பக்கம்:உத்தரகாண்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30   ✲   உத்தரகாண்டம்

கொண்டு வந்தவங்க. இப்ப அவங்க ஆசில நல்லா இருக்கிறம். அம்மா பேர் வச்சித்தான் முதல்ல ஆச்சி மளிகைன்னு ஆரம்பிச்சோம். இப்ப புரவலர் அண்ணாச்சிதா, சூப்பர் மார்க்கெட்டையும் ரூஃப் கார்டன் ஒட்டலையும் திறந்து வச்சாங்க. சிவலிங்கம் பயல்கிட்ட அழைப்புக் கொடுத்து உங்களை கூட்டிட்டு வரச் சொன்னேன். நீங்க வரல...”

சுரீலென்று உணர்வில் தைக்கிறது, ஆனாலும் குரலில் காரம் காட்டவில்லை.

“சர்வோதயா தலைவர், ராதாகிருஷ்ணனை அழைச்சிட்டு பார்க்கில் வந்து, அத்தனை ரிக்சாக்காரங்களையும் கூட்டி வச்சோம். அப்ப, அத்தினி பேரும் இனி குடிக்கிற தில்லன்னு சத்தியம் பண்ண வச்சோம். திருட்டுச்சாராயமும், உசந்த ஒயினும் விக்கப்படாதுன்னு உங்கிட்ட சத்தியம் வாங்கணும்னு அந்தப் பெரியவரையும் கூட்டிட்டு உங்க வீட்டுப்படி ஏறி வந்தேன். நினப்பிருக்கா?...”

“ஏம்மா, நினப்பில்ல? அப்படிப் பொய் சொல்ற ஆளில்ல நானு. இந்தக் கடை வைக்க, ஏழுமலை தெருவில, தியாகி அய்யா உதவி செய்துதான் தொடங்கினோம். முதமுதல்ல, உடம்பு முடியாம, ரிக்சாவில வந்து, மஞ்சளும் குங்குமமும், அரிசியும் பருப்பும் வாங்கினாங்க. அதெப்படிம்மா மறக்கும்? அய்யா வளர்த்த தியாகக் கட்சி இன்னிக்கு இல்ல. நீங்க சாராயம் காச்சக்கூடாது, குடிக்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கி என்ன பிரயோசனம்? காச்சி வித்து மாமூல் குடுக்கலன்னா போலீசுகாரன் ஏதோ ஒரு பொய்க்கேசைப் போட்டு உள்ள தள்ளுறான். அவன் பொஞ்சாதி ஏங்காலுல தான் வந்து விழுவா. கரிமங்கலம் கிராமம்பூரா போலீசு ஆதரவில்தான் தொழில் நடக்குது. நம்ம புரவலர் அண்ணாச்சி கிட்ட இதெல்லாம் ‘டிஸ்கஸ்’ பண்ணனும்னு தா வந்தேன். அதுக்குள்ள புறப்பட்டுப் போயிட்டாங்க போலிருக்கு?...”

அவள் உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/32&oldid=1049418" இலிருந்து மீள்விக்கப்பட்டது