பக்கம்:உத்தரகாண்டம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204   ✲   உத்தரகாண்டம்


வெண்மையும் நீலம் சிவப்பு அழகு விளிம்புகளுமாகத் தெரியும் தேவியின் ஆலயம். முன்புறம் எதிரே ஒரு பாதாம் மரம், அழகிய தீபாராதனைத் தட்டுகளைப் போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வழுவழுப்பான மேடை. அதில் வெறும் காவித் துண்டணிந்த, சிவப்புக் கயிறில் கோத்த ஒற்றை உருத்திராட்சம் அணிந்த சாமியார் இருக்கிறார். தாடி மீசை இல்லை. சற்று தொலையில் ஓட்டுக்கூரை கொட்டடிகள் தெரிகின்றன.

பளபளப்பாய் இழைக்கப்பட்ட படிகள்.

பட்டும் பளபளப்புமாக ஏழெட்டு ஆண் பெண்கள், பக்தர்கள் தெரிகின்றனர். மிகப் பெரிய சலவைக்கல் கூடத்தில் ஓர் அழகிய விதானமுடைய மண்டபத்தில் தேவி சலவைக் கல்லில் எழுந்தருளி இருக்கிறாள். சரிகைக்கரையிட்ட மஞ்சள் அரக்குச்சேலை. பச்சை ரவிக்கை. முத்தும் இரத்தினங்களுமான மாலைகள். சிம்ம வாஹினியாக, அபயம் கொடுத்து அருள் புரியும் அம்பிகை. இந்தப் பிரதானமான அம்பிகையைச் சுற்றி, பதினாறு தூண்களில், மாடங்களில் அம்மனின் வெவ்வேறு திருக்கோலங்கள். காயத்ரி, சண்டிகை, துர்க்கை, என்றெல்லாம் பெயர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு எந்த வடிவிலும் சங்கரியே தெரிகிறாள்.

கொத்துக் கொத்தாக வெண்மையும் சிவப்புமாக மலர்கள் அலங்கரிக்கும் பிரதிமைகளில், கண்களைத் திறந்து கொண்டாலும் மூடிக் கொண்டாலும் அவளே தெரிகிறாள்.

சங்கரிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயசிருக்குமா?

எத்தனை பூக்களை இந்தப் பூமி பிரசவிக்கின்றன?

எல்லாமே காயாகின்றனவா? காயாகாத பூக்கள் தாம் கடவுளுக்கு என்று அருள் பெறுகின்றன... ஆனால் கடவுளுக்கு மட்டுமே பூசனைக்குரிய பூக்கள், ஆணையும் பெண்ணையும் தெய்வ சாட்சியாக இணைத்து, உலகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/206&oldid=1050136" இலிருந்து மீள்விக்கப்பட்டது