பக்கம்:உத்தரகாண்டம்.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    321
 

கதவுக்குள் இருக்கிறாள். ஊரே, கோயில் முன் நிற்கக் கால் கழுவ, அவளுக்குத் தெரிந்து, தோண்டப்பட்ட கிணறு, சுற்றுச் சுவருக்குள் சிறைப்பட்டிருக்கிறது. இந்தக்கரைகளில், வீடுகட்ட கடைகால் தோண்டினால் மணல் பரிந்து தண்ணீர் வந்துவிடும். அப்படி உறை இறக்கிய கிணறு...

“அவள் வெளியில் நின்று பார்க்கிறாள்.

சூலத்தை மட்டும், ‘கேட்டுக்கு’ வெளியே யாரோ, அச்சுறுத்துவது போல் நட்டு வைத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் ஓர் இளைஞர் கூட்டம் அங்கு வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் அவள் பார்த்த பெண், இளைஞன். பிறகு மாயவரத்தில் இறங்கி இவர்கள் பஸ்ஸுக்குச் செல்கையில் கூட்டமாகச் சாலையில், முதுகில் சுமைப் பைகளைப் போட்டுக் கொண்டு நடந்தவர்கள்.

அவர்கள் வரும் போதே, வழியில் உள்ள முட்செடிகளை, வாய்க்காலில் படர்ந்த முட்களை அப்புறப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஒருவன் கோயில் முன் நட்ட சூலத்தை அசைக்கிறான். எடுத்து ஒருபுறம் வைக்கிறான்.

“ஆயுத கலெக்ஷன். மூன்று வாள், வேல்கம்பு, இப்ப சூலம்...” என்று கறுப்பாக, உச்சியில் முடி கட்டிக் கொண்டு, கழுத்தில் காமிராவுடன் தெரியும் பெண் இந்தியில் பேசுகிறாள். புரிகிறது.

“காலித்! இத்த நீ தொட்ட, வெட்டிடுவாங்க? அது அப்படியே இருக்கணும்..” என்று சொல்கிறான் போல் இருக்கிறது. ‘காலித்’ என்று பெயருக்குரிய இளைஞன், அந்த சூலத்தைத் தூக்கி ஓங்கி சம்ஹாரம் பண்ணும் பாவனையுடன் பார்க்கிறான்.

“தாயே, அருள்புரி... நாங்கள் இனி அஹிம்சை விரதம் மேற் கொண்டு, இந்த ஆயுதங்களை உன் காலடியில் போடுகிறோம். நீயும் போட்டுவிடு...” என்று ரயிலடியில் பார்த்த பெண் தமிழில் உரக்கச் சொல்கிறாள்.