பக்கம்:உத்தரகாண்டம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144   ✲   உத்தரகாண்டம்

அது எப்படியோ போகட்டும், இப்ப என் கூட வாங்க ஆச்சி...”

“நீ இப்படி நடுத் தெருவில நின்னு கூப்பிட்டா நா வருவனா?”

“சரி ஆச்சிம்மா, அப்ப வாங்க, வூட்டுக்குக் காரில போகலாம். அங்க வந்து கூப்புடறேன்...” என்று சவுந்தரம் சிரிக்கிறாள்.

“வானாம். நீங்க பத்திரமாப் போயிட்டுவாங்க. இந்த மட்டும் ஆச்சிய நினப்புவச்சிட்டு விசாரிச்சியே. அதுவே சந்தோசம்...”

“எனக்கு சந்தோசம் நீங்க வந்தாதா...” என்று அவள் கையை வலியப்பற்றி இழுத்து கார்க்கதவை டிரைவர் திறக்க, உள்ளே அவளை உட்காரச் சொல்கிறாள். “ஊர்மி, நீ முன்ன உக்காந்துக்க...”

“என்னம்மா, நீ?...”

“ஒண்ணுமில்ல. காரை விடுங்க மயில்சாமி. இப்படியே பழைய மானூர் ரோடு வழி போயி கிராஸ் பண்ணி, வண்டியக் கொண்டுட்டுப் போங்க!”

சொகுசு வண்டி. உள்ளே குளுகுளுவென்றாகிறது... துணிப்பார்சல்களைத் தள்ளி பின்னால் வைக்கிறாள். பெரிய கார்...

இவள் பாட்டி குழந்தைகளை தாத்தா ரங்கூன் சண்டை வருமுன்பே கப்பலில் ஏற்றி பத்திரமாக ஊருக்கு அனுப்பிவிட்டார். ஆனால், அவர் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து கைதாகி, தப்பி வந்து குற்றுயிராக, வந்தவர். அவள் இருக்கும் அந்த பங்களாவாசல் அறையில் உடம்பெல்லாம் கொப்புளங்களும் காயங்களுமாகப் படுத்திருந்த நினைவிருக்கிறது. சம்பு அம்மா இறந்த பிறகு சுந்தரம் இங்கே வந்து தொண்டாற்றினான். உடல் தேறி, அவர் டில்லிக்குச் சென்றார். நன்னிலம் பக்கம் சொத்துபத்தெல்லாம் இருந்தது...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/146&oldid=1049983" இலிருந்து மீள்விக்கப்பட்டது