பக்கம்:உத்தரகாண்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120   ✲   உத்தரகாண்டம்


“ஆமாம்மா, பத்து நாளா அவளக் காணல.”

“என்னது? காணலியா?...”

“முத ஞாயித்துக்கிழம மாசாமாசம் நானோ, அவுங்களோ வந்து வாடகை வாங்கிட்டுப் போவோம். அவ இங்க வந்து அஞ்சு வருசமாகப் போவுது- அண்ணன் புள்ள படிச்சி முடிச்சிட்டுப் போயிட்டான். இங்கியே கிரிச் மாதுரி புள்ளங்கள வச்சிட்டு இருந்தா. “மேடம், நா பிழக்கனுமே, இப்டிச் செய்யிறதுக்கு நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டிங்கன்னு நினைக்கிற..."ன்னிச்சி. சரின்னு ஒத்துக்கிட்டேன். பாவம்மா, அது. வாசப்பக்கத்துல உள்ள ரூமுல, காலம எட்டு மணிக்கு ஜெரோம் டாக்டர் வருவாரு. ரெண்டு மணி வரையிலும் பாப்பாரு. ஓமியோபதிதான். ஏழை எளிசுங்களுக்கு மருந்துக்கு மட்டும் பத்து ரூபா வாங்குவாரு. சாயங்காலம் மெயின்ரோடு வீட்டுல இருப்பாரு. புள்ளங்களக் கொண்டு விடுற எஸ்தர், ஈசுவரி ரெண்டுபேரும் கதவு பூட்டிருக்கிறத பாத்திட்டு டாக்டர்ட்ட கேட்டிருக்காங்க. அவருக்குத் தெரியல. சாதாரணமா அது எங்கும் போகாது. ஞாயிற்றுக் கிழம புள்ளங்க வராது. எப்பவானும், ரயில் கேட் தாண்டி, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகும்... இப்ப பத்து நாளாக் காணலன்னு சொல்றாங்க. இந்தப் பக்கம் துணிக்கடைக்காரர் வீட்டுல தெரியலன்றாங்க...” அவள் சொல்வது வெறும் விவரங்களாக இல்லை.

“ஏம்மா இவ்வளவு பதட்டப்படுற? அண்ணன், இல்ல உறவுகாரங்க, தெரிஞ்சவங்க வீடுகளுக்கு அவசரமா கெளம்பிப் போயிருப்பா... அவளுக்கு... கலியாணம் ஆயி புருசன் வச்சுக்கலியா?...”

“அய்யோ, அது பெரும்பாவம் ஆச்சிம்மா! வயசுக்கு வந்த நேரம் சரியில்லயாம். அதுனால கலியாணம் காட்சின்னு ஆகாமலே அந்தக் கன்னித் தெய்வம் போல நெருப்பா நின்னிட்டிருந்தா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/122&oldid=1049658" இலிருந்து மீள்விக்கப்பட்டது