பக்கம்:உத்தரகாண்டம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   207

அறிவுரை பெற்றார். முத்தாக ஒன்று பெற்றதை இழந்த சோகம்... ஒரே வருசம்தான்...

இரவு படுத்தவர், உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார். நோய், நொடி, எதுவுமே அநுபவிக்கவில்லை... ஆனால், அய்யாவுக்குத் துயரம் இல்லையா?...

புரியவில்லை.

அவள் அந்தப் பிரசாத தீர்த்தத்திலேயே, கனவில் மிதப்பது போல் நிற்கிறாள்.

ஒரு பெரிய ‘ஸில்வர்’ அடுக்கில் சர்க்கரைப் பொங்கல் தேவிக்கு நிவேதனமாயிருக்கிறது.

எல்லோருக்கும் வாதா மரத்தடியில் கண்ட சாமியார் வாழை இலைத் துண்டுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார். பூசாரி ஒரு வாளியில் பொங்கலை எடுத்து வந்து பெரிய கரண்டியால் ஒரு கரண்டி எடுத்துப் போடுகிறார். பட்டுக்கரை வேட்டிகள், சரிகைப் புடவைகள், குழந்தைகள் என்று எல்லோருமே அந்த விசாலமான கூடத்தில் பளிங்குத் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணுகின்றனர்.

“அம்மா, நீங்களும் வாங்கிக்குங்க?”

இலையில் சர்க்கரைப் பொங்கல். நெய் மணக்கும், முந்திரி திராட்சை தெரியும் பொங்கல். சுவாமியும் பக்தர்களும் மட்டும் செழிப்பில்லை; பிரசாதமும் செழிப்புத்தான்.

பொங்கலுடன் அவள் படியில் இறங்குகையில், படிக்குக் கீழே உள்ள சுத்தமான கடப்பைக்கல்லில், சாமியார் ஒரு வாளிப் பொங்கலைப் போடுமுன், ஏழெட்டு நாய்கள் வருகின்றன.

எல்லாமே ‘அநாதைகள்’தாம். தாமே தெருப் பொறுக்கி இன விருத்தி செய்யும் உயிர்கள். அவற்றில் ஒன்று சொறி நாய். அது அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, இன்னும் இன்னும் என்று குலைக்கிறது. சுப்பய்யா, தன் இலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/209&oldid=1050142" இலிருந்து மீள்விக்கப்பட்டது