பக்கம்:உத்தரகாண்டம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320   ✲   உத்தரகாண்டம்

கான்ஸ்டபிள், மல்லிகாபுரம் ஊரு. பொம்புளன்னா, அதுக்கு இயல்பா ஒரு பரிவு, மென்மை இருக்கு. தண்ணி பொதுக் கிணத்துக்கு எவ்வளவு தொலவுக்குப் போகணும்? அந்த காலத்துல வாயக்கால்ல தண்ணி வரும்... ரெண்டு வருச மாச்சி. எல்லா எழவும் அரசியலாக்கிட்டானுவ... நீங்க சொன்னாப்புல சமயத்துக்கு வந்தீங்க...”

மனம் நெகிழ்ந்து போகிறது.

அன்றிரவு கருப்பிணிப் பெண் இறந்து விடுகிறாள். அவள் புருசனும், அவன் தாயும், அவள் சகோதரனுக்கும் சொல்லி அனுப்பி வந்து சேர ஒரு முழு நாளாகிறது. அதற்குள் ஒரு போலீசு வண்டி வந்து, அடிபட்டவர்களை ஏற்றிச் செல்கிறது.

அவளைக் கொண்டு சுடலையில் இறுதிச் சடங்கு செய்வதற்கும் போலீசுதான் முன் நிற்க வேண்டி இருக்கிறது. அவளும் போகிறாள்.

சுடலை, இன்னும் கிழக்கில் இருக்கிறது. முன்பு அங்கே படுகைக்காடு போல் இருக்கும். வாய்க்காலுக்கும், ஆற்றுக்கும் இடையே மூட்டம் தெரியும். இப்போது காடு இல்லை. வாய்க்கால் மூட்டோடு சென்று இறுதி முடித்து ஆற்று மேட்டில் இறங்கி, அங்கே குட்டை போலிருக்கும் தேங்கிய நீரில் குளிக்கிறார்கள். ஈரத்துடன் அவர்கள் வரும்போது, அழகாயி கோயிலின் சுவர் தெரிகிறது. புதிய வண்ணக் கோபுரம்.

முன்பு சுற்றுச்சுவர் கிடையாது. பெரிய திடல் இருக்கும். அதில்தான் பொங்கல் வைப்பதும் உடுக்கடித்துப் பாடும் போதும், கூத்துக்கட்டும் போதும் சனங்கள் கூடி இருப்பார்கள். பின்னாலிருந்த பெரிய வேப்பமரம் இல்லை. வாய்க்காலோரம் இருந்த அரசும் வேம்பும் கூட இல்லை. பிள்ளையார் மட்டும் அநாதையாக இருக்கிறார். அங்காயி சிறைவைக்கப்பட்டாற் போல் சுற்றுச் சுவர், வாயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/322&oldid=1050458" இலிருந்து மீள்விக்கப்பட்டது