன். சுதந்தரத்துக்கு முந்தி இருந்த காங்கிரசைக் கலைச்சிடணும்னு காந்திஜி சொன்னார். ஆனால் யார் கேட்டாங்க? அப்பாக்குப் பிறகு பொண்ணுன்னு ஆட்சி மாறிருக்கு... நீங்க ஒத்துக்கணும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/107&oldid=1049632" இலிருந்து மீள்விக்கப்பட்டது