பக்கம்:உத்தரகாண்டம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    235

பகுதியில் இறங்கி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான். மேல் தளத்தில் பொதுவான கழிப்பறை வசதி இருந்தது. கீழ்த்தள முற்றத்திலும் அந்த வசதி இருந்தது. சங்கரியின் குடும்பம் குடியிருந்த பகுதி முன் கூடம், ஒரு படுக்கையறை, சமையல், சாப்பாட்டுக்கான கூடம், குளியல், கழிப்பறை வசதிகள் கொண்டிருந்தன. அவர்கள் முற்றத்துக்கு வரவேண்டாம், என்றாலும் மேல் தளத்திலும், கீழ்த் தளத்திலும் வேலை செய்த ஹீராபாய், அவர்கள் வீட்டுத் துணிகளை முற்றத்தில் துவைத்து உள் வராந்தாவில் உலர்த்துவாள். ஏற்கெனவே ஒரு சூடு விழுந்த உணர்வில் இருந்த சுப்பய்யா, அக்கம் பக்கம் தமிழர் குடும்பங்களில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடக் கூசியிருந்தான். அவன் கற்பித்த வித்யாலயத்தில் மராத்தி மொழி பிரதானமாக இருந்தாலும் அந்த மொழியும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவனுக்கு அந்தப் பிரதேசமும் சமூகமும் அந்நியப் பட்டிருக்கவில்லை. அவன் கற்பித்த வித்யாலயத்தில் இருபாலரும் படித்தார்கள்.

அவன் அன்றாட நியமங்களுக்கப்பால், எந்தத் திசையிலும் கருத்தைச் செலுத்தியிருக்கவில்லை. தானே தன் உணவை அநேகமாகத் தயாரித்துக் கொள்வான். ரொட்டி, காய், பருப்பு... ஸ்டவ்வில் இதைத் தயாரித்துச் சாப்பிட்டு விட்டுப் போவான். அங்கே காலை, ஏழரைக்கு ஒரு பகுதியும், பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு பகுதியும்- இரண்டு அடுக்குகளாகப் பள்ளி வகுப்புகள் நடைபெறும். மேல்தளத்து தம்பதி அடிக்கடி கதவைப் பூட்டிக் கொண்டு மாலை வேளைகளில், பஜன், பூஜா என்று போய் விடுவார்கள். அவர்களுடைய மகள் ஒருத்தி கோலாப்பூரில் இருந்தாள். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். இராணுவம் தொடர்பான கணக்குத் தணிக்கை அலுவலராக வேலை பார்த்து அவர் ஓய்வு பெற்றவர். அந்த அம்மையாரும் வீட்டிலிருந்தபடி படித்து மராத்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர்கள் அவன் மீது அளவிறந்த அன்பு காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/237&oldid=1050236" இலிருந்து மீள்விக்கப்பட்டது