பக்கம்:உத்தரகாண்டம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    289


“நல்லாயிட்டேன் கன்னிம்மா, சீலை கொண்டாந்திருக்கியா?”

“இந்தாங்க, வெள்ள சீல இல்ல. இன்னிக்கு எப்படியும் வாங்கியாந்திருவ.” அவள் பையைத் திறந்து துணிகளை எடுக்கிறாள். இரண்டு உள்பாவாடைகள்; இரண்டு வெள்ளை ரவிக்கைகள். தொட்டால் வழுக்கும் இரண்டு சேலைகள். ஒன்று வெள்ளையில் சிறு சிவப்புப் பூக்கள் போட்டது; இன்னொன்று மஞ்சட்பூக்கள் போட்டது. அவள் எட்டுகஜம் சேலை-வெள்ளையில் பின் கொசுவம் வைத்துத்தான் உடுத்துவாள். அப்படியே பழக்கமாயிருக்கிறது. கதரில் பூப்போட்ட சேலை உடுத்திய காலம் உண்டு. பிறகு உள்பாவாடை உடுத்தி ஆறுகஜம் சேலை உடுத்தினாள். கைத்தறிச் சேலைதான். பஞ்சமி இறந்து போன பிறகு அவள் வெறும் வெள்ளைச் சேலை என்று மாறிவிட்டாள். குஞ்சிதம் துணிக்கடையில், காதிபந்தாத் துணியே விற்பான். அவன் கடையிலேயே ஒரு தையற்காரன் உண்டு. அதே துணியை இவளுக்கு கழுத்து மூடி, இடுப்பு இறங்க தைத்துக் கொடுப்பான்.

காலைக்கடன் கழித்து, நீராடி, புதிய ஆடைகளை அணிந்து கொள்கிறாள். இந்த மாதிரி உடைகள் இவள் இதுவரை அணிந்ததில்லை. ரவிக்கை தொளதொளவென்றிருக்கிறது கழுத்து இறங்கி, இடுப்பு ஏறி...

“இது, ரஞ்சி அம்மாவோட அம்மாவுக்குத் தச்சி வச்சது. எடுத்துக் குடுத்தாங்க. பணம் குடுத்திருக்காங்க. நான் அப்பால வெள்ள சீல எடுத்தாரேன்... போயி, நாஷ்தா கொண்டாரேன்” என்று போகிறாள்.

நைட்டி உடைமாறினாலும், இந்த உடை ஏதோ சர்க்கஸ் கோமாளி போல் தோன்றுகிறது, பின் முதுகை இழுத்து இழுத்து விட்டுக் கொள்கிறாள். சிறையில் இருப்பது போல் ஓர் உணர்வு. அறையின் ஒருபுறம் குளியலறை. சிறு இடைவெளி. பின் வாயில் கதவைத் திறக்கிறாள். காலியான பூச்சு வர்ணத்தகரங்களும், செடிகளில்லா மண் தொட்டிகள்,

உ.க.-19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/291&oldid=1050372" இலிருந்து மீள்விக்கப்பட்டது