பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


இரண்டு நாட்களில் பாண்டிச்சேரியில் நாடகம் தொடங்கியது. வருவாயும் சுமாராக இருந்தது. விளக்கு அணையும்போது ஒளி விடுவது இயற்கையல்லவா? அதைப்போலச் சுவாமிகளுக்கு ஒரு நாள் திடீரென்று, பக்கவாதத்தினால் முடக்கப்பட்டிருந்த காலும் கையும், நிமிர்ந்து நின்றன. ஒரு சில நிமிடங்கள்தான். மீண்டும் பழைய நிலையையே அடைந்தார். இறுதி நாட்களில் சுவாமிகள் பட்ட கஷ்டத்தை எடுத்துச் சொல்வதே கடினம். எல்லாம் படுக்கையிலேதாம் நடைபெற்றன. கோட்டயம் கோபாலபிள்ளையும், பாண்டிச்சேரி குப்புசாமியும் ஒரு குழந்தையைக் காத்துப் பராமரிப்பது போல் சுவாமிகளுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தார்கள். அவ்விரு பணியாளர்களின் உண்மையான சேவையை எல்லோரும் புகழ்ந்தார்கள்.

பருவுடல் மறைந்தது.

1922 நவம்பர் 13 ஆம் நாள், சுவாமிகளின் நிலை நெருக்கடி யாய் விட்டது. எல்லோரும் பதறினார்கள். அன்று திங்கட்கிழமை. சுவாமிகளுக்கு மிகவும் பிடித்தமான புனித நாள். வழக்கம் போல் பஜனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு, சுவாமிகளின் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

தமிழ் நாடகத்தாய் பெறற்கரிய புதல்வனை இழந்தாள்; தமிழ் நடிகர்கள் தங்கள் தந்தைக்கொப்பான பேராசிரியரை இழந்தனர்; கலையுலகம் ஓர் ஒப்பற்ற மாமேதையை இழந்து கண்ணிர் வடித்தது.

தமிழ் நாடக உலகின் தலைமையாசிரியராகவும், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியராகவும் விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தமது பருவுடலை விட்டுப் புகழுடம்பை யடைந்தார். 1867ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலே பிறந்த அப் பெருமகனார், 1922-இல் பாண்டிச்சேரியிலே சமாதியடைந்தார்.

மறுநாள் காலை சுவாமிகளின் சடலத்துடன் புகைப்படம் எடுக்கப் பெற்றது. குழுவினரோடு எடுத்த படத்தில் தம்பி பகவதி நிற்கப் பயந்து மறுத்து விட்டான். அப்போது பகவதிக்கு நான்கு வயதிருக்கும். பிறகு பூஜைக்குரிய முறையில் சுவாமிகளைத்