பக்கம்:உத்தரகாண்டம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    187

2005க்குள், சர்க்கரை நோயும் மூட்டு வாதமும் மிக வேகமா வளரும்னு சொல்றாங்க. வசதி, சவுரியங்கள் இப்படியும் பாதிப்பை உண்டாக்குது. நான் இப்ப எத்தினி கிராமங்களுக்குப் போறேன்? நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. பொம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப...? சில்க்சாம்பு, கிளீன் சாம்புன்னு விதவிதமா பாக்கெட் வாங்கித் தலை கசக்குறாங்க. டி.வி. இல்லாத குடிசை இல்ல. அதுனால, வளர்ச்சியோட, பாதிப்புகளையும் நாம நினச்சிப் பார்க்க வேண்டி இருக்கு...”

இப்போது, குழந்தைவேலு கூடத்து வாயிலில் தென்படுகிறான். சந்திரியைப் பார்த்து, கூழையாகவே கும்பிடு போடுகிறான்.

“வணக்கம் டாக்டரம்மா!...”

ஒரே மலர்ச்சி உருவம். “வாய்யா, மண்ணாங்கட்டி! எப்டீயிருக்கே?”

“வணக்கம் சேர்மன் ஐயா!”

பராங்குசத்துக்கு ‘சேர்மன்’ பதவியா?

இவன் வருகை இறுக்கத்தைத் தளர்த்துகிறது.

“யோவ், வீனஸ் ஆஸ்பத்திரியைவிட மிகப் பெரிசு இங்க ஒரு ஆஸ்பத்திரி வரப்போகுது...”

அவன் முழுதாக மலர்ந்து, “சந்தோசம் அய்யா, வரட்டும்” என்று ஆமோதிக்கிறான்.

இளைய தலைமுறைகள் இரண்டும் அதற்குள் பின்புறம் சென்று சுற்றிவிட்டு வருகிறார்கள்.

“வணக்கம், சந்திரிம்மா மகளா?...” அதற்கு ஒரு சிரிப்பு, கைகுவிப்பு.

“அச்சா புரவலரய்யா மாருதியே கிறாரு... வணக்கமையா, இளைய புரவலர்...” என்று மீண்டும் சிரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/189&oldid=1050059" இலிருந்து மீள்விக்கப்பட்டது