பக்கம்:உத்தரகாண்டம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   197


“அம்மா பேரில தனி விசுவாசம். மாதாஜி, மாதாஜிம்பாரு... பெரியப்பா, அத்தை அவங்க வீட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க.”

“உங்கம்மாக்கு அந்தக் காலத்து தேசிய ரத்தம்...”

“இப்ப ஒண்ணும் பேச வாணாம்” என்பது போல் அய்யா சாடை காட்டினார்.

“அப்பா, நீங்க மொள்ள எதானும் சொல்லி அனுப்பிச்சிடுங்க. நீங்க என்னதான் அரசியல்லேந்து விலகிட்டாலும், அரசியல்கட்சி, தேசியம்னு ஊறினவர். அடிமரம். பழசு புதுசுன்னு முகத்துல போட்டுக்கலன்னாலும், இந்த நேரத்தில் என்ன நடக்கும், நடக்கிறதுன்னு தெரியாது. உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது அப்பா!”

அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சொல்லிவிட்டு அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நா வரேம்மா..!” எழுந்து நின்ற அம்மாவைத் தழுவிக் கொண்டாள். தாயம்மாளின் கையைப் பற்றி “வரட்டுமா தாயம்மா” என்று விடை பெற நின்றாள்.

“எதும் சாப்பிடாம போறீங்களே அநும்மா?”

“ரிக்ஷா நிக்குது வாசல்ல, குழந்தைய விட்டுட்டு ஓடி வந்தேன்... நீங்க நல்லா இருக்கணும்... எதும் வரக்கூடாது.”

விடுவிடென்று அவள் வாசலில் சென்று ரிக்‌ஷாவில் அமர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் பிடித்து வைத்த சிலை போல் அமர்ந்திருந்தார்கள். துயரம் கவ்வியபோது, அச்சம் தெரியவில்லை. இப்போது, இனம்புரியாத கருமை சூழ்ந்தாற்போல் இருக்கிறது.

எத்தனை முறைகள் சிறைக்குப் போயிருக்கிறார்கள்? போலீசே வந்து முன்னெச்சரிக்கை செய்தும் தடைமீறி அச்சமில்லை அச்சமில்லை என்று சிறை சென்றார்கள்.

இப்போது... நேரு மகள் ஆட்சியில்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/199&oldid=1050077" இலிருந்து மீள்விக்கப்பட்டது