பக்கம்:உத்தரகாண்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்  ✲   119

சுற்றி ஒரு வேலி போட்டுச் சுத்தப் படுத்தினார்கள். ஆஸ்டல் கட்டுவதாகச் சொன்னார்கள். தகரக் கொட்டகை மாதிரி நீண்ட ‘செட்’கள் தான் தெரிந்தன. இடிதடியன்கள் போல் இரண்டு மூன்று காப்பிரிப் பையன்கள் தாம் பன மரங்களூடே புகுந்து அந்த செட்டுக்குள் போவார்கள். “பரங்கிமலைப் பக்கம் பெரிய காலேஜிருக்காமே, இன்ஜினிர் காலேஜி, அதில படிக்கிறாங்களாம். ஆனா, அவனுவ படிக்கிறதாத் தெரியல. கஞ்சா விக்கிறானுவ” என்று ரங்கன் சொன்னான். இது போன்ற செய்திகளை அவள் செவிகளில் போடத் தவறமாட்டான்.

இப்போது பறங்கிமலையில் அந்தக் காலேஜே இல்லையாம். சங்கரியின் அண்ணன் மகனை அங்கே சேர்க்கத்தான் வந்து இங்கே குடும்பம் போட்டாள். அப்போதே அது வேறங்கோ போய்விட்டது. அந்தக் காப்பிரிகளும் இல்லை. இப்போது அந்த இடம் கைமாறி, கிணறு தோன்டுகிறார்கள்.

இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி போகிறது. பின்னே ஓர் ஆட்டோ. இரண்டு சக்கர பைக் என்று தெருவில் இந்தப் பகல் நேரத்திலும் சந்தடி. எவர் சில்வர் பாத்திரக்காரர், வழுக்கை மண்டை பளபளக்க, சைகிளைத் தள்ளிச் செல்கிறார். பின்னால், ஜயந்தி டீச்சர்... பை, குடை எதையும் காணவில்லை. முகம் செவசெவ என்று இருக்கிறது. இவள் ஜுபிலி ஸ்கூலில் வேலை செய்கிறாள். இந்தத் தெரு மூலையில்தான் பழைய ஓட்டுவீட்டை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்... இங்கே தான் வருகிறாள்.

“ஆச்சிம்மா, கெஞ்சம் உள்ள வரீங்களா?”

“வாங்க என்ன விசேசம்’ அவள் வாசல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்லும்போதே ஜயந்தியும் வருகிறாள். “என்னம்மா? இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?”

“இருக்கு. லீவு போட்டேன். சங்கரி இங்க வந்ததாம்மா?” கேள்வியில் உள்ள பதற்றம் அசாதாரணமாக இருக்கிறது.

“யாரு... உங்க வீட்டில குடியிருந்த சங்கரியா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/121&oldid=1049657" இலிருந்து மீள்விக்கப்பட்டது